ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7
7
திருமணம்-ஒரு உதாரணம்
1சகோதர சகோதரிகளே! நீங்கள் அனைவரும் மோசேயின் சட்டவிதியைத் தெரிந்திருக்கிறீர்கள். ஒருவன் உயிரோடு இருக்கும்வரைதான் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகின்றது. 2நான் உங்களுக்கு ஒரு உதாரணத்தைச் சொல்லுகிறேன். ஒரு மணமான பெண் தன் கணவன் உயிரோடு இருக்கும்வரைதான் தன் கணவனோடு வாழ சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளாள். ஆனால் அவன் இறந்து போனால், அவள் திருமண விதிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறாள். 3தன் கணவன் உயிரோடு இருக்கும்போதே ஒரு பெண் இன்னொருவனை மணந்துகொண்டால் அவள் விபசாரம் என்னும் குற்றத்துக்கு ஆளாகிறாள் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அவளது கணவன் இறந்தபின் எல்லா திருமண விதிகளில் இருந்தும் அவள் சுதந்தரமாகிறாள். அப்போது அவள் இன்னொருவனை மணக்க விரும்பினால் அது விபசாரம் எனும் குற்றத்துக்கு ஆளாக்காது.
4சகோதர சகோதரிகளே! இதே வழியில், உங்கள் பழைய வாழ்வு இறந்து கிறிஸ்துவின் சரீரம் மூலம் சட்டத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்த மற்றவர்களோடு சேர்க்கப்படுகிறீர்கள். அதனால் தேவனுக்கு சேவைசெய்ய நாம் பயன்படமுடியும். 5முன்பு, நாம் நமது மாமிசத்தால் ஆளப்பட்டிருந்தோம். சட்டத்தால் பாவ இச்சைகள் நம்மிடம் தோன்றின. அவை நமது சரீர உறுப்புகள் மீது ஆட்சி செலுத்தியது. அது நமக்கு மரணத்தைக் கொடுத்தது. 6கடந்த காலத்தின் சட்டவிதிகள் நம்மைச் சிறைக் கைதிகளைப்போன்று வைத்திருந்தன. ஆனால் அந்தப் பழையவிதிகள் மறைந்துபோனது. நாமும் விதிகளினின்றும் விடுவிக்கப்பட்டோம். எனவே இப்போது புதிய வழியில் தேவனுக்கு சேவை செய்கிறோம். பழைய வழியில் சட்டவிதிக்குக் கட்டுப்பட்டு இருக்கவில்லை. இப்போது பரிசுத்த ஆவியானவரோடும் இருக்கிறோம்.
பாவத்துக்கு எதிரான போராட்டம்
7சட்டவிதியையும் பாவத்தையும் நான் ஒரே விதமாக நினைப்பதாக நீங்கள் எண்ணக் கூடும். அது உண்மையல்ல. ஆனால் சட்ட விதியின் மூலமாகவே நான் பாவமென்றால் என்னவென்று புரிந்துகொண்டேன். “பிறர் பொருள் மேல் ஆசைப்படாமல் இருங்கள்”#யாத். 20:17; உபா. 5:21 என்று சட்டவிதி சொல்லாமல் இருந்தால் அது பாவம் என்று எனக்கு தெரியாமல் போயிருக்கும். 8சகலவிதமான தவறான ஆசைகளையும் நான் விரும்புமாறு கட்டளையை உபயோகப்படுத்தும் ஒரு வழியை பாவம் கண்டுபிடித்தது. அக்கட்டளையின் மூலமாகவே பாவம் வந்து சேர்ந்தது. சட்டவிதி இல்லாவிட்டால் பாவத்துக்கு வல்லமை இல்லாமல் போகும். 9முன்பு சட்டங்கள் இல்லாதவனாய் இருந்தபோது நான் உயிர் உள்ளவனாய் இருந்தேன். சட்டவிதி வந்த பிறகு பாவம் உயிர் கொண்டது. 10பாவத்தால் நான் உள்ளத்தைப் பொருத்தமட்டில் மரித்தவன் ஆனேன். உயிர் கொடுப்பதற்காக வந்த சட்டவிதி எனக்கு மரணமுண்டாகக் காரணமானது. 11பாவமானது அந்த கட்டளையினாலே நேரம் பார்த்து என்னை வஞ்சித்து, அதன் மூலம் என்னைக் கொன்றது.
