YouVersion Logo
Search Icon

1 தீமோத்தேயு 6

6
1அடிமைத்தன#6:1 அடிமைத்தன – இன்னொருவருக்குக் கட்டுப்பட்டு, காலம் முழுவதும் சம்பளம் இன்றி வேலை செய்பவர். நுகத்துக்குக் கீழ்ப்பட்ட எல்லோரும் தங்கள் எஜமான்களை எல்லாவிதமான மதிப்புக்கும் உரியவர்களாக எண்ண வேண்டும். அப்போது நமது இறைவனின் பெயருக்கும், எங்கள் கற்பித்தலுக்கும் எந்த அவதூறும் ஏற்படாது. 2விசுவாசிகளான எஜமான்களின் கீழ் இருக்கும் அடிமைகளும், தங்கள் எஜமான்களை வெறும் சகோதரர்களாக மட்டும் எண்ணி அவர்களை மரியாதைக் குறைவாகக் கருதக் கூடாது. தங்களுடைய பணியினால் இலாபம் பெறும் எஜமான்கள், விசுவாசிகளாகவும் தங்கள் மீது அன்புள்ளவர்களாகவும் இருப்பதனால் அவர்கள் இன்னும் சிறப்பாகப் பணி செய்ய வேண்டும்.
தவறான போதனை செய்பவர்களும் பண ஆசையும்
நீ கற்பித்து, வற்புறுத்திக் கூற வேண்டியவை இவைகளே. 3எவனாவது தவறான கோட்பாடுகளைக் கற்றுக் கொடுக்கின்றவனாகவும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நலமான அறிவுறுத்தல்களுக்கும் இறைபக்திக்கு உகந்த கற்பித்தலுக்கும் உடன்படாதவனாகவும் இருந்தால், 4அவன் கர்வம் உள்ளவனும், எதையும் புரிந்துகொள்ளாதவனுமாய் இருக்கின்றான். வார்த்தைகளைக் குறித்து வாக்குவாதம் செய்வதிலும் தகராறு புரிவதிலும் அவன் அதிக விருப்பமுள்ளவன். இவற்றிலிருந்தே பொறாமை, சண்டை, அவதூறான பேச்சு, தீய சந்தேகங்கள், 5மற்றும் சீர்கெட்ட மனம்கொண்ட மனிதர்களுக்கு இடையில் அடிக்கடி எழுகின்ற முரண்பாடான பேச்சுக்களும் உண்டாகின்றன. இப்படிப்பட்டவர்கள் உண்மையைப் புரிந்துகொள்ளாதவர்களாய், இறைபக்தியை இலாபம் ஈட்டுவதற்கான ஒரு வழி என எண்ணுகிறார்கள்.
6ஆனால் மனத்திருப்தியுடன் உள்ள இறைபக்தியே மிகுந்த இலாபம். 7ஏனெனில் இந்த உலகத்திற்கு நாம் எதையும் கொண்டுவரவுமில்லை, இங்கிருந்து எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது. 8ஆகவே உணவும் உடையும் நமக்கு இருக்குமானால், அதிலே நாம் மனத்திருப்தி உள்ளவர்களாய் இருப்போமாக. 9செல்வந்தர்களாக வேண்டும் என விரும்புகின்றவர்களோ, சோதனைக்குள்ளும் கண்ணிப் பொறிக்குள்ளும் விழுவதோடு, மூடத்தனமான கேடு விளைவிக்கும் பலவிதமான ஆசைகளுக்குள்ளும் விழுகிறார்கள்; இவை மனிதரை நாசப்படுத்தி அழிவுக்குள் மூழ்கடிக்கின்றன. 10ஏனெனில் பணத்தின் மீது ஆசைகொள்வதே எல்லாவிதமான தீமைக்கும் ஆணிவேராய் இருக்கின்றது. சிலர் இந்த ஆசையினால் விசுவாசத்தைவிட்டு விலகி, பலவிதமான துன்பங்களைத் தங்கள் மீது வருவித்துக் கொண்டார்கள்.
