YouVersion Logo
Search Icon

அப்போஸ்தலருடைய நடபடிகள் 6

6
உதவி ஊழியர் நியமிக்கப்படுதல்
1அந்நாட்களில் சீடர்களின் எண்ணிக்கை பெருகியபோது, அவர்களுள் கிரேக்க மொழி பேசும் யூதர்கள், தமது விதவைகள் அன்றாட உணவுப் பகிர்வில் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்று எபிரேய மொழி பேசும் யூதருக்கு எதிராக குறை கூறி முணுமுணுத்தார்கள். 2அப்போது பன்னிரண்டு அப்போஸ்தலர்களும், சீடர்கள் எல்லோரையும் ஒன்றாகக் கூட்டி, “அப்போஸ்தலர்களாகிய நாங்கள் இறைவனுடைய வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தில் முழுக் கவனத்தையும் செலுத்தாமல், உணவுப் பந்தியில் பணி செய்வது சரியானது அல்ல. 3சகோதரரே, ஆதலால் உங்கள் மத்தியிலிருந்து ஆவியானவரினாலும், ஞானத்தினாலும் நிறைந்தவர்களான அனைவரதும் நற்சான்று பெற்ற ஏழு பேரை தேர்வுக்குட்படுத்தி கவனமாகத் தெரிவு செய்யுங்கள். உணவுப் பகிர்வை செவ்வனே நிறைவேற்றுவதற்ககென அவர்களை நாங்கள் நியமிப்போம். 4நாங்களோ மன்றாடுவதற்கும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியத்தைச் செய்வதற்கும் எங்கள் முழு நேரத்தையும் அர்ப்பணிப்போம்” என்றார்கள்.
5அவர்கள் சொன்னது, அங்கு கூடியிருந்த அனைவருக்கும் திருப்தியளித்தது. எனவே அவர்கள் விசுவாசத்திலும், பரிசுத்த ஆவியானவரிலும் நிறைந்தவனான ஸ்தேவானைத் தெரிவு செய்தார்கள். அவனுடன் பிலிப்பு, பிரொகோர், நிக்கானோ, தீமோன், பர்மெனா ஆகியோரையும், யூத மார்க்கத்தைத் தழுவியிருந்த அந்தியோகியனான நிக்கொலாவையும் தெரிவு செய்தார்கள். 6பின்பு அவர்களை அப்போஸ்தலர்களுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். அப்போஸ்தலர்கள் அவர்களுக்காக மன்றாடி, அவர்கள்மீது தங்கள் கைகளை வைத்து அவர்களை நியமித்தார்கள்#6:6 நியமித்தார்கள் – கிரேக்க மொழியில் கைகளை வைத்து என்றுள்ளது. அதன் அர்த்தம் நியமித்தார்கள் என்பதாகும்.
7இறைவனுடைய வார்த்தை தொடர்ந்து பரவியது. சீடருடைய தொகையும் எருசலேமில் வெகுவாய்ப் பெருகியது, அநேக மதகுருக்களும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படிந்தார்கள்.
ஸ்தேவான் கைது செய்யப்படல்
8அந்நாட்களில் ஸ்தேவான், இறைவனின் கிருபையும் வல்லமையும் நிறைந்தவனாக, மக்கள் மத்தியில் பெரிதான அதிசயங்களையும், அற்புத அடையாளங்களையும் செய்து கொண்டிருந்தான். 9ஆயினும், “சுதந்திரம் பெற்றவர்களின் யூத ஜெபஆலயம்” என்ற பிரிவைச் சேர்ந்தவர்களிடமிருந்து எதிர்ப்பு வந்தது. அவர்கள் சிரேனே, அலெக்சந்திரியா, சிலிசியாவின் மாகாணங்கள், ஆசியா ஆகிய இடங்களைச் சேர்ந்த யூதர்களாய் இருந்தார்கள். அந்த மனிதர்கள் ஸ்தேவானுடன் விவாதம் செய்யத் தொடங்கினார்கள். 10ஆனால், அவனிடமிருந்த ஞானத்தின் காரணமாகவும், அவன் பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசியதனாலும் அவர்களால் அவனை எதிர்த்து நிற்க முடியவில்லை.
11எனவே அவர்கள் இரகசியமாக சிலரைத் தூண்டிவிட்டு, “இவன் மோசேக்கும் இறைவனுக்கும் விரோதமாக, அவர்களை நிந்தித்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் சொன்னார்கள்.
12இப்படியாக, அவர்கள் மக்களையும், சமூகத் தலைவர்களையும், நீதிச்சட்ட ஆசிரியர்களையும் ஸ்தேவானுக்கு எதிராகக் தூண்டிவிட்டார்கள். அதன்பின்பு அவர்கள் திடீரென வந்து, ஸ்தேவானைப் பிடித்து நியாயசபைக்கு முன்பாக அவனைக் கொண்டுவந்தார்கள். 13அவர்கள் பொய்ச் சாட்சி கூறும்படி சிலரை ஏற்படுத்தினார்கள். அவ்விதம் ஏற்படுத்தப்பட்டவர்கள் “இவன் இந்தப் பரிசுத்த இடத்திற்கும், நீதிச்சட்டத்திற்கும் விரோதமாய் பேசுகின்றதை நிறுத்துவதாக இல்லை. 14நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்றும், மோசே நமக்குக் கையளித்த நடைமுறைகளை மாற்றுவார் என்றும் இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள்.
15அந்த நியாயசபையில் இருந்த எல்லோரும், ஸ்தேவானை உற்று நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் அவனுடைய முகம், ஒரு இறைதூதனுடைய முகத்தைப் போல் பிரகாசிப்பதை அவர்கள் கண்டார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in