YouVersion Logo
Search Icon

2 தீமோத்தேயு 2

2
வேண்டுகோள் புதுப்பிக்கப்படல்
1ஆகையால் என் மகனே, கிறிஸ்து இயேசுவில் இருக்கும் கிருபையின் மூலமாக நீ பலமடைவாயாக. 2அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடம் கேட்டறிந்தவற்றை போதிக்கத் திறமையுடைய நம்பத்தகுந்த மனிதரிடத்தில் ஒப்படைத்து விடு. அவர்கள் அதை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். 3கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்வீரனாகத் துன்பங்களில் பங்கெடுத்துக்கொள். 4போர்வீரனாகப் பணி செய்யும் எவனும், வேறெந்த விவகாரங்களிலும்#2:4 வேறெந்த விவகாரங்களிலும் என்பது வேறு தொழில்களில் ஈடுபட மாட்டான். ஏனெனில் தனது அதிகாரியைப் பிரியப்படுத்துவதே அவனது நோக்கமாயிருக்கும். 5அதேபோல விளையாட்டுகளில் போட்டியிடும் எந்த வீரனாயினும் விதிமுறைகளைக் கைக்கொள்ளாவிட்டால் வெற்றிக் கிரீடத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டான். 6கடினமாய் உழைக்கும் விவசாயியே விளைச்சலின் பங்கைப் பெறுவதற்கு முதல் தகுதியுடையவன். 7நான் சொல்வதைச் சிந்தித்துப் பார், ஏனெனில் இவை எல்லாவற்றைக் குறித்தும் அறிந்துகொள்ள கர்த்தர் உனக்கு புரிந்துணர்வைத் தருவாராக.
8இயேசு கிறிஸ்துவை நினைவில் வைத்திரு. அவரே மரணித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்டவர், தாவீதின் சந்ததியில் வந்தவர். இதுவே நான் பிரசங்கிக்கும் நற்செய்தி. 9இதற்காகவே நான் ஒரு குற்றவாளியைப் போல் விலங்கினால் பிணைக்கப்பட்டு துன்பம் அனுபவித்து வருகின்றேன். ஆனால் இறைவனின் வார்த்தையோ விலங்கினால் கட்டப்படவில்லை. 10ஆகவே தெரிவு செய்யப்பட்டவர்கள், கிறிஸ்து இயேசுவின் மூலமாக கிடைக்கின்ற மீட்பை நித்திய மகிமையுடன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் சகித்து வருகின்றேன்.
11இது நம்பத்தகுந்த கூற்று:
அவரோடு நாம் இறந்துவிட்டால்,
அவரோடு நாம் வாழ்ந்திருப்போம்.
12துன்பங்களை நாம் சகிப்போமானால்,
அவருடன் நாம் ஆட்சியும் செய்வோம்.
கிறிஸ்துவை நாம் மறுதலிப்போமானால்,
அவரும் நம்மை மறுதலித்து விடுவார்.
13நாம் அவருக்கு உண்மை அற்றவர்களாய்ப் போனாலும்,
அவர் நமக்கு உண்மையுள்ளவராகவே இருக்கின்றார்.
