YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 9

9
முத்லபேன் என்ற இசைக்கருவியில் வாசிக்க இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
1என் முழு இருதயத்தோடும் நான் கர்த்தரைத் துதிப்பேன்.
கர்த்தாவே, நீர் செய்த எல்லா அற்புதமான காரியங்களையும் நான் எடுத்துக் கூறுவேன்.
2நீர் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறீர்.
உன்னதமான தேவனே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
3என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள்.
ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள்.
4நீர் நல்ல நீதிபதி. உமது சிங்காசனத்தில் நீதிபதியாக அமர்ந்தீர்.
கர்த்தாவே, என் வழக்கைக் கேட்டீர்.
எனக்குரிய நீதியான முடிவை அளித்தீர்.
5பிற ஜனங்களை நீர் கண்டித்தீர் கர்த்தாவே, நீர் அந்தத் தீயோரை அழித்தீர்.
உயிருள்ள ஜனங்களின் பட்டியலிலிருந்து என்றென்றும் அவர்கள் பெயரை அகற்றினீர்.
6பகைவன் ஒழிக்கப்பட்டான்!
கர்த்தாவே, அவர்கள் நகரங்களை அழித்தீர், அழிந்த கட்டிடங்களே இன்று உள்ளன.
அத்தீயோரை நினைவுபடுத்த எதுவும் இன்று இல்லை.
7ஆனால் கர்த்தர் என்றென்றும் அரசாளுவார்.
கர்த்தர் அவர் அரசை வலுவாக்குவார்.
உலகிற்கு நியாயத்தை வழங்க அவர் இதைச் செய்தார்.
8உலகில் உள்ள எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் நியாயமான தீர்ப்பு வழங்குவார்.
எல்லா நாடுகளுக்கும் நீதியோடு தீர்ப்பு வழங்குவார்.
9பல குழப்பங்கள் இருப்பதால் பல ஜனங்கள் அகப்பட்டுக் காயமுற்றனர்.
அவர்கள் தங்கள் துன்பங்களின் பாரத்தால் நசுங்குண்டு போயினர்.
கர்த்தாவே, நீர் அவர்களுக்கு அடைக்கலமாயிரும்.
10உமது நாமத்தை அறிந்த ஜனங்கள் உம்மை நம்பவேண்டும்.
கர்த்தாவே, ஜனங்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு உதவாது விடமாட்டீர்.
11சீயோனில் வாழும் ஜனங்களே கர்த்தரைத் துதித்துப் பாடுங்கள்.
கர்த்தர் செய்த பெரிய காரியங்களை தேசங்களில் கூறுங்கள்.
12உதவிநாடிப் போனோரை கர்த்தர் நினைவு கூருவார்.
அந்த ஏழை ஜனங்கள் உதவிக்காக அவரிடம் சென்றனர்.
கர்த்தர் அவர்களை மறக்கவில்லை.
13நான் தேவனிடம் இந்த ஜெபத்தைக் கூறினேன்:
“கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும்.
பாரும், என் பகைவர்கள் என்னைத் தாக்குகிறார்கள்.
‘மரணவாசலில்’ இருந்து என்னைக் காப்பாற்றும்.
14அப்போது கர்த்தாவே, எருசலேமின் வாசல்களில் நான் உம்மைத் துதித்துப் பாடக்கூடும்.
என்னை நீர் காப்பாற்றியதால் நான் மிகவும் மகிழ்ச்சிகொள்வேன்.”
15பிறரை அகப்படுத்த யூதரல்லாத ஜனங்கள் குழிகளைத் தோண்டினார்கள்.
அக்குழிகளில் அவர்களே வீழ்ந்தனர்.
பிறரை அகப்படுத்த வலைகளை விரித்தனர். அவ்வலைகளில் அவர்களே சிக்குண்டனர்.
16கர்த்தர் அத்தீயோரைப் பிடித்தார்.
தீயவை செய்வோரை கர்த்தர் தண்டிப்பாரென அந்த ஜனங்கள் அறிந்துகொண்டனர்.
17தேவனை மறக்கும் ஜனங்கள் தீயோர்கள்.
அந்த ஜனங்கள் மரணத்தின் இடங்களுக்குச் செல்வார்கள்.
18துன்பப்பட்ட ஜனங்களை தேவன் மறந்துவிட்டாரென சில நேரங்களில் தோன்றும்.
அந்த ஏழைகள் நம்பிக்கையிழக்கும் நிலை வந்ததென்று தோன்றும்.
ஆனால் தேவன் அவர்களை என்றென்றும் மறப்பதில்லை.
19கர்த்தாவே, எழுந்து தேசங்களை நியாந்தீரும்.
தாங்கள் வல்லமை மிகுந்தோரென ஜனங்கள் தங்களை நினையாதபடி செய்யும்.
20ஜனங்களுக்குப் பாடம் கற்பியும்.
அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in