YouVersion Logo
Search Icon

1 கொரிந்தியர் 1

1
1இறைவனின் விருப்பப்படி கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாய் இருக்கும்படி அழைக்கப்பட்ட பவுலும், நமது சகோதரனாகிய சொஸ்தெனேயும்,
2கொரிந்துவில் இருக்கும் இறைவனுடைய திருச்சபைக்கும், கிறிஸ்து இயேசுவுடன் இணைக்கப்பட்டதால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்கும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் எங்களுக்கும் ஆண்டவராய் இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லி எல்லா இடங்களிலிருந்தும் ஒன்றிணைந்து ஆராதிக்கின்ற அனைவருக்கும் எழுதுவதாவது:
3நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி செலுத்துதல்
4கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்பதால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின் காரணமாக, நான் எப்போதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 5நீங்கள் கிறிஸ்துவுக்குள் எல்லாவிதத்திலும், எல்லாப் பேச்சிலும், எல்லா அறிவிலும், எவ்வகையிலும் நிறைவானவர்களாக விளங்குகிறீர்கள். 6அதன் காரணமாக, கிறிஸ்துவைப் பற்றிய எங்களுடைய சாட்சியை இறைவன் உங்களில் உறுதிப்படுத்தியுள்ளார். 7ஆகவே, நீங்கள் எந்த ஆவிக்குரிய வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்கு ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். 8அதனால் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீண்டும் வரும் நாள்வரை நீங்கள் குற்றம் சாட்டப்படாதவர்களாய் இருக்கும்படி, அவர் இறுதி வரை உங்களை உறுதியானவர்களாகக் காத்துக்கொள்வார். 9தமது மகனும் நமது ஆண்டவருமாகிய இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியமாய் இருப்பதற்கு உங்களை அழைத்திருக்கும் இறைவன் உண்மையுள்ளவர்.
திருச்சபையில் பிரிவினை
10பிரியமானவர்களே, நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் உங்களிடம் நான் வேண்டிக்கொள்வதாவது: நீங்கள் பேச்சிலும் சிந்தையிலும் உடன்பட்டிருந்து, உங்கள் மத்தியில் பிரிவினைகள் இல்லாமல் ஒரேவிதமாக சிந்தித்து தீர்மானிக்கின்றவர்களாக இருங்கள். 11பிரியமானவர்களே, உங்கள் மத்தியில் சண்டை சச்சரவுகள் உள்ளதாக குலோவேயாளின் குடும்பத்தைச் சேர்ந்த சிலர் எனக்கு அறிவித்தார்கள். 12நான் கூறுவது என்னவென்றால் உங்களில் ஒருவன், “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறான். இன்னொருவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறான். இன்னொருவன், “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறான். இன்னொருவன், “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறான்.
13கிறிஸ்து பிரிவுற்றிருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையில் அறையப்பட்டான்? நீங்கள் பவுலின் பெயரினாலா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? 14கிறிஸ்புவையும் காயுவையும் தவிர, உங்களில் எவருக்கேனும் நான் ஞானஸ்நானம் கொடுக்காதபடியால் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். 15ஆகவே, என் பெயரால் ஞானஸ்நானம் பெற்றதாக உங்களில் ஒருவரேனும் சொல்ல முடியாது. 16ஆம், நான் ஸ்தேவானின் வீட்டாருக்கும் ஞானஸ்நானம் கொடுத்தது உண்மை. அதைவிட, வேறு யாருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை 17கிறிஸ்து என்னை ஞானஸ்நானம் கொடுப்பதற்கல்ல, நற்செய்தியைப் பிரசங்கிக்கவே அனுப்பினார். அத்தோடு கிறிஸ்துவின் சிலுவை மரணம் வல்லமையற்று போகாதவாறு மனித ஞானத்தை வெளிப்படுத்தும் சொற்பொழிவு ஆற்றுகின்ற வார்த்தைகளின்றி பிரசங்கிக்கவே கிறிஸ்து என்னை அனுப்பினார்.