ஏனெனில், அவர் தமது நிலையிலிருந்து தம்மை மாற்றிக்கொள்வதில்லை.#2:13 தம்மை மாற்றிக்கொள்வதில்லை – கிரேக்க மொழியில் அவர் தம்மைத் தாமே மறுதலிக்க முடியாது
தவறாகப் போதிப்பவர்களுக்கு முகங்கொடுத்தல்
14இதையெல்லாம் அவர்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இரு. வார்த்தைகளைக் குறித்து வாக்குவாதம் செய்ய வேண்டாமென இறைவனுக்கு முன்பாக அவர்களை எச்சரிக்கை செய். அப்படிப்பட்ட வாக்குவாதங்கள் கேட்கின்றவர்களைப் பாழாக்குமே அன்றி, அதனால் வேறு எவ்விதப் பயனும் இல்லை. 15நீயோ வெட்கப்படாத ஒரு வேலையாளாக, சத்திய வார்த்தையைச் சரியாகக் கையாளுகின்றவனாக, இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவனாக அவருக்கு முன்பாக நிற்பதற்கு உன்னால் முடிந்தளவு முயற்சி செய். 16இறைபக்தியில்லாத வீண் பேச்சைவிட்டு விலகு. ஏனெனில் அது மென்மேலும் இறைவனை மறுதலிப்பதற்கே மக்களை வழிநடத்தும். 17அவர்களின் போதனை சதையழுகல் நோயைப் போல பரவும். இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள். 18அவர்கள் சத்தியத்தைவிட்டு விலகிச் சென்று விட்டார்கள். உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டது எனச் சொல்லி சிலரது விசுவாசத்தைச் சீரழித்து வருகின்றார்கள். 19அப்படியிருந்தும் இறைவனின் உறுதியான அத்திவாரம் நிலைத்து நிற்கிறது: “தமக்குச் சொந்தமானவர்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்” என்றும், “கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற#2:19 கர்த்தரின் பெயரைச் சொல்லி அழைக்கின்ற – கர்த்தரை தனது ஆண்டவராக ஏற்றுக்கொண்டவர்கள் என்பது இதன் அர்த்தம். ஒவ்வொருவரும், அநீதியான செயல்களிலிருந்து கட்டாயம் விலகவேண்டும்” என்றும் அதில் முத்திரையாகப் பொறிக்கப்பட்டுள்ளது.
20ஒரு பெரிய வீட்டில் தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மட்டுமல்லாமல் மரப் பாத்திரங்களும் மண் பாத்திரங்களும் இருக்கின்றன. அவற்றில் சில உயர்வான நோக்கங்களுக்காகவும், சில தாழ்வான உபயோகத்துக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. 21எவராவது தாழ்வானவைகளிலிருந்து முழுவதும் சுத்திகரிக்கப்பட்டிருந்தால், அவர் உயர்வான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் பாத்திரமாக இருப்பார். அவர் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்கு உகந்தவராகவும், எந்த நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாக்கப்பட்டவராகவும் இருப்பார்.
22வாலிபப் பருவத்தின் தீய ஆசைகளைவிட்டு விலகி ஓடு. சுத்த இதயத்தோடு கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகின்றவர்களுடன் சேர்ந்து நீதி, விசுவாசம், அன்பு, சமாதானம் ஆகியவற்றை நாடித் தேடு. 23முட்டாள்தனமானதும், அறிவற்றதுமான விவாதங்களில் கலந்துகொள்ளாதே. ஏனெனில் அவை சண்டைகளையே ஏற்படுத்தும் என்பது உனக்குத் தெரியும். 24கர்த்தரின் ஊழியன் வாக்குவாதத்தில் ஈடுபடக் கூடாது. ஆனால், எல்லோரிடமும் அவன் தயவுள்ளவனாகவும், போதிக்கும் திறமையுள்ளவனாகவும், தீமையைச் சகிக்கின்றவனாகவும் இருக்க வேண்டும். 25இறைவன் ஒருவேளை அவர்களுக்கு மனந்திரும்புதலைக்#2:25 மனந்திரும்புதலை – கிரேக்க மூலமொழியில் இந்த சொல்லின் அர்த்தம் பாவத்தைவிட்டு மனம் வருந்தி, மனந்திரும்பி இறைவனிடம் திரும்பு என்பதாகும். கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன், எதிர்க்கின்றவர்களைக் கனிவுடன் அறிவுறுத்த வேண்டும். இந்த மனந்திரும்புதல் சத்தியத்தின் அறிவுக்கு வழிநடத்தி, 26அது அவர்களைத் தெளிந்த புத்தியுள்ளவர்களாக்கும். அப்போது, தனது திட்டத்தைச் செய்ய, பிசாசினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்ற அவர்கள் கண்ணிப் பொறியிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in