அப்போஸ்தலருடைய நடபடிகள் 2
2
பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் இறங்குதல்
1பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் ஒன்றுகூடி இருந்தார்கள். 2அப்போது திடீரென, பலத்த காற்று வீசுவது போன்ற ஒரு சத்தம் வானத்திலிருந்து வந்து, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3அவர்கள் நெருப்புப் போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை, அவர்கள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தன. 4அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.
5அந்நாட்களில், இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள், உலகில்#2:5 உலகில் – கிரேக்க மொழியில் வானத்தின் கீழுள்ள என்றுள்ளது. உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் வந்து, எருசலேமில் தங்கியிருந்தார்கள். 6அவர்கள் அந்த சத்தத்தைக் கேட்டு, பெருங்கூட்டமாய் அங்கே வந்தபோது, தங்களுடைய சொந்த மொழிகளில் விசுவாசிகள்#2:6 விசுவாசிகள் – கிரேக்க மொழியில் அவர்கள் என்றுள்ளது. அப்போஸ்தலர்கள் என்றும் கருதலாம். ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள். 7அவர்கள் முற்றிலும் வியப்படைந்து, “இங்கு பேசிக் கொண்டிருக்கின்ற இவர்கள் எல்லோரும் கலிலேயர் அல்லவா? 8அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கின்றோமே, அது எப்படி? 9பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும் மற்றும் மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, 10பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லிபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும், 11இன்னும் யூதரும், யூத மார்க்கத்தைத் தழுவியவர்களும், அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாங்கள் எல்லோரும், நமது மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கின்றோமே!” என்றார்கள். 12அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள்.
13ஆயினும் சிலர், விசுவாசிகளைக் குறித்து கேலி செய்து, “இவர்கள் அதிக திராட்சை ரசம் குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.
பேதுரு உரையாற்றுதல்
14அப்போது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூத மக்களே! எருசலேமில் வாழ்கிறவர்களே! உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்கின்றேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள். 15இந்த மனிதர்கள் நீங்கள் நினைப்பது போல் குடிபோதையில் இருப்பவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே! 16இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டதே இப்பொழுது நிறைவேறுகிறது:
17“ ‘இறைவன் சொன்னதாவது,
கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்.
அப்போது உங்கள் மகன்களும், மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்.
உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள்.
உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
18அந்நாட்களில் எனது ஊழியர்களான ஆண்கள் மேலும் பெண்கள் மேலும்
என்னுடைய ஆவியை ஊற்றுவேன்,
அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.
19மேலே உள்ள வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன்.
கீழே உள்ள பூமியில் அடையாளங்களாக இரத்தத்தையும், நெருப்பையும்,
புகை மண்டலங்களையும் காட்டுவேன்.
20சூரியன் இருண்டு போகும்;
சந்திரன் இரத்தமாக மாறும்.
பெரிதானதும், மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே இவை நிகழும்.
21அப்போது கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுகின்ற
ஒவ்வொருவனும் இரட்சிக்கப்படுவான்.’#2:21 யோவே. 2:28
22“சக இஸ்ரயேல் மனிதரே, இதைக் கேளுங்கள்: நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவைக்கொண்டு, இறைவன் உங்கள் மத்தியில் செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்கள் ஆகியவற்றினால் அவர் இறைவனால் அத்தாட்சி பெறப்பட்ட ஒருவர் என்பதை நிரூபித்தார். இது நீங்கள் அறிந்ததே. 23இறைவன் தாம் தீர்மானித்த நோக்கத்திற்கும், தமது முன்னறிவுக்கும் இணங்க, அவரை உங்களிடம் கையளித்தார். நீங்களோ யூதரல்லாத கொடிய மனிதரின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலை செய்தீர்கள். 24ஆனால் இறைவனோ, அவரைச் சுற்றியிருந்த, மரணத்தின் பெரும் வேதனைக் கட்டுகளை நீக்கி, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில் அவரைப் பிடித்து வைத்திருக்கக்கூடிய வல்லமை மரணத்திற்கு இல்லை. 25தாவீது அவரைக் குறித்து கூறியிருப்பது:
“ ‘நான் கர்த்தரை எனக்கு முன்பாக எப்போதும் கண்டேன்.
