YouVersion Logo
Search Icon

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 16

16
தேவ கோபத்தின் கிண்ணங்கள்
1பிறகு, நான் ஆலயத்தில் இருந்து ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன். அக்குரல் ஏழு தேவ தூதர்களிடம் “தேவனுடைய கோபத்தை பூமியின் மீது சென்று ஊற்றுங்கள்” என்றது.
2முதல் தேவதூதன் போனான். அவன் தன் கிண்ணத்தில் இருந்ததை பூமியில் ஊற்றினான். பிறகு மிருகத்தின் அடையாளத்தை உடையவர்களும் அதன் உருவச்சிலையை வணங்கியவர்களுமாகிய மக்கள் அனைவருக்கும் அசிங்கமானதும் வேதனைமிக்கதுமான கொப்புளங்கள் உண்டாயின.
3இரண்டாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைக் கடலில் வீசினான். உடனே கடல் இறந்து போனவனின் இரத்தத்தைப் போலானது. கடலில் இருந்த ஒவ்வொரு உயிரினமும் இறந்தது.
4மூன்றாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை நதிகளிலும், நீர் ஊற்றுக்களிலும் வீசி எறிந்தான். அதனால் நதிகளும், நீர் ஊற்றுகளும் இரத்தமாயிற்று. 5நீரின் தூதன் தேவனிடம் கூறுவதைக் கேட்டேன்: அவன்,
“எப்பொழுதும் இருக்கிறவரும் இருந்தவரும் நீர் ஒருவரே.
பரிசுத்தமான ஒருவரும் நீரே.
நீர் செய்த இந்நியாயத்தீர்ப்புகளில் நீர் நீதிமானாக இருக்கிறீர்.
6உம்முடைய பரிசுத்தவான்களின் இரத்தத்தையும் உம்முடைய தீர்க்கதரிசிகளின் இரத்தத்தையும் மக்கள் சிந்தினர்.
அதனால் இப்பொழுது அவர்கள் குடிக்க இரத்தத்தையே கொடுத்தீர்கள்.
அவர்களுக்குத் தகுதியானது இதுவே”
என்று கூறினான்.
7அதற்கு பலிபீடமானது,
“ஆம், சர்வவல்லமைமிக்க தேவனாகிய கர்த்தாவே,
உம் நியாயத்தீர்ப்புகள் உண்மையும் நீதியுமானவை”
என்று சொல்வதைக் கேட்டேன்.
8நான்காவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததைச் சூரியன் மீது போட்டான். அதனால் சூரியன் மக்களை நெருப்பாய் எரிக்கும் சக்தியைப் பெற்றது. 9மக்கள் பெரு வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். அவர்கள் தேவனுடைய பெயரை சபித்தார்கள். இது போன்ற துன்பங்களை எல்லாம் கட்டுப்படுத்தக் கூடியவர் தேவன் ஒருவரே ஆவார். ஆனால் மக்களோ தங்கள் இதயத்தையும் வாழ்வையும் மாற்றி தேவனுக்கு மகிமை செலுத்த மறுத்தனர்.
10ஐந்தாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றை மிருகத்தின் சிம்மாசனத்தின்மீது எறிந்தான். அதனால் மிருகத்தின் இராஜ்யம் இருண்டுபோனது. மக்கள் வேதனையால் தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டனர். 11மக்கள் தம் வலியின் நிமித்தமாகவும் தம் கொப்புளங்களின் நிமித்தமாகவும் பரலோகத்தின் தேவனை சபித்தார்கள். ஆனால் அவர்கள் தங்கள் மனதை மாற்றிக்கொள்ளவோ, தங்கள் தீய செயல்களில் இருந்து விலகவோ விரும்பவில்லை.
12ஆறாம் தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்ததை ஐபிராத்து என்னும் பெரிய ஆற்றில் எறிந்தான். அதிலுள்ள நீர் வற்றிப்போனது. அதனால் கீழ்நாட்டில் உள்ள ராஜாக்கள் வர வழி தயார் ஆயிற்று. 13பின்பு நான், தவளைபோல தோற்றம் அளித்த மூன்று அசிங்கமான கெட்ட ஆவிகளைக் கண்டேன். இராட்சச பாம்பின் வாயிலிருந்தும், மிருகத்தின் வாயிலிருந்தும், போலித் தீர்க்கதரிசியின் வாயில் இருந்தும் அவை வெளி வந்தன. 14இந்தக் கெட்ட ஆவிகளே பிசாசுகளின் ஆவிகள். அவை அற்புதங்களைச் செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. அவை உலகிலுள்ள அத்தனை ராஜாக்களிடமும் செல்கின்றன. சர்வவல்லமையுள்ள தேவனின் மாபெரும் நாளின் யுத்தத்திற்கு ராஜாக்களை ஒன்று திரட்ட அவை வெளியே செல்கின்றன.
15“கவனியுங்கள். ஒரு திருடனைப்போல நான் வருவேன். எவன் விழித்துக்கொண்டும், தன்னுடன் தன் ஆடைகளை வைத்துக்கொண்டும் இருக்கிறானோ அவன் மகிழ்ச்சியாய் இருப்பான். பிறகு அவன் நிர்வாணமாக அலையமாட்டான். மற்றவர்கள் பார்வையில் வெட்கப்படாமல் இருப்பான்.”
16கெட்ட ஆவிகள் ராஜாக்களை ஓரிடத்தில் ஒன்று சேர்த்தன. அந்த இடத்தின் பெயர் எபிரேய மொழியில் அர்மெகதோன் என்று அழைக்கப்படுகிறது.
17ஏழாவது தேவதூதன் தன் கிண்ணத்தில் இருந்தவற்றைக் காற்றில் தூவினான். அதனால் ஆலயத்திலுள்ள சிம்மாசனத்தில் இருந்து ஒரு பெரும் குரல் ஒலித்தது. அது, “அது முடிந்தது” என்று சொன்னது. 18பிறகு மின்னல்கள் மின்னின, ஓசைகள் எழுந்தன, இடி முழங்கியது. பூமி அதிர்ந்தது. பூமியில் மனிதர்கள் படைக்கப்பட்ட பிறகு உருவான நில அதிர்ச்சியிலேயே இதுதான் மிக மோசமான நில அதிர்ச்சி. 19மிகப் பெரிய அந்த நகரம் மூன்றாகப் பிளந்துபோயிற்று. நாடுகளில் உள்ள நகரங்கள் அழிந்துபோயின. தேவன் மகா நகரமாகிய பாபிலோனைத் தண்டிக்க மறக்கவில்லை. அந்த நகரத்துக்கு அவர் தனது கடுமையான கோபமாகிய மது நிறைந்த கோப்பையைக் கொடுத்தார். 20எல்லா தீவுகளும் மறைந்தன. மலைகள் எல்லாம் இல்லாமல் போயின. 21இராட்சசத்தனமான கல்மழை வானில் இருந்து மக்கள் மீது பெய்தது. ஒவ்வொரு மழைக்கல்லும் ஒரு உப்பு மூட்டையினைப் போன்று கனத்திருந்தது. இந்தப் பெருந்துன்பத்தால் மக்கள் தேவனை மேலும் சபித்தார்கள். இத்துன்பம் மகா துன்பமாய் இருந்தது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in