YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 22

22
“உதயத்தின் மான்” என்னும் இராகத்தில் இசைப்பதற்கு இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.
1என் தேவனே, என் தேவனே!
ஏன் என்னைக் கைவிட்டீர்?
என்னை மீட்பதற்கு இயலாதபடி வெகு தூரத்திற்குச் சென்றீர்!
உதவிவேண்டிக் கதறும் என் குரலைக் கேளாதபடி வெகு தூரத்தில் இருக்கிறீர்!
2என் தேவனே, பகல் பொழுதில் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தரவில்லை.
இரவிலும் தொடர்ந்து உம்மைக் கூப்பிட்டேன்.
3தேவனே, நீர் பரிசுத்தர்.
நீர் ராஜாவைப்போல் அமர்கிறீர்.
கர்த்தாவே, உமது சிங்காசனம் இஸ்ரவேலின் துதிகளின் மத்தியில் உள்ளது.
4எங்கள் முற்பிதாக்கள் உம்மை நம்பினார்கள்.
ஆம் தேவனே, அவர்கள் உம்மை நம்பினார்கள்.
நீர் அவர்களை மீட்டீர்.
5தேவனே, எங்கள் முற்பிதாக்கள் உதவிக்காய் உம்மை அழைத்தனர்.
அவர்கள் பகைவர்களிடமிருந்து தப்பித்தனர்.
அவர்கள் உம்மை நம்பினார்கள். அவர்கள் ஏமாந்து போகவில்லை.
6நான் மனிதனன்றி, புழுவா?
ஜனங்கள் என்னைக் கண்டு வெட்கினார்கள்.
ஜனங்கள் என்னைப் பழித்தனர்.
7என்னைப் பார்ப்போர் பரிகாசம் செய்தனர்.
அவர்கள் தலையை அசைத்து, உதட்டைப்பிதுக்கினர்.
8அவர்கள் என்னை நோக்கி, “நீ கர்த்தரிடம் உதவிகேள்.
அவர் உன்னை மீட்கக்கூடும்.
உன்னை அவர் மிகவும் நேசித்தால், அவர் உன்னை நிச்சயம் காப்பாற்றுவார்!” என்றார்கள்.
9தேவனே, நான் உம