இறைவனின் வல்லமையும் ஞானமும் கிறிஸ்துவே
18அழிவின் பாதையில் போகின்றவர்களுக்கு சிலுவையின் செய்தியானது முட்டாள்தனமாகத் தோன்றுகின்றது. ஆனால் இரட்சிக்கப்படுகின்ற நமக்கோ அது இறைவனின் வல்லமையாய் இருக்கின்றது. 19ஆகவே,
“நான் ஞானிகளின் ஞானத்தை அழித்து,
அறிவாளிகளின் அறிவாற்றலை பயனற்றதாக்குவேன்”#1:19 ஏசா. 29:14
என்று எழுதப்பட்டிருக்கின்றது.
20ஞானி எங்கே? தத்துவ ஆசிரியன் எங்கே? இந்த யுகத்தைச் சேர்ந்த வாதிடும் அறிஞன் எங்கே? உலக ஞானத்தை இறைவன் மடைமையாக மாற்றவில்லையோ? 21இறைவனின் ஞானமான திட்டத்தின்படி ஞானத்தால் உலகம் இறைவனை அறிய முடியாததாயிருக்கையில், முட்டாள்தனமாகத் தோன்றுகின்ற எமது பிரசங்கத்தைக்கொண்டு, அதனூடாக விசுவாசித்து ஏற்றுக்கொள்பவர்களை மீட்க இறைவன் விருப்பம் கொண்டார். 22யூதர்கள் அற்புத அடையாளங்களை கேட்கின்றார்கள்; கிரேக்கர்கள் ஞானத்தைத் தேடுகிறார்கள். 23ஆனால் நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம். இது யூதருக்குத் தடைக்கல்லாகவும் யூதரல்லாதவருக்கு முட்டாள்தனமானதாயும் இருக்கின்றது. 24ஆனால், யூதரிலும் கிரேக்கரிலுமிருந்து அழைக்கப்பட்டவர்களுக்கு, கிறிஸ்துவே இறைவனின் வல்லமையும் இறைவனின் ஞானமுமாய் இருக்கின்றார். 25ஏனெனில் இறைவனின் அறிவீனம்#1:25 அறிவீனம் என்பது மக்களால் அறிவீனம் என்று கருதப்படுவது மனித ஞானத்திலும் மிகுந்த ஞானமுள்ளதாயிருக்கிறது; இறைவனின் பலவீனம்#1:25 பலவீனம் என்பது மக்களால் பலவீனம் என்று கருதப்படுவது மனித பலத்திலும் மிகுந்த பலமுள்ளதாயிருக்கிறது.
26பிரியமானவர்களே, நீங்கள் அழைக்கப்பட்டபோது எப்படி இருந்தீர்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மனித மதிப்பீட்டின்படி உங்களில் ஞானிகள் அநேகரில்லை; செல்வாக்குடையவர்கள் அநேகரில்லை; உயர்குடிப் பிறந்தவர்கள் அநேகரில்லை. 27ஆனால் இறைவனோ, ஞானிகளை வெட்கித் தலைகுனியச் செய்யும்படி உலகின் முட்டாள்தனமானவைகளைத் தெரிவு செய்தார்; பலமுள்ளவர்களை வெட்கத்துக்குள்ளாக்கும்படி உலகின் பலவீனமானவைகளைத் தெரிவு செய்தார். 28இந்த உலகம் மதிப்புள்ளதாகக் கருதுபவற்றை பயனற்றவையாக்க, இந்த உலகத்தால் முக்கியமற்றதென எண்ணப்பட்ட, ஏளனத்துக்குரியதும் ஒன்றும் இல்லாததுமானவற்றை இறைவன் தெரிவு செய்தார். 29இப்படியாக ஒருவரும் இறைவனின் பிரசன்னத்தில் பெருமை பாராட்ட இடம் இல்லாமல் செய்தார். 30இறைவனாலேயே நீங்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்றீர்கள். அவரே இறைவனிடமிருந்து நமக்காக வந்த ஞானமும், நீதியும், பரிசுத்தமும், மீட்புமாக இருக்கின்றார். 31ஆகவே எழுதியிருக்கின்றபடி, “பெருமை பாராட்ட விரும்புகின்றவன், கர்த்தரிலேயே பெருமை பாராட்டட்டும்.”#1:31 எரே. 9:24

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in