அப்போஸ்தலருடைய நடபடிகள் 8
8
1இப்படியாக, ஸ்தேவான் கொலை செய்யப்படுவதற்கு சவுலும் உடன்பாடாக இருந்தான்.
திருச்சபை சிதறடிக்கப்படுதல்
அந்த நாளிலே, எருசலேமில் இருந்த திருச்சபைக்கு எதிராக மிகுந்த துன்புறுத்தல் ஏற்பட்டது. இதனால், அப்போஸ்தலர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் யூதேயாவின் நாட்டுப் புறங்களுக்கும், சமாரியாவுக்கும் சிதறிப் பரவினார்கள். 2இறைபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை அடக்கம் பண்ணி, அவனுக்காக ஒப்பாரி வைத்து துக்கம் அனுஷ்டித்தார்கள். 3ஆனால் சவுலோ திருச்சபைக்குப் பாரிய சேதம் ஏற்படுத்தத் தொடங்கினான். அவன் வீடுவீடாகச் சென்று, ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான்.
சமாரியாவில் பிலிப்பு
4எருசலேமிலிருந்து சிதறிப் பரவியவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள். 5பிலிப்பு சமாரியாவிலுள்ள பட்டணத்திற்குப் போய், அங்கே கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்தினான். 6கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டு அவன் செய்த அற்புத அடையாளங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் சொன்னவற்றை அவர்கள் எல்லோரும் கவனமாய்க் கேட்டார்கள். 7அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக் கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும், கால் ஊனமுற்றோர்களும் குணமடைந்தார்கள். 8இதனால் அந்தப் பட்டணத்திலே மிகுந்த மனமகிழ்ச்சி உண்டாயிற்று.
மந்திரவாதியான சீமோன்
9சீமோன் என்னும் பெயருடைய ஒருவன் சில காலமாக அந்தப் பட்டணத்தில் மந்திரவித்தை செய்து சமாரியாவிலுள்ள மக்களையெல்லாம் வியக்கப் பண்ணிக்கொண்டிருந்தான். அவன் தன்னை ஒரு பெரிய மனிதனாகக் காட்டிக் கொண்டான். 10இதனால் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமான எல்லா மக்களும் அவன் சொல்வதைக் கவனமாய் கேட்டு, “பெரும் வல்லமை என்று சொல்லப்படும் தெய்வீக வல்லமை இந்த மனிதனே” என்றார்கள். 11அவன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப் பண்ணினதால் அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். 12ஆனால் பிலிப்பு, இறைவனுடைய அரசைப் பற்றிய நற்செய்தியையும், இயேசு கிறிஸ்துவின் பெயரையும் குறித்துப் பிரசங்கித்தபோது அவர்கள் விசுவாசித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக ஞானஸ்நானம் பெற்றார்கள். 13சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்றான். அவன், தான் கண்ட பெரிதான அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும் வியப்புற்று, பிலிப்புவைப் பின்பற்றி எல்லா இடங்களுக்கும் சென்றான்.
14சமாரியாவிலுள்ளவர்கள் இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்கள் என எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டபோது, பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்பினார்கள். 15அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது, பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி அங்குள்ள மக்களுக்காக மன்றாடினார்கள். 16ஏனெனில், அதுவரை அவர்களில் எவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றிருக்கவில்லை. அவர்கள் ஆண்டவர் இயேசுவின் பெயரில் ஞானஸ்நானம் மட்டுமே பெற்றிருந்தார்கள். 17பேதுருவும் யோவானும் அவர்கள்மீது தங்கள் கைகளை வைத்து மன்றாடியபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள்.
18அப்போஸ்தலர்கள் கைகளை வைத்து மன்றாடும்போது பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதைக் கண்ட சீமோன், அப்போஸ்தலர்களுக்கு பணத்தைக் கொடுத்து, 19“நான் எவர்கள் மேல் கைகளை வைக்கிறேனோ, அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, எனக்கும் இந்த வல்லமையைத் தாருங்கள்” என்று கேட்டான்.