12சட்டவிதி தூய்மையானதுதான். கட்டளையும் கூட தூய்மையாகவும் சரியாகவும் நன்மையாகவும் இருக்கின்றன. 13அதனால் நன்மையானது எனக்கு இறப்புக்குரியதாயிற்றா? இல்லை. ஆனால் பாவமானது அந்நன்மையையும் தீமையாக்கி எனக்கு மரணத்தைக் கொண்டு வந்துவிட்டது. இதனால் பாவத்தின் இயல்பை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாவம் மிக மிகக் கொடுமையானதாகக் காட்டப்பட்டது. இதற்குப் பிரமாணமே பயன்பட்டது.
மனிதனுக்குள் முரண்பாடு
14சட்டவிதி ஆவிக்குரியது என நாம் அறிகிறோம். ஆனால் நான் அல்ல. ஒரு அடிமையின் மேல் ஆட்சி செலுத்துவதைப்போல பாவம் என்னை ஆளுகிறது. 15நான் செய்வது எனக்கே புரியவில்லை. நான் செய்ய விரும்பும் நல்ல காரியங்களை என்னால் செய்ய முடியவில்லை. நான் என்னால் வெறுக்கப்படும் தீயவற்றையே செய்கிறேன். 16நான் இப்படி விரும்பாததைச் செய்தவனாய் இருக்க, சட்ட விதியை நல்லது என நான் ஒத்துக்கொள்வதாக பொருள்படும். 17உண்மையில் நான் கெட்டவற்றை செய்பவனில்லை. ஆனால் என்னுள் இருக்கிற பாவம் அவ்வாறு செய்யத் தூண்டுகிறது. 18என்னிடத்தில் நன்மை வாழ்வதில்லை. இது எனக்குத் தெரியும். நன்மை செய்ய வேண்டும் என்னும் விருப்பம் என்னிடமுள்ளது. ஆனால் நன்மை செய்வதோ என்னிடத்தில் இல்லை. 19எனவே நான் விரும்புகிற நன்மையைச் செய்யவில்லை. நான் விரும்பாத தீமையையே செய்துவருகிறேன். 20அவ்வாறு எனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தால் நான் அல்ல, எனக்குள் இருக்கிற பாவம்தான் அப்படிச் செய்கிறது.
21அதனால் நன்மை செய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையே உண்டு என்ற விதியை அறிந்துகொண்டேன். 22என் மனதிற்குள், தேவனுடைய சட்டவிதியோடு மகிழ்ச்சியாய் இருக்கிறேன். 23ஆனால் வேறொரு விதியும் என் சரீரத்திற்குள் இயங்குவதை அறிகிறேன். என் மனம் ஒத்துக்கொள்ளும் விதிக்கு எதிராக அது ஒரு போரையே நிகழ்த்துகிறது. அதுதான் பாவம் பற்றிய விதி ஆகும். அது என் உடலை அடக்கி, அதன் கைதியாக்கிக்கொள்கின்றது. 24நான் நிர்ப்பந்தமான மனிதன். என்னை இந்த சரீரத்திடம் இருந்து யார் காப்பாற்றுவார்கள்? 25தேவனே காப்பாற்றுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு நன்றி சொல்கிறேன்.
ஆதலால் என் மனதார நான் தேவனுடைய சட்டவிதிக்கு சேவை செய்கிறேன். ஆனால் நான் மாமிசத் தன்மையால் பாவத்தின் சட்டத்திற்கு சேவை செய்கிறேன்.
Currently Selected:
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 7: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International