YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 9

9
அப்போஸ்தலனின் உரிமைகள்
1எனக்கு சுதந்திரம் உண்டல்லவா? நானும் ஒரு அப்போஸ்தலன் அல்லவா? நம்முடைய ஆண்டவர் இயேசுவை நான் காணவில்லையா? ஆண்டவருக்காக நான் செய்த ஊழியத்தின் பலாபலனாக இருப்பவர்கள் நீங்கள்தானே? 2நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாய் காணப்படாவிட்டாலும், உங்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கிறேன்; ஆண்டவருக்குள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு நீங்களே அடையாளமாய் இருக்கின்றீர்கள்.
3என்மேல் நீதி விசாரணை செய்பவர்களுக்கு எனது பதில் இதுவே. 4உண்ணும் உணவையும் அருந்தும் பானத்தையும் பெற#9:4 பெற – சபை மக்களிடமிருந்து பெற என்றும் மொழிபெயர்க்கலாம் எங்களுக்கு உரிமை இல்லையோ? 5மற்ற அப்போஸ்தலர்களும், ஆண்டவருடைய சகோதரர்களும், கேபாவும் விசுவாசியான மனைவியை தங்களுடன் அழைத்துக்கொண்டு போவது போல நாமும் செய்வதற்கு உரிமை இல்லையோ? 6வாழ்க்கைச் செலவுக்காக வேலை செய்யத் தேவை இல்லை என்ற உரிமை எனக்கும் பர்னபாவுக்கும் மாத்திரம் இல்லையோ?
7எவன் தன் சம்பளப் பணத்தைத் தானே செலுத்தி இராணுவ வீரனாகப் பணி புரிவான்? எவன் திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி அதன் பழங்களில் ஒன்றையும் உண்ணாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து அதன் பாலைக் குடியாதிருப்பான்? 8இதை மனித வழக்கத்தின்படி மட்டும் சொல்கின்றேனோ? நீதிச்சட்டமும் இதைச் சொல்லவில்லையா? 9“தானியக் கதிரைக் கதிரடிக்கும் எருதின் வாயைக் கட்ட வேண்டாம்”#9:9 உபா. 25:4 என்று மோசேயின் நீதிச்சட்டத்தில் எழுதப்பட்டிருக்கின்றதே. எருதுகளைக் குறித்தா இறைவன் கவலைப்படுகிறார்? 10இதை அவர் நமக்காக சொல்லவில்லையா? நிச்சயமாக அது நமக்காகவே எழுதப்பட்டிருக்கிறது. ஏனெனில் உழுகின்றவனும், கதிரடிக்கின்றவனும் விளைச்சலில் பங்கடைவோம் என்ற எதிர்பார்ப்பில் வேலை செய்ய வேண்டும். 11நாங்கள் உங்கள் மத்தியில் ஆவிக்குரியதை விதைத்திருந்தால், உங்களிடமிருந்து எங்கள் அடிப்படைத் தேவைகளை அறுவடை செய்வது நியாயமற்றதோ? 12உங்களிடமிருந்து உதவி பெற்றுக்கொள்ளும் உரிமை மற்றவர்களுக்கு இருக்கும்போது அந்த உரிமை எங்களுக்கு இன்னும் அதிகமாக இருக்காதோ?
ஆயினும், நாங்கள் இந்த உரிமையை பயன்படுத்தாமல், கிறிஸ்துவின் நற்செய்திக்குத் தடை ஏற்படாதவாறு எல்லாவற்றையும் சகித்துக்கொள்கிறோம்.
13ஆலயத்தில் ஊழியம் செய்கின்றவர்கள் ஆலயத்திலிருந்தே தங்கள் உணவைப் பெறுகிறார்கள் என்பதையும், பலிபீடத்தில் பணி செய்கின்றவர்கள் பலியிடப்படும் காணிக்கைகளில் ஒரு பங்கைப் பெறுகிறார்கள் என்பதையும் நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? 14அப்படியே நற்செய்தியைப் பிரசங்கிக்கின்றவர்கள் நற்செய்தி ஊழியத்திலிருந்தே தங்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்.
