YouVersion Logo
Search Icon

2 கொரி 6

6
1இறைவனது கிருபையை நீங்கள் பெற்றுக்கொண்டது வெறும் வீண் என்று ஆகிவிடக் கூடாது என இறைவனுடைய சக வேலையாட்களாகிய நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கிறோம். 2ஏனெனில்,
“என் தயவின் காலத்தில் நான் உங்கள் குரலைக் கேட்டு,
இரட்சிப்பின் நாளிலே நான் உங்களுக்கு உதவி செய்தேன்”#6:2 ஏசா. 49:8
என்று இறைவனே சொல்லியிருக்கின்றார். இதோ, இப்பொழுதே அவரது தயவின் காலம், இப்பொழுதே இரட்சிப்பின் நாள்.
பவுலின் கஷ்டங்கள்
3எங்கள் ஊழியத்தைப்பற்றி யாரும் குறை கூறாதபடி, நாங்கள் எவருடைய வழியிலும் தடைக்கற்களை இடுவதில்லை. 4மாறாக, நாங்கள் இறைவனின் உண்மையான ஊழியர்கள் என்பதை எல்லாவிதத்திலும், எங்கள் நடத்தையின் மூலமாக அனைவருக்கும் நிரூபித்துக் காண்பிக்கிறோம்: அதன்படி, அதிக சகிப்புத் தன்மையாலும் கஷ்டங்களிலும் துன்பங்களிலும் துயரங்களிலும், 5அடிவாங்கியதிலும், சிறை வைக்கப்பட்டதிலும், கலவரங்களை முகங்கொடுத்ததிலும், கடின வேலையில் ஈடுபட்டதிலும், இரவில் நித்திரை கொள்ளாமல் இருந்ததிலும், உணவின்றி பட்டினியாய் இருந்ததிலும் இறைவனின் உண்மையான ஊழியர்களென நிரூபித்துக் காண்பிக்கிறோம். 6தூய்மையிலும், விளங்கிக்கொள்வதிலும், பொறுமையிலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், உண்மை அன்பிலும், 7சத்திய போதனையிலும், இறைவனின் வல்லமையில் நடப்பதிலும், நீதியின் ஆயுதத்தை வலது கையிலும் இடது கையிலும் பிடித்திருப்பதிலும், 8மற்றவர்களால் மதிப்பையோ அவமதிப்பையோ, புகழ்ச்சியையோ இகழ்ச்சியையோ எதை அடைகின்றவர்களாக இருந்தாலும், ஏமாற்றுக்காரர்களாக எண்ணப்பட்ட போதிலும் உண்மையுள்ள ஊழியர்களாகவும், 9அறியப்படாதவர்களாகக் காணப்பட்டாலும், நன்கு அறிமுகமானவர்கள் ஆகவும், மரணிக்கின்றவர்களாகக் காணப்பட்டாலும், தொடர்ந்து வாழ்கின்றவர்கள் ஆகவும், தாக்கப்பட்டவர்களாகக் காணப்பட்டாலும், கொல்லப்படாதவர்கள் ஆகவும், 10துக்கப்படுகிறவர்களாகக் காணப்பட்டாலும், மகிழ்ச்சி கொள்கின்றவர்கள் ஆகவும், ஏழைகளாகக் காணப்பட்டாலும், பலரைச் செல்வந்தர்கள் ஆக்குகின்றவர்கள் ஆகவும், ஒன்றும் இல்லாதவர்களாகக் காணப்பட்டாலும், அனைத்தும் உடையவர்களாகவும் இருக்கின்றோம்.
11கொரிந்தியர்களே, நாங்கள் உங்களோடு வெளிப்படையாய் பேசியிருக்கிறோம். எங்கள் உள்ளம் முற்றிலும் திறந்திருக்கிறது. 12நாங்கள் உங்கள் மீது அளவற்ற பாசத்தோடு இருந்தோம், ஆனால் நீங்களோ எங்கள் மீது அதேவண்ணம் பாசம் காட்டவில்லை. 13உங்களை என் பிள்ளைகள் என்றே எண்ணி பேசுகின்றேன். உங்கள் உள்ளங்களைத் திறந்து பதிலுக்கு நீங்களும் அன்பு செய்யுங்கள்.
அவிசுவாசிகளோடு பிணைக்கப்பட வேண்டாம்
14அவிசுவாசிகளுடன் ஒன்றாக பிணைக்கப்படாதிருங்கள். நீதிக்கும் அநியாயத்துக்கும் தொடர்புண்டோ? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமுண்டோ? 15கிறிஸ்துவுக்கும் சாத்தானுக்கும்#6:15 சாத்தானுக்கும் – கிரேக்க மொழியில் பெலியேல் என்றுள்ளது. இது சாத்தானுக்கு கொடுக்கப்பட்ட ஒரு பெயர். இடையே இணக்கமுண்டோ? விசுவாசிக்கும் அவிசுவாசிக்கும் இடையில் பொதுத் தன்மையுண்டோ? 16இறைவனுடைய ஆலயத்திற்கும், விக்கிரகங்களுக்கும் இடையே உடன்பாடுண்டோ? வாழும் இறைவனின் ஆலயமாய் நாம் இருக்கின்றோமே. அதைக் குறித்து இறைவனே கூறியிருப்பதாவது:
“நான் அவர்களுடன் வாழ்வேன்.
அவர்களிடையே உலாவுவேன்.
நான் அவர்களுடைய இறைவனாயிருப்பேன்.
அவர்கள் என் மக்களாயிருப்பார்கள்.”#6:16 லேவி. 26:12; எரே. 32:38; எசே. 37:27
17ஆகவே,
“அவர்களைவிட்டு வெளியே வந்து,
பிரிந்திருங்கள்.
அசுத்தமான எதையும் தொடாதீர்கள்.
அப்போது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்
என்று கர்த்தர் சொல்கின்றார்.”#6:17 ஏசா. 52:11எசே. 20:34,41
18மற்றும்,
“நான் உங்களுக்குத் தந்தையாயிருப்பேன்.
நீங்கள் எனக்கு மகன்களாயும் மகள்களாயும் இருப்பீர்கள் என்று,
எல்லாம் வல்ல கர்த்தர் சொல்கின்றார்.”#6:18 2 சாமு. 7:14; 7:8

Currently Selected:

2 கொரி 6: TRV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in