அப்போஸ்தலருடைய நடபடிகள் 13
13
1அந்தியோகியாவில் இருந்த திருச்சபையிலே பர்னபா, நீகர்#13:1 நீகர் – கருமை நிறமானவன் என்று பொருள் எனப்பட்ட சிமியோன், சிரேனேயைச் சேர்ந்த லூகி, இளவரசன் ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோர் இறைவாக்கினரும் ஆசிரியர்களுமாக இருந்தார்கள். 2அவர்கள் கர்த்தரை வழிபட்டும்#13:2 வழிபட்டும் – கர்த்தருக்குப் பணிசெய்தும் என்றும் இதை மொழிபெயர்க்கலாம். உபவாசித்தும் இருந்தபோது பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “பர்னபாவையும் சவுலையும், நான் அழைத்த ஊழியத்திற்காக எனக்கென வேறுபிரித்து விடுங்கள்” என்றார். 3எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடிய பின் தங்கள் கைகளை அந்த இருவர் மேலும் வைத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
சீப்புரு தீவுக்குப் பிரயாணம்
4அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு செலூக்கியாவுக்குப் போய், அங்கிருந்து கப்பல் மூலமாக சீப்புரு தீவுக்குப் போனார்கள். 5அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது அங்குள்ள யூத ஜெபஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களின் உதவியாளனாய் அவர்களோடு இருந்தான்.
6அவர்கள் அந்தத் தீவு முழுவதும் பிரயாணம் செய்து, பாப்போ பட்டணத்திற்கு வந்தார்கள். அங்கே அவர்கள் ஒரு யூத மந்திரவாதியும், போலி இறைவாக்கினனுமான பர்யேசு என்னும் ஒரு மனிதனைச் சந்தித்தார்கள். 7அவன், செர்கியு பவுல் என்ற ஆளுநருடன் இருந்த ஒருவன். அறிவாற்றல் உள்ளவனான அந்த அதிபதி, இறைவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பியதால், பர்னபாவையும் சவுலையும் அழைத்து வர ஆளனுப்பினான். 8ஆனால் மந்திரவாதி எலிமா#13:8 எலிமா – பர்யேசு என்ற பெயரின் கிரேக்கப் மொழியாக்கம். அவர்களை எதிர்த்து நின்று அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடை செய்ய முயற்சித்தான். (எலிமா என்றால், மந்திரவாதி என்று அர்த்தம்.) 9அப்போது பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, எலிமாவை நேரே உற்றுப் பார்த்துச் சொன்னதாவது, 10“பிசாசின் பிள்ளையே, நீதியான எல்லாவற்றிற்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும், தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நீதியான வழிகளைப் புரட்டுவதை, நீ ஒருபோதும் நிறுத்த மாட்டாயோ? 11இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கின்றது. நீ இப்போது பார்வையற்றவனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காண மாட்டாய்” என்றான்.
உடனே அவன் பார்வை மங்கி, இருள் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன்னைக் கைப்பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான். 12நடந்ததை அந்த அதிபதி கண்டபோது அவன் கர்த்தருடைய போதனையைக் குறித்து வியப்படைந்து விசுவாசித்தான்.
பிசிதியாவிலுள்ள அந்தியோகியாவில் பவுல்
13பாப்போ பட்டணத்திலிருந்து, பவுலும் அவனுடன் இருந்தவர்களும் கப்பல் மூலமாய் பம்பிலியாவிலுள்ள பெர்கேவுக்குப் போனார்கள். யோவான் எருசலேமுக்குத் திரும்பிச் செல்வதற்காக அங்கிருந்து அவர்களைவிட்டுச் சென்றான். 14அவர்கள் பெர்கேவிலிருந்து பிசீதியாவைச் சேர்ந்த அந்தியோகியாவுக்குப் போனார்கள். ஒரு ஓய்வுநாளிலே அவர்கள் ஜெபஆலயத்திற்குள்ளே போய் உட்கார்ந்தார்கள். 15நீதிச்சட்டமும் இறைவாக்குகளும் வாசிக்கப்பட்ட பின்பு ஜெபஆலயத் தலைவர்கள் அவர்களுக்குச் செய்தி அனுப்பி, “சகோதரரே, உங்களிடம் மக்களை உற்சாகப்படுத்தக் கூடிய செய்தி ஏதும் இருந்தால் பேசுங்கள்” என்றார்கள்.
