2 கொரி 11
11
பவுலும் போலி அப்போஸ்தலர்களும்
1என் மடைமையை சற்று நீங்கள் பொறுத்துக்கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கின்றேன். ஆம், சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். 2இறைவன் உங்கள் மீது கொண்டிருப்பதைப் போலவே, நானும் உங்கள் மீது ஆழமான அக்கறை கொண்டிருக்கின்றேன். ஏனென்றால், உங்களை மாசற்ற ஒரு கன்னிப் பெண்ணாக கிறிஸ்து எனும் ஒரே கணவருக்குத் திருமணம் செய்து கொடுக்க வாக்குறுதி அளித்திருக்கின்றேன். 3பாம்பின் தந்திரத்தால் ஏவாள் ஏமாற்றப்பட்டது போல, உங்கள் சிந்தனையானது கிறிஸ்துவில் உள்ள உண்மையானதும் தூய்மையானதுமான பக்தியிலிருந்து வழிவிலகிச் சென்றிடுமோ என்று நான் பயப்படுகிறேன். 4ஏனெனில் யாராவது உங்களிடம் வந்து, நாங்கள் பிரசங்கிக்காத மாறுபட்ட இயேசுவையோ, நீங்கள் பெற்றுக்கொண்ட ஆவியல்லாத#11:4 இந்த வசனத்தில் ஆவி என குறிப்பிடப்பட்டுள்ளதை சிந்தனை என்றும் அர்த்தம்கொள்ளலாம். வேறொரு ஆவியையோ, நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியல்லாத வேறொரு நற்செய்தியையோ பிரசங்கிக்கும்போது அவற்றை எளிதாக ஏற்றுக்கொள்கின்றீர்கள்.
5அந்த “மகா அப்போஸ்தலர்களை”#11:5 இந்த இடத்தில் மகா அப்போஸ்தலர்களை என போலி போதகர்களையே குறிப்பிடுகிறார். விட நான் எவ்வகையிலும் தாழ்ந்தவனல்ல என எண்ணுகிறேன். 6நான் ஒரு பயிற்சி பெறாத பேச்சாளனாய் இருந்தாலும் அறிவற்றவன் அல்ல என்பதை எல்லாவற்றிலும் எல்லா வழிகளிலும் நாங்கள் உங்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கின்றோம்.
7உங்களுக்கு எந்தச் செலவும் வைக்காமல் இலவசமாய் இறைவனுடைய நற்செய்தியை பிரசங்கித்து, நீங்கள் உயர்வடையும்படி என்னைத் தாழ்த்தியதுதான் நான் செய்த பாவமா? 8உங்களுக்குப் பணி செய்வதற்காக நான் மற்ற திருச்சபைகளிடமிருந்து உதவி பெற்றுக்கொண்டேன். இப்படியாக உங்களுக்காக நான் அவர்களைக் கொள்ளையிட்டிருக்கிறேன். 9நான் உங்களுடன் இருக்கையில் எனக்குத் தேவையேற்பட்டபோது அதற்காக யாருக்கும் பாரமாயிருக்கவில்லை. எனக்குத் தேவையானதை மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்து உதவினார்கள். எனவே, எவ்விதத்திலும் நான் உங்களுக்குப் பாரமாய் இருக்கவில்லை, அதுபோல இனிமேலும் உங்களுக்குப் பாரமாயிருக்க மாட்டேன். 10கிறிஸ்துவின் உண்மை எனக்குள் இருப்பதனால் நான் இப்படிப் பெருமிதமாய் பேசுவதை அகாயா பகுதியிலுள்ள எவரும் தடுக்க முடியாது. 11நான் உங்களுக்குப் பாரமாக இருக்க விரும்பாதது ஏன்? நான் உங்களில் அன்பாய் இல்லாததாலா? நான் அன்பாய் இருப்பதை இறைவன் அறிவார்!
12நாங்கள் எப்படி ஊழியம் செய்து வருகின்றோமோ, அப்படியே தாங்களும் ஊழியம் செய்வதாகப் பெருமை பேசிக்கொள்கின்றவர்கள், அப்படிச் சொல்லிக்கொள்ள வழியில்லாதபடி நான் இப்போது செய்வதையே தொடர்ந்தும் செய்து வருவேன்.
13ஏனெனில், இப்படிப்பட்ட மனிதர்கள் போலி அப்போஸ்தலர்கள், ஏமாற்றுக்காரர்கள், தங்களை கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்களாக காட்டிக்கொள்ள மாறுவேடம் போட்டுக் கொண்டவர்கள். 14இதில் ஆச்சரியமில்லை. ஏனெனில், சாத்தானும் ஒளியின் தூதனைப் போல் வேடம் போட்டுக்கொள்கின்றான். 15எனவே அவனுடைய வேலைக்காரர்களும் நீதியின் ஊழியக்காரர்கள் போல் வேடம் போடுவது ஆச்சரியமான ஒன்று அல்ல. அவர்களின் முடிவு அவர்கள் செயல்களுக்கேற்றதாய் இருக்கும்.