அவர் எனது வலது பக்கத்தில் இருக்கின்றபடியால்
நான் அசைக்கப்பட மாட்டேன்.
26அதனால் என் இருதயம் சந்தோஷத்தால் பூரித்து, என் நாவு பெருமகிழ்ச்சியடைகிறது.
என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.
27ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிட மாட்டீர்.
உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்.
28நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர்.
உமது பிரசன்னத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’#2:28 சங். 16:8-11
என்பதே.
29“சகோதரரே! இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றேன். நமது முற்பிதாவான தாவீது மரணித்து அடக்கம் பண்ணப்பட்டாரே. அவரது கல்லறையும், இந்நாள்வரை இங்கே இருக்கின்றதே. 30ஆனாலும் தாவீது ஒரு இறைவாக்கினன். ஆதலால், தனது வழித்தோன்றல்களில் ஒருவரை, தனது அரியணையில் இறைவன் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அறிந்திருந்தார். 31நிகழப்போவதை அவர் முன்னரே கண்டு, மேசியாவின் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பேசினார். அதனாலேயே மேசியா கல்லறையில் கைவிடப்படுவதில்லை என்றும், மேசியாவின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னார். 32இயேசுவை இறைவன் உயிர் பெற்றெழச் செய்தார். அதற்கு நாங்கள் எல்லோரும் சாட்சிகளாய் இருக்கின்றோம். 33அவர் இறைவனின் வலது பக்கத்தில் மேன்மை பெற்றவராய் உயர்த்தப்பட்டு, பிதா வாக்குறுதி அளித்த பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்போது காண்கின்றபடியும் கேட்கின்றபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை எம்மீது ஊற்றியிருக்கிறார். 34தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆயினும் அவர்,
“ ‘கர்த்தர் என் ஆண்டவரிடம், சொன்னதாவது:
எனது வலது பக்கத்தில் உட்காரும்,
35நான் உமது பகைவரை உமது கால்களுக்கு பாதபடி ஆக்கும்வரை அமர்ந்திரும்’#2:35 சங். 110:1
என்றாரே.
36“ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் எல்லோரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இயேசுவையே இறைவன், ஆண்டவரும் மேசியாவுமாக ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான்.
37அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலர்களையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்றார்கள்.
38அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி,#2:38 கிரேக்க மூலமொழியில் மனந்திரும்பி என்ற சொல்லின் அர்த்தம் பாவத்தைவிட்டு மனம் வருந்தி, மனந்திரும்பி இறைவனிடம் திரும்பு என்பதாகும். இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள். 39இந்த வாக்குறுதி உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள எல்லோருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப் போகின்ற எல்லோருக்கும் இது உரியது” என்றான்.
40அவன், இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்த கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை வேண்டிக்கொண்டான். 41பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட எல்லோரும் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றைய தினம் திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.
விசுவாசிகளின் ஐக்கியம்
42அவர்கள் அப்போஸ்தலர்களுடைய கற்பித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பகிர்ந்து உண்ணுதலுக்கும், மன்றாடுதலுக்கும் தங்களை இடைவிடாது அர்ப்பணித்தவர்களாய் இருந்தார்கள். 43எல்லோரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள், அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன. 44விசுவாசிகள் எல்லோரும் ஒன்றிணைந்து இருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக் கொண்டார்கள். 45அவர்கள் தங்கள் சொத்துக்களையும் பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய்க் கொடுத்தார்கள். 46ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகளில் தங்களுக்குள் அப்பத்தைப் பங்கிட்டுக்#2:46 லூக். 22:19 ஆண்டவர் இயேசு ஏற்படுத்திய திருவிருந்தை அவர்கள் கைக்கொண்டதைக் குறிப்பதாகவும் இது இருக்கலாம். கொண்டார்கள். அவர்கள் கபடமற்ற உள்ளத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய் சாப்பிட்டார்கள். 47அவர்கள் இறைவனைத் துதிக்கின்றவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகின்றவர்களை கர்த்தர் அவர்களுடன் சேர்த்ததால், அவர்களது எண்ணிக்கை பெருகிற்று.
Currently Selected:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.