YouVersion Logo
Search Icon

2 தெசலோனிக்கேயர் 2

2
அக்கிரம மனிதன்
1பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையைக் குறித்தும், நாம் அவரிடத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதைக் குறித்தும் நாங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்வது இதுவேயாகும்: 2எங்களுடைய போதனை எனக் கூறி, “கர்த்தருடைய நாள் ஏற்கெனவே வந்துவிட்டது” என ஒரு இறைவாக்கு உரைக்கப்பட்டாலோ, வாய்மொழியாக அறிவிக்கப்பட்டாலோ, அல்லது எங்களுடைய கடிதத்தில் உள்ளது எனச் சொல்லப்பட்டாலோ அதைக் குறித்து நீங்கள் நிலைதடுமாறவோ, பீதியடையவோ வேண்டாம். 3எவரும் எந்த விதத்திலும் உங்களை ஏமாற்றுவதற்கு இடமளிக்க வேண்டாம். ஏனெனில், இறைவனுக்கு எதிரான பெரும் கலகம் ஏற்பட்டு, அக்கிரம மனிதன் வெளிப்படும் வரையில் அந்த நாள் வராது. அந்த மனிதனே அழிவுக்கு நியமிக்கப்பட்டவன். 4இறைவன் என்று அழைக்கப்படுகின்றதும், வழிபாட்டுக்குரியதுமான அனைத்தையும் எதிர்த்து, அவற்றுக்கு மேலாகத் தன்னை அவன் உயர்த்திக்கொள்வான். அதன்படி, இறைவனது ஆலயத்தில் இறைவனாக அமர்ந்திருந்து, தன்னை இறைவன் என பறைசாற்றிக்கொள்வான்.
5நான் உங்களுடன் இருந்தபோது இவற்றைக் குறித்து உங்களுக்குச் சொன்னது ஞாபகம் இல்லையா? 6அவனது ஏற்ற காலத்தில் அவன் வெளிப்படும்படி, அவனை இப்போது தடுத்து வைத்திருப்பது என்னவென்று உங்களுக்குத் தெரியும். 7ஏனெனில், இரகசியமாயிருக்கின்ற அந்த அக்கிரமம் ஏற்கெனவே செயற்படுகிறது. ஆனால் அதை இப்பொழுது தடுத்துக் கொண்டிருப்பவர், தாம் எடுத்துக்கொள்ளப்படும் வரை தொடர்ந்து அதைத் தடுத்துக் கொண்டே இருப்பார். 8அதற்குப் பின்பு, அந்த அக்கிரம மனிதன் வெளிப்படுவான். அவனை ஆண்டவர் இயேசு தம்முடைய வாயின் சுவாசத்தினாலே ஒழித்து, தமது வருகையின் பிரகாசத்தினாலே அவனை அழித்து விடுவார். 9அந்த அக்கிரம மனிதன் வெளிப்படும்போது, சாத்தானுடைய செயலுக்குரிய விதத்தில் பலவித போலி அற்புதங்கள், அடையாளங்கள், அதிசயங்களைச் செய்து காட்டுவான். 10மேலும், அழிந்து போகின்றவர்கள் இறைவனுடைய சத்தியத்தை அன்புடன் ஏற்றுக்கொண்டு, அதனால் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றபடியால் தீமையான செயல்களினால் ஏமாற்றப்படுவார்கள். 11இக்காரணத்தினாலே, ஏமாற்றுகின்ற மாய வலைக்குள் விழுவதற்கு இறைவன் அவர்களைவிட்டு விடுகிறார். அதனால் அவர்கள் அந்த பொய்யையே நம்புவார்கள். 12இவ்வாறு சத்தியத்தை விசுவாசிக்காமல் கொடுமையான செயல்களில் மகிழ்ச்சி அடைகின்ற அனைவரும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படுவார்கள்.
உறுதியாய் நில்லுங்கள்
13ஆனால், கர்த்தரின் அன்புக்குரியவர்களான பிரியமானவர்களே, உங்களுக்காக எப்போதும் இறைவனுக்கு நன்றி செலுத்த நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில், சத்தியத்தை விசுவாசிப்பதனாலும் பரிசுத்த ஆவியானவரின் பரிசுத்தமாக்குகின்ற செயலினாலும் இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ளும்படி இறைவன் உங்களை ஆரம்பத்திலேயே தெரிவு செய்தார். 14நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையில் நீங்களும் பங்குடையவர்களாகும்படி, எங்களுடைய நற்செய்தியின் ஊடாக அவர் உங்களை அழைத்திருக்கிறார்.
15ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உறுதியுடன் நின்று, வாய்மொழியாகவோ அல்லது கடிதம் ஊடாகவோ நாங்கள் உங்களுக்குக் கொடுத்த போதனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
16நம்மில் அன்பு காட்டி தமது கிருபையினால் நமக்கு நித்திய தைரியத்தையும், நல்ல எதிர்பார்ப்பையும் தந்திருக்கின்ற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், பிதாவாகிய இறைவனும் 17உங்களுடைய இருதயங்களை உற்சாகப்படுத்தி, அனைத்துவிதமான நற்செயலை செய்வதிலும், நல்வார்த்தை பேசுவதிலும் உங்களைப் பலப்படுத்துவார்களாக.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 2 தெசலோனிக்கேயர் 2