15ஆனாலும் இந்த உரிமைகள் ஒன்றையேனும் நான் பயன்படுத்தவில்லை. மேலும், நீங்கள் எனக்குப் பொருளுதவி செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்பிலும் நான் இதை எழுதவில்லை. ஏனெனில் நான் பெருமிதம் அடையக் கூடிய இந்த விடயத்தை இழப்பதைப் பார்க்கிலும், நான் மரணிப்பதே நலமாயிருக்கும். 16நான் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஏனெனில், நான் பிரசங்கிப்பது கட்டாயக் கடமை. நற்செய்தியை நான் பிரசங்கிக்காவிட்டால், எனக்கு ஐயோ பேரழிவு. 17நான் பிரசங்கிப்பதை விருப்பத்தோடு செய்தால் அதற்கான வெகுமதி உண்டு; மனவிருப்பமின்றி செய்தாலும், எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையே செய்து முடிக்கிறேன். 18அப்படியானால், எனக்குக் கிடைக்கும் வெகுமதி என்ன? நான் எனக்குரிய உரிமையை பெற்றுக்கொள்ளாமல், நற்செய்தியை இலவசமாக பிரசங்கிப்பதே வெகுமதி.
பவுல் தனது சுதந்திரத்தைப் பயன்படுத்துதல்
19நான் எந்த மனிதனுக்கும் அடிமையாயிராத சுதந்திரமானவனாய் இருந்தும், அநேகரை வென்றெடுக்கும்படி எல்லோருக்கும் என்னை அடிமையாக்கிக் கொள்கின்றேன். 20யூதர்களை வென்றெடுக்க யூதருக்கு நான் யூதனைப் போலானேன். நீதிச்சட்டத்திற்கு நான் கீழ்ப்படாத ஒருவனாயிருந்தும் நீதிச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை வென்றெடுக்க நீதிச்சட்டத்திற்குக் கீழ்ப்பட்டவனைப் போலானேன். 21நீதிச்சட்டம் இல்லாதவர்களின் உள்ளத்தை வென்றெடுக்க, நானும் நீதிச்சட்டம் இல்லாதவன் போலானேன். நான் இறைவனுடைய சட்டத்திற்கு அப்பாற்பட்டவன் அல்ல. ஆனாலும் நான் கிறிஸ்துவின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவனாய் இருப்பதால் அப்படிச் செய்கின்றேன். 22பலவீனரை வென்றெடுக்க, பலவீனருக்கு நான் பலவீனனானேன். எப்படியாவது சிலரையாவது வென்றெடுப்பதற்காக நான் எல்லோருக்கும் எல்லாமானேன். 23நற்செய்தியின் ஆசீர்வாதங்களில் நானும் அவர்களுடன் ஒரு பங்கைப் பெறுவதற்காக நற்செய்தியின் பொருட்டே இதை நான் செய்கின்றேன்.
சுயஒழுக்கத்தின் அவசியம்
24ஓட்டப் பந்தயத்தில் பலர் ஓடினாலும் ஒருவனே பரிசைப் பெறுவான் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்க விதத்திலே ஓடுங்கள். 25போட்டிகளில் பங்குபெறும் ஒவ்வொருவரும் அழிந்து போகும் கிரீடத்தைப்#9:25 கிரீடத்தை – அக்காலத்தில் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களைக் கெளரவிக்கப் பரிசாக வழங்கப்படும், இலைகளினாலான ஓர் மலர் வளையம். பெறுவதற்காக சுயகட்டுப்பாட்டுடன் இருக்கின்றார்கள். ஆனால் நாமோ, அழியாத ஒரு கிரீடத்தைப் பெறுவதற்காக அப்படிச் செய்கின்றோம். 26ஆதலால் நான் குறிக்கோள் இல்லாமல் ஓடும் மனிதனைப் போல ஓட மாட்டேன். காற்றை எதிர்த்து சண்டையிடும் குத்துச் சண்டை வீரனைப் போல் சண்டையிட மாட்டேன். 27மற்றவர்களுக்குப் பிரசங்கிக்கின்ற நானே, வெகுமானம் பெறத் தகுதியற்றவனாகி விடாதபடி என் உடலை அடக்கி, ஒடுக்கி கட்டுப்படுத்துகிறேன்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in