YouVersion Logo
Search Icon

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் 10

10
தேவதூதனும் ஒரு சிறு தோல்சுருளும்
1பிறகு நான் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த ஒரு பலமுள்ள தேவதூதனைக் கண்டேன். அவனை மேகங்கள் ஆடையைப்போல சுற்றியிருந்தன. அவனது தலையைச் சுற்றி வானவில் இருந்தது. அவனது முகம் சூரினைப் போன்று இருந்தது. அவனது கால்களோ நெருப்புத் தூண்களைப் போன்று விளங்கின. 2அந்தத் தூதன் தன் கையில் சிறு தோல் சுருள் ஒன்றை வைத்திருந்தான். அத்தோல்சுருள் திறந்திருந்தது. அத்தூதன் தன் வலதுகாலைக் கடலிலும் இடது காலை பூமியிலும் வைத்தான். 3சிங்கம் கெர்ச்சிப்பதைப்போன்று அத்தூதன் சத்தமிட்டான். பின் ஏழு இடிகளும் சத்தமாக முழங்கின.
4அந்த ஏழு இடிகளும் சொல்லச் சொல்ல நான் எழுதத் தொடங்கினேன். ஆனால் அப்போது பரலோகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அது “ஏழு இடிகளும் சொல்வதை நீ எழுதாதே. அவற்றை இரகசியமாய் மூடிவை” என்று சொன்னது.
5கடலின் மேலும் பூமியின் மேலும் நின்றுகொண்டிருந்த தேவ தூதன் தன் கையைப் பரலோகத்துக்கு நேராக உயர்த்தியதைப் பார்த்தேன். 6எல்லாக் காலங்களிலும் ஜீவிக்கிற தேவனின் வல்லமையால் அத்தூதன் ஆணையிட்டான். தேவனே வானத்தையும் அதில் உள்ளவற்றையும் படைத்தவர். அவரே பூமியையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்தவர். அவரே கடலையும் அதில் உள்ளவற்றையும் படைத்தவர். அந்தத் தூதன், “இனி தாமதம் இருக்காது! 7ஏழாம் தூதன் எக்காளத்தை ஊதத் தயாராக இருக்கும் நாட்களில் தேவனுடைய இரகசியத் திட்டம் நிறைவேறும். தேவன் தன் ஊழியக்காரரிடமும், தீர்க்கதரிசிகளிடமும் கூறிய நற்செய்தி தான் அத்திட்டம்” என்றான்.
8மீண்டும் அதே குரலை நான் பரலோகத்திலிருந்து கேட்டேன். அக்குரல் என்னிடம், “போ, அத்தூதன் கையில் உள்ள திறந்திருக்கும் தோல் சுருளை வாங்கிக்கொள். கடலிலும், பூமியிலும் நிற்கிற தூதனே இவன்” என்றது.
9எனவே, நான் அத்தூதனிடம் சென்று அச்சிறு தோல்சுருளைத் தருமாறு கேட்டேன். அத்தூதன் என்னிடம் “இத்தோல் சுருளை எடுத்துத் தின்று விடு. இது உன் வயிற்றில் கசப்பாக இருக்கும் ஆனால் உன் வாயில் இது தேனைப் போன்று இனிக்கும்”, என்றான். 10அதனால் தூதனின் கையில் இருந்து அச்சிறு தோல் சுருளை நான் வாங்கினேன். அதனை நான் தின்றேன். அது என் வாயில் தேனைப் போன்று இனித்தது. ஆனால் அது என் வயிற்றுக்குப் போனதும் கசந்தது. 11அப்போது அவன் என்னிடம் “நீ மறுபடியும் பல்வேறு இனங்கள், நாடுகள், மொழிகள், ராஜாக்கள் ஆகியோரைப் பற்றித் தீர்க்கதரிசனம் சொல்ல வேண்டும்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in