YouVersion Logo
Search Icon

1 தெசலோனிக்கேயர் 3

3
1ஆகவே உங்களுடைய பிரிவை எங்களால் தாங்க முடியாதிருந்தபோது, நாங்கள் மாத்திரம் அத்தேனே பட்டணத்தில் இருந்துகொண்டு, 2கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில் இறைவனுக்காக வேலை செய்கின்ற எங்கள் சக ஊழியனும் சகோதரனுமாய் இருக்கின்ற தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புவது சிறந்தது எனத் தீர்மானித்தோம். உங்களைப் பலப்படுத்தி, உங்களை உங்கள் விசுவாசத்தில் ஊக்கப்படுத்தி, 3உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற துன்பங்களால் உங்களில் எவரும் நிலைகுலைந்து போகக் கூடாது என்பதற்காகவே அவனை அனுப்பி வைத்தோம். இப்படியான துன்பங்கள் நமக்கு ஏற்படும் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். 4உண்மையில், நாம் துன்புறுத்தப்படுவோம் என்பதை நாங்கள் உங்களுடன் இருந்தபோது முன்னரே உங்களுக்கு பல முறை சொல்லியிருந்தோம். அது அவ்விதமே நிகழ்ந்தது என்பதும் உங்களுக்குத் தெரியும். 5ஆகையால் உங்கள் விசுவாசத்தின் நிலையைக் குறித்து ஏதும் அறியாதவனாய் இருந்ததால், அதனை பொறுத்துக்கொள்ள முடியாததனாலே உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்வதற்காக நான் தீமோத்தேயுவை அனுப்பினேன். ஏனெனில் ஏதாவது ஒருவிதத்தில் சோதனைக்காரன்#3:5 சோதனைக்காரன் என்றால் சாத்தான் உங்களைச் சோதனைக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும், அதனால் எங்களுடைய உழைப்பு வீண் போயிருக்குமோ என்றும் பயந்தேன்.
தீமோத்தேயுவின் அறிக்கை
6ஆனாலும் உங்களிடமிருந்து இப்போது திரும்பி வந்திருக்கின்ற தீமோத்தேயு, உங்களுடைய விசுவாசத்தையும் அன்பையும் குறித்து நல்ல செய்தியையே கொண்டுவந்திருக்கிறான். எங்களைக் குறித்த நினைவுகள் உங்களுக்கு இனியவையாய் இருக்கின்றன என்றும், நாங்கள் உங்களைக் காண ஆவலாயிருப்பது போல, நீங்களும் எங்களைக் காண ஆவலாய் இருக்கின்றீர்கள் என்றும் அவன் எங்களுக்குச் சொன்னான். 7ஆகையால் பிரியமானவர்களே, எங்களுடைய இடர் மிகுந்த துன்பத்தின் மத்தியிலும் உங்களுடைய விசுவாசத்தைக் குறித்து கேள்விப்பட்டு, உங்களால் நாங்கள் உற்சாகமடைந்தோம். 8நீங்கள் கர்த்தரில் உறுதியாய் நிற்பதை அறிந்த பின்புதான், உண்மையிலே எங்களுக்கு உயிர் வந்தது. 9உங்களால் நமது இறைவன் முன்னிலையில் நாங்கள் அனுபவிக்கும் அனைத்து மனமகிழ்ச்சிக்கும் பிரதிபலனாக, உங்கள் பொருட்டு அவருக்கு எவ்விதமாய் எங்கள் நன்றியை செலுத்தப் போகின்றோமோ? 10நாங்கள் மீண்டும் உங்களைச் சந்தித்து, உங்கள் விசுவாசத்திலுள்ள குறைபாடுகளைச் சீர்படுத்துவதற்காக இரவும் பகலும் அதிக உத்வேகத்துடன் மன்றாடுகிறோம்.
11இப்போது நம்முடைய பிதாவாகிய இறைவனும் ஆண்டவர் இயேசுவும், நாங்கள் உங்களிடம் வருவதற்கான வழியை எங்களுக்கு ஏற்படுத்தித் தருவாராக. 12உங்கள் மீது கொண்டுள்ள எங்கள் அன்பு வளர்ந்து பெருகுவது போல, நீங்கள் ஒருவரில் ஒருவர் கொண்டுள்ள அன்பிலும், மற்றெல்லோரிடத்திலும் கொண்டுள்ள அன்பிலும் வளர்ந்து பெருக கர்த்தர் உங்களை வழிநடத்துவாராக. 13நம்முடைய ஆண்டவர் இயேசு தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவரோடும் வரும்போது, நம்முடைய பிதாவாகிய இறைவனுக்கு முன்பாக நீங்கள் குற்றம் சுமத்தப்படாதவர்களாகவும் பரிசுத்தர்களாகவும் இருப்பதற்கு அவர் உங்கள் இருதயங்களைப் பலப்படுத்துவாராக.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for 1 தெசலோனிக்கேயர் 3