பவுலின் பெருமிதம்
16நான் மறுபடியும் சொல்கின்றேன், என்னை மதியற்றவன் என்று ஒருவரும் நினைக்க வேண்டாம். அப்படி நீங்கள் நினைத்தால் நானும் சற்று பெருமைப்பட்டுக்கொள்ள, என்னை மதியற்றவனாகவே ஏற்றுக்கொள்ளுங்கள். 17நான் கர்த்தருக்கு உரிய விதத்தில் பேசாமல் என்னுடைய தன்னம்பிக்கையால் பெருமையுடன் பேசும் மதியற்ற ஒருவனைப் போல பேசுகின்றேன். 18பலர் இயல்பான மனித சிந்தனைக்கு ஏற்ப பெருமை பேசுவதால் நானும் அவ்வாறு பெருமை பேசுவேன். 19நீங்களோ மகா புத்திசாலிகளாயிருந்து, மதியற்றவர்களை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கின்றீர்கள். 20உங்களை அடிமைப்படுத்துகின்றவனையும், உங்களைச் சுரண்டிப் பிழைக்கின்றவனையும், உங்களைத் தன்னுடைய நலனுக்காகப் பயன்படுத்துகின்றவனையும், உங்கள் மத்தியில் பெருமையாய் நடக்கின்றவனையும், உங்கள் முகத்தில் அடிக்கின்றவனையும் நீங்கள் மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொள்கின்றீர்கள். 21நாங்களோ இப்படியானவைகளைச் செய்ய முடியாதளவுக்குப் பலவீனர்கள் என்பதை நான் வெட்கத்துடன் ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால், யாராவது எதைக் குறித்தாவது பெருமைப்படத் துணிந்தால் அவ்விதமாய் பெருமைப்பட்டுக்கொள்ள நானும் துணிவேன். இதை மதியற்ற ஒருவன் சொல்வது போல் சொல்லிக் காட்டுகின்றேன். 22அவர்கள் எபிரேயர்களா? நானும் ஒரு எபிரேயன். அவர்கள் இஸ்ரயேலர்களா? நானும் ஒரு இஸ்ரயேலன். அவர்கள் ஆபிரகாமின் சந்ததிகளா? நானும் அப்படியே. 23அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அவர்களைவிட மிகச் சிறந்த ஊழியன். இதை புத்திபேதலித்த ஒருவன் சொல்வது போல் சொல்லிக் காட்டுகின்றேன். நான் அதிகமாக உழைத்தவன், பல முறை சிறைப்பட்டவன், எண்ணற்ற அடி வாங்கியவன், அடிக்கடி மரணத்துக்கு முகம் கொடுத்தவன். 24நாற்பது அடிகளுக்கு ஒரு அடி குறைவாக, ஐந்து முறை யூதர்களினால் சவுக்கால் அடிக்கப்பட்டேன். 25மூன்று முறை தடிகளால் அடிக்கப்பட்டேன், ஒரு தடவை கல்லெறியப்பட்டேன், மூன்று முறை கப்பல் விபத்தில் அகப்பட்டேன், ஒருமுறை இரவும் பகலும் நடுக்கடலில் தத்தளித்தேன். 26அடிக்கடி தொடர் பயணங்களை மேற்கொண்டேன். ஆறுகளில் வந்த ஆபத்து, திருடர்களால் வந்த ஆபத்து, சொந்த யூத இனத்தவரால் வந்த ஆபத்து, மற்ற தேசத்து மக்களால் வந்த ஆபத்து, நகரங்களில் வந்த ஆபத்து, காடுகளில் வந்த ஆபத்து, கடலில் வந்த ஆபத்து, போலி கிறிஸ்தவ சகோதரர்களால்#11:26 போலி கிறிஸ்தவ சகோதரர்களால் – கிரேக்க மொழியில் போலிச் சகோதரர்கள் என்றுள்ளது. வந்த ஆபத்துகள் என எத்தனையோ ஆபத்துகளுக்கு முகங்கொடுத்தேன். 27கடினமாய் உழைத்து களைப்படைந்தேன், பல இரவுகள் தூக்கம் இழந்தேன், பசியோடும் தாகத்தோடும் இருந்தேன், பல முறை பட்டினி கிடந்தேன், குளிரிலும், ஆடையின்றியும் இருந்தேன்.
28இவைகளைவிட எல்லாத் திருச்சபைகளையும் குறித்து எனக்கிருக்கும் கவலை நாள்தோறும் என்னை வாட்டி வதைக்கிறது. 29ஒருவன் பலவீனனாக இருந்தால், அந்த பலவீனத்தை என்னால் உணர முடியாதோ? ஒருவன் பாவத்துக்குள் விழச் செய்யப்பட்டால், என் மனம் சீற்றம்கொள்ளாதிருக்குமோ?
30நான் பெருமிதம்கொள்வதானால், எனது பலவீனத்தைக் காண்பிக்கும் காரியங்களைப் பற்றியே பெருமிதம்கொள்வேன். 31நான் சொல்வது பொய் அல்ல என்பதை இறைவனும் ஆண்டவர் இயேசுவின் பிதாவுமாய் இருப்பவர் அறிவார். அவரே எக்காலமும் துதிக்கப்பட வேண்டியவர். 32தமஸ்குவின் அரசனாகிய அரேத்தாவின் கீழ் ஆளுநராய் இருந்தவன் ஒருமுறை என்னைக் கைது செய்வதற்காக தமஸ்கு பட்டணத்தைச் சுற்றிக் காவல் ஏற்படுத்தியிருந்தான். 33ஆனால் நான் ஒரு கூடையில் வைக்கப்பட்டு பட்டணத்து மதிலில் இருந்த ஒரு ஜன்னலின் வழியாக இறக்கி விடப்பட்டு, அந்த ஆளுநரின் கையிலிருந்து தப்பினேன்.
Currently Selected:
2 கொரி 11: TRV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு™ புதிய ஏற்பாடு
பதிப்புரிமை © 2002, 2022 Biblica, Inc.
அனுமதியுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் முழு பதிப்புரிமையும் பாதுகாக்கப்பட்டவை.
Tamil Readerʼs Version™ New Testament
Copyright © 2002, 2022 by Biblica, Inc.
Used with permission.
All rights reserved worldwide.