16பவுல் எழுந்து நின்று, தன் கையால் அவர்களுக்கு சைகை காட்டிவிட்டுச் சொன்னதாவது: “இஸ்ரயேல் மனிதரே, இறைவனுக்குப் பயப்படுகின்ற மற்றவர்களே#13:16 இறைவனுக்குப் பயப்படுகின்ற மற்றவர்களே என்பது யூத மதத்தை தழுவிய யூதரல்லாத பிற இனத்தவர்கள், நான் சொல்வதைக் கேளுங்கள். 17இஸ்ரயேல் மக்களின் இறைவன், நமது முற்பிதாக்களைத் தெரிவு செய்தார். அவர் அந்த மக்களை அவர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலத்தில் செழிப்படையச் செய்தார். பின்பு அவர் தம்முடைய மிகுந்த வல்லமையினால் அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார். 18ஏறக்குறைய நாற்பது வருடங்களாக பாலைநிலத்திலே அவர்களை சகித்துக் கொண்டார்#13:18 சகித்துக் கொண்டார் – சில மூலப் பிரதிகளில் பராமரித்துக் கொண்டார் என்றுள்ளது. 19கானானில் இருந்த ஏழு இனத்தவர்களை அழித்து, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்தார். 20இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் எடுத்தன.
“இதற்குப் பின், இறைவாக்கினன் சாமுவேலின் காலம் வரைக்கும் இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார். 21பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு அரசனைத் தரும்படி கேட்டார்கள். அப்போது அவர் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசின் மகனான சவுலை அவர்களுக்கு அரசனாகக் கொடுத்தார். அவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி செய்தான். 22அவர் சவுலை நீக்கியபின், தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார். அவர் தாவீதைக் குறித்து சாட்சியாக, ‘ஈசாயின் மகனான தாவீது, என் இருதயத்திற்கு உகந்த மனிதனாய் இருப்பதை நான் கண்டேன். அவன் எவற்றை செய்ய வேண்டும் என்று நான் விரும்புகின்றேனோ அவை எல்லாவற்றையும் அவன் செய்வான்’ என்று சொன்னார்.
23“இந்த தாவீதினுடைய வழித்தோன்றல்களிலிருந்தே தாம் வாக்குறுதி அளித்தபடி, இயேசு என்னும் இரட்சகரை இறைவன் இஸ்ரயேலுக்கு அளித்தார். 24இயேசுவின் வருகைக்கு முன்னதாக மனந்திரும்புதலைக் குறித்தும் ஞானஸ்நானத்தைக் குறித்தும் எல்லா இஸ்ரயேல் மக்களுக்கும் யோவான் பிரசங்கித்தான். 25யோவான் தனது ஊழியத்தை நிறைவேற்றியபோது, அவன் சொன்னதாவது: ‘நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர் அல்ல. அவர் எனக்குப் பின் வருகின்றார். அவரது காலணிகளைச் சுமப்பதற்கும் நான் தகுதியற்றவன்.’
26“சகோதரரே, ஆபிரகாமின் பிள்ளைகளே, இறைவனுக்குப் பயந்து நடக்கின்ற யூதரல்லாத மக்களே, இந்த இரட்சிப்பின் செய்தி நமக்கே அனுப்பப்பட்டிருக்கிறது. 27எருசலேமின் மக்களும், அவர்களுடைய ஆளுநர்களும் இயேசுவை யாரென அறியாதிருந்தனர். ஆயினும் அவருக்கு மரணதண்டனையைக் கொடுத்ததன் மூலமாக ஒவ்வொரு ஓய்வுநாளிலும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட்டார்கள். 28அவருக்கு மரணதண்டனை கொடுக்கக் கூடிய தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காத போதும், அவருக்கு மரணத்தீர்ப்பே கொடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள். 29அவரைக் குறித்து எழுதியிருப்பதையெல்லாம் அவர்கள் செய்து முடித்த பின்பு அவருடைய உடலை சிலுவை#13:29 சிலுவை – கிரேக்க மொழியில் மரத்தில் என்று உள்ளது. மரத்திலிருந்து கீழே இறக்கி, அதைக் கல்லறையில் வைத்தார்கள். 30ஆனால் இறைவனோ அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார். 31கலிலேயாவிலிருந்து தம்முடன் எருசலேம் வரை வந்திருந்தவர்களுக்கு இயேசு பல நாட்கள் தென்பட்டார். அவர்கள் இன்று நமது மக்களுக்கு சாட்சிகளாய் இருக்கின்றார்கள்.
32“நாங்கள் உங்களுக்கு சொல்லும் நற்செய்தி என்னவெனில், இறைவன் நமது முற்பிதாக்களுக்கு வாக்குறுதி அளித்ததை, 33இயேசுவை உயிருடன் எழுப்பியதன் மூலமாக அவருடைய பிள்ளைகளாகிய நமக்கென்று நிறைவேற்றியிருக்கிறார். இதை பற்றியே இரண்டாம் சங்கீதத்தில் இப்படியாக எழுதப்பட்டுள்ளது:
“ ‘நீர் என்னுடைய மகன்;
இன்று நான் உமக்குத் தந்தையானேன்.’#13:33 சங். 2:7
34ஆனால் அவரை இனி ஒருபோதும் அழிவுக்குட்படுத்தாதபடி, இறைவன் அவரை இறந்தோரிலிருந்து உயிரோடு எழுப்பியதைக் குறித்தோ வேதவசனங்களில்:
“ ‘தாவீதுக்கு வாக்குறுதி செய்யப்பட்ட பரிசுத்தமானதும், நிச்சயமானதுமான ஆசீர்வாதங்களை நான் உங்களுக்குத் தருவேன்.#13:34 ஏசா. 55:3’
என இறைவன் செல்லியிருக்கிறார்.
