சாலொமோனின் உன்னதப்பாட்டு 2
2
1நான் சரோனில் பூத்த ரோஜா.
பள்ளத்தாக்குகளில் மலர்ந்த லீலிபுஷ்பம்!
அவன் பேசுகிறான்
2எனது அன்பே! முட்களுக்கு இடையில் லீலி புஷ்பம்போல்
நீ மற்ற பெண்களுக்கிடையில் இருக்கிறாய்.
அவள் பேசுகிறாள்
3என் அன்பரே! காட்டு மரங்களுக்கிடையில்
கிச்சிலி மரத்தைப்போல் மற்ற ஆண்களுக்கிடையில் நீர் இருக்கிறீர்.
அவள் பெண்களுடன் பேசுகிறாள்
எனது நேசரின் நிழலில் உட்கார்ந்துகொண்டு நான் மகிழ்கிறேன்.
அவரின் கனி எனது சுவைக்கு இனிப்பாக உள்ளது.
4என் நேசர் என்னை விருந்து சாலைக்கு அழைத்துப்போனார்.
என்மீதுள்ள நேசத்தை வெளிப்படுத்துவதே அவரது நோக்கம்.
5காய்ந்த திராட்சையினால் செய்யப்பட்ட பலகாரத்தால் என்னைப் பலப்படுத்துங்கள்.
கிச்சிலிப் பழங்களால் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுங்கள்.
ஏனென்றால் நான் நேசத்தினிமித்தம் பலவீனமாகியுள்ளேன்.
6என் நேசரின் இடதுகை என் தலையின் கீழுள்ளது.
அவரது வலது கை என்னை அணைத்துக்கொள்கிறது.
7எருசலேமின் பெண்களே, நான் தயாராகும்வரை,
நீங்கள் என் அன்பை விழிக்கச் செய்யாமலும், அல்லது எழுப்பாமலும் இருக்க மான்கள் மீதும் காட்டு மான்கள் மீதும் வாக்குறுதி கொடுங்கள்.
அவள் மீண்டும் பேசுகிறாள்
8நான் என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்.
இங்கே அது வந்தது.
மலைகளுக்கு மேல் துள்ளி வந்தது.
குன்றுகளுக்குமேல் சறுக்கி வந்தது.
9என் நேசர் வெளிமான்
அல்லது குட்டி மானைப் போன்றவர்.
அவர் எங்கள் சுவற்றுக்குப் பின்னால் நிற்பதையும்,
ஜன்னல் திரையின் வழியாகப் பார்ப்பதையும் நீங்கள் பார்க்கலாம்.
10என் நேசர் என்னிடம், “எழுந்திரு என் அன்பே! என் அழகே!
வெளியே போகலாம்.
11பார், மழைக்காலம் போய்விட்டது.
மழை வந்து போனது.
12பூமியில் பூக்கள் மலர்ந்துள்ளன.
இது பாடுவதற்குரிய காலம்.
கவனி, புறாக்கள் திரும்பிவிட்டன.
13அத்தி மரங்களில் காய்கள் தோன்றியுள்ளன.
திராட்சைக் கொடிகள் மணம் வீசுவதை நுகர்ந்துபார்.
எழுந்திரு என் அன்பே, அழகே,
நாம் வெளியே போகலாம்.”
அவன் பேசுகிறான்
14“என் புறாவே நீ கன்மலையின் வெடிப்புகளிலும்
மலைகளின் மறைவிடங்களிலும் மறைந்துள்ளாய்.
உன்னைப் பார்க்கவிடு,
உன் குரலைக் கேட்கவிடு,
உன் குரல் மிக இனிமையானது.
நீ மிக அழகானவள்” என்று கூறுகிறார்.
அவள் பெண்களுடன் பேசுகிறாள்
15திராட்சை தோட்டங்களை அழிக்கிற சிறு நரிகளையும்,
குழிநரிகளை எங்களுக்காக பிடியுங்கள்.
நம் திராட்சைத் தோட்டங்கள் இப்போது பூத்துள்ளன.
16என் நேசர் எனக்குரியவர்.
நான் அவருக்குரியவள்.
17பகல் தனது கடைசி மூச்சை சுவாசிக்கும்போதும்,
நிழல் சாயும்போதும், அவர் லீலி மலர்களுக்கிடையில் மேய்கிறார்.
என் அன்பரே திரும்பும்,
இரட்டைக் குன்றுகளின் பகுதிகளிலுள்ள வெளிமான்களைப் போலவும்,
குட்டி மான்களைப் போலவும் இரும்.
Currently Selected:
சாலொமோனின் உன்னதப்பாட்டு 2: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International