20அப்போது பேதுரு அவனிடம், “இறைவனுடைய நன்கொடையைப் பணத்தினால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உனது பணம் உன்னுடனேயே அழிந்து போகட்டும்! 21இந்த ஊழியத்திலே உனக்கு எந்தவித பங்கும் இல்லை, பாகமும் இல்லை. உனது இருதயம் இறைவனுக்கு முன்பாக நீதியாய் இருக்கவில்லையே. 22எனவே, இந்தத் தீமையைவிட்டு நீ மனந்திரும்பி, கர்த்தரிடம் மன்றாடு. நீ உன் இருதயத்தில் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பதை ஒருவேளை அவர் மன்னிப்பார். 23ஏனெனில் நீ மிகக் கசப்பான பொறாமை கொண்டவனாகவும் பாவத்தின் பிடியில் சிக்கியவனாகவும் இருப்பதை நான் காண்கின்றேன்” என்றான்.
24அப்போது சீமோன், “நீங்கள் சொன்னது ஒன்றும் எனக்கு நடக்காதபடி கர்த்தரிடம் எனக்காக மன்றாடுங்கள்” என்றான்.
25பேதுருவும், யோவானும் சாட்சி கூறி கர்த்தரின் வார்த்தையையும் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் சமாரியரின் பல கிராமங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டு, எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள்.
பிலிப்புவும் எத்தியோப்பியனும்
26கர்த்தரின் தூதன் பிலிப்புவிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார். இது ஒரு வனாந்தரப் பகுதி. 27எனவே அவன் புறப்பட்டுப் போய், அண்ணகனாய் இருந்த ஒரு எத்தியோப்பியனை வழியிலே சந்தித்தான். இவன் எத்தியோப்பியரின் அரசியான கந்தாகே என்பவளின் எல்லாச் சொத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்த ஒரு முக்கிய அதிகாரி. இந்த எத்தியோப்பியன் வழிபடுவதற்காக எருசலேமுக்குச் சென்றிருந்தான். 28இவன் தனது வீட்டிற்குத் திரும்பிப் போகின்ற பயணத்திலே தனது தேரில் உட்கார்ந்து இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தான். 29பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்த தேரை நோக்கிப் போய், அதனுடன் இணைந்துகொள்” என்றார்.
30அவ்விதமாக, பிலிப்பு ஓடிச் சென்று அதனுடன் இணைந்து கொண்டபோது, அந்த அதிகாரி இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பது கேட்டது. அப்போது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பது உனக்குப் புரிகிறதா?” எனக் கேட்டான்.
31அதற்கு அவன், “யாராவது அதை எனக்கு விபரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி புரியும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான்.
32அந்த அதிகாரி வாசித்துக் கொண்டிருந்த வேதவசனப் பகுதியில்,
“அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் செம்மறியாட்டைப் போல் இருந்தார்.
முடி கத்தரிக்கின்றவனின் முன்னால் மௌனமாய் நிற்கும் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல,
அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
33அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
அவருடைய வழித்தோன்றலைக் குறித்து யாரால் என்ன சொல்ல முடியும்?
அவருடைய உயிர், பூமியிலிருந்து எடுக்கப்பட்டு விட்டதே”#8:33 ஏசா. 53:7,8
என்றிருந்தது.
34அந்த அதிகாரி பிலிப்புவிடம், “இறைவாக்கினர் யாரைக் குறித்து இதைச் சொல்கின்றார்? தம்மைக் குறித்தா, அல்லது வேறு ஒருவரைக் குறித்தா? தயவுசெய்து எனக்குச் சொல்லும்” என்றான். 35அப்போது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியிலிருந்து பேச ஆரம்பித்து, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான்.
36அவர்கள் பயணிக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்போது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கின்றது. நான் ஏன் ஞானஸ்நானம் பெறக் கூடாது?” என்றான். 37அதற்குப் பிலிப்பு, “நீ உனது முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளலாம்” என்றான். அதற்கு அந்த அதிகாரி, “இயேசு கிறிஸ்து இறைவனுடைய மகன் என்று நான் விசுவாசிக்கின்றேன்” என்றான்.#8:37 சில மூலபிரதிகளில் 37ஆம் வசனம் காணப்படுவதில்லை. 38எனவே அவன் தேரை நிறுத்தும்படி உத்தரவிட்டான். பிலிப்புவும் அந்த அதிகாரியும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான். 39அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, கர்த்தரின் ஆவியானவர் உடனடியாக பிலிப்புவை அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார். அதன்பின் அந்த அதிகாரி பிலிப்புவைக் காணவில்லை. ஆயினும், அவன் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றான். 40பிலிப்புவோ ஆசோத்திலே காணப்பட்டான். அவன் அங்கிருந்து பிரயாணம் செய்து, எல்லாப் பட்டணங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டு செசரியாவைச் சென்றடைந்தான்.
Currently Selected:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.