தீமோத்தேயுவுக்குப் பவுலின் கட்டளை
11ஆனால் இறைவனுடைய மனிதனாகிய நீயோ இவை எல்லாவற்றையும்விட்டு விலகி ஓடு. நீதி, இறைபக்தி, விசுவாசம், அன்பு, சகிப்புத் தன்மை, சாந்தம் ஆகியவற்றையே நாடித் தேடு. 12விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு. நித்திய வாழ்வை உறுதியாகப் பற்றிக்கொள். இதற்காகவே நீ அழைக்கப்பட்டிருக்கிறாய், அநேக சாட்சிகளுக்கு முன்பாக உன் விசுவாசத்தை பகிரங்கமாக அறிக்கை செய்திருக்கின்றாய். 13எல்லாவற்றிற்கும் உயிர் கொடுக்கின்ற இறைவனின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவுக்கு முன்னால் நல்ல சாட்சியம் அளித்த கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளை கொடுக்கின்றேன். 14நமது ஆண்டவர் கிறிஸ்து இயேசு மீண்டும் வெளிப்படும் வரை, எந்தவிதமான களங்கத்துக்கோ குற்றச் சாட்டுக்கோ ஆளாகாமல் இந்தக் கட்டளையைக் கைக்கொள். 15இறைவனே குறித்த காலத்தில் அவரை வெளிப்படுத்துவார். இறைவனே ஆசீர்வதிக்கப்பட்ட#6:15 ஆசீர்வதிக்கப்பட்ட – நித்தியானந்த அல்லது பேரின்ப என்றும் இதை மொழிபெயர்க்கலாம். ஒரே பேரரசர். அரசர்களுக்கெல்லாம் அரசர். ஆளுகின்றவர்களுக்கெல்லாம் ஆண்டவர். 16அவர் ஒருவரே அழிவில்லாத் தன்மை உடையவர், அணுக முடியாத ஒளியில் வாழ்பவர், ஒருவராலும் காணப்படாதவர், காணவும் முடியாதவர். அவருக்கே கனம், நித்திய வல்லமை என்பன என்றென்றும் உரித்தாகட்டும். ஆமென்.
17இந்த உலகத்தில் செல்வந்தர்களாய் இருக்கின்றவர்கள், அகந்தை உள்ளவர்களாய் இருக்கக் கூடாது என்று அவர்களுக்குக் கட்டளையிடு. அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை நிலையற்ற செல்வத்தின் மேல் வைக்காமல், நாம் அனுபவித்து மகிழும்படி எல்லாவற்றையும் நமக்கு நிறைவாகக் கொடுக்கும் இறைவனில் வைக்க வேண்டும் எனக் கட்டளையிடு. 18அவர்கள் நன்மை செய்கின்றவர்களாகவும் நல்ல செயல்களைச் செய்வதில் செல்வந்தர்களாக இருக்க வேண்டும் என்றும், தாராள மனமுள்ளவர்களாகவும், தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுக்க விருப்பமுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் கட்டளையிடு. 19இவ்விதமாக வருங்காலத்திற்காக உறுதியான அத்திவாரமாக அவர்கள் தங்களுக்குச் செல்வத்தை சேர்த்துக்கொள்வார்கள். இதனால் அவர்கள் உண்மையான வாழ்வை பற்றிக்கொள்ள முடியும்.
20தீமோத்தேயு, உன்னிடம் ஒப்படைக்கப்பட்டதைக் கவனமாகக் காத்துக்கொள். இறைபக்தியில்லாத பேச்சுக்களிலும், அறிவு என பொய்யாக அழைக்கப்படுகின்ற முரண்பட்ட கருத்துகளிலுமிருந்து விலகியிரு. 21சிலர் இவற்றை நம்பி ஏற்றுக்கொண்டு விசுவாசத்தைவிட்டு விலகிப் போயிருக்கிறார்கள்.
கிருபை உங்களுடனே இருப்பதாக. ஆமென்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in