35அப்படியே இது இன்னுமொரு இடத்தில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கின்றது:
“ ‘உமது பரிசுத்தர் அழிவைக் காண நீர் விடமாட்டீர்.’#13:35 சங். 16:10
36“தாவீதோ இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தபோது, அவர் மரணித்தாரே#13:36 மரணித்தாரே – கிரேக்க மொழியில் நித்திரையடைந்தாரே; அவர் தனது முற்பிதாக்களுடன் அடக்கம் பண்ணப்பட்டு, அவரது உடலும் அழிந்து போனது. 37ஆனால் மரணித்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்ட இயேசுவோ#13:37 இயேசுவோ – கிரேக்க மொழியில் எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.
38“ஆகையால் என் சகோதரரே, ‘இயேசுவின் மூலமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டு’ என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்பதை, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். 39மோசேயினுடைய நீதிச்சட்டத்தின் மூலமாய் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலையாக்கப்பட்டு, நீதிமான்கள் ஆக்கப்பட முடியாதிருந்த ஒவ்வொருவரும் இயேசுவை விசுவாசிப்பதன் மூலமாய் நீதிமான்களாக ஆக்கப்படுகிறார்கள். 40ஆயினும் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள்:
41“ ‘ஏளனம் செய்வோரே, பாருங்கள்!
நீங்கள் அதிசயப்படுங்கள்,
ஒழிந்து போங்கள். ஏனெனில் உங்கள் நாட்களிலே நான் ஒரு காரியத்தைச் செய்யப் போகின்றேன்.
அந்தக் காரியத்தைப்பற்றி யாராவது உங்களுக்குச் சொன்னாலும்
நீங்கள் ஒருபோதும் அதை நம்ப மாட்டீர்கள்’ ”#13:41 எபி. 1:5
என்று பவுல் சொன்னான்.
42பவுலும் பர்னபாவும் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டபோது, இந்தக் காரியங்களைக் குறித்து அடுத்த ஓய்வுநாளிலேயும் பேசும்படி மக்கள் அவர்களை அழைத்தார்கள். 43கூடியிருந்த மக்கள் கலைந்து போன பின் அநேக யூதர்களும், யூத மார்க்கத்தைத் தழுவிய பக்தியுள்ளோரும் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். பவுலும் பர்னபாவும் தங்களோடு வந்தவர்களுடன் பேசி அவர்களை இறைவனுடைய கிருபையில் தொடர்ந்து இருக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள்.
44அடுத்த ஓய்வுநாளிலே ஏறக்குறைய பட்டணத்திலுள்ள எல்லோரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்பதற்குக் கூடியிருந்தார்கள். 45மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருப்பதை யூதர்கள் கண்டபோது பொறாமையினால் நிறைந்து பவுலை நிந்தித்துப் பேசி பவுல் கூறியவற்றுக்கு எதிராகப் பேசத் தொடங்கினார்கள்.
46அப்போது பவுலும் பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் முதலாவதாக உங்களுக்கே அறிவிக்க வேண்டும் என்ற அவசியம் இருக்கின்றது. ஆனால் நீங்கள் அதனை நிராகரித்து, நித்திய வாழ்வுக்கு நீங்கள் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருப்பதனால், நாங்கள் திசைமாறி இப்போது யூதரல்லாத மக்களிடம் போகின்றோம். 47ஏனெனில்,
“ ‘பூமியின் கடைமுனை வரையிலுள்ள அனைவருக்கும் என் இரட்சிப்பைக் கொண்டுசெல்லும்படி,
நான் உன்னை யூதரல்லாத மக்களுக்கு ஒரு வெளிச்சமாக ஏற்படுத்தியிருக்கிறேன்’#13:47 ஏசா. 49:6
என்ற வசனத்தின்படி, கர்த்தர் எங்களுக்கு இதையே கட்டளையிட்டுள்ளார்” என்றார்கள்.
48யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள். நித்திய வாழ்வுக்காக நியமிக்கப்பட்ட எல்லோரும் விசுவாசித்தார்கள்.
49அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது. 50ஆனால் யூதர்களோ இறைவனுக்குப் பயந்து நடந்த உயர் மதிப்புக்குரிய பெண்களையும், அந்தப் பட்டணத்திலுள்ள முதன்மை வாய்ந்த மனிதர்களையும் தூண்டிவிட்டு பவுலுக்கும் பர்னபாவுக்கும் துன்புறுத்தலை ஏற்படுத்தி, அந்தப் பிரதேசத்திலிருந்து அவர்களைத் துரத்திவிட்டார்கள். 51எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக, தங்கள் காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குப் போனார்கள். 52சீடர்களோ மனமகிழ்ச்சியினாலும், பரிசுத்த ஆவியானவரினாலும் நிரப்பப்பட்டார்கள்.
Currently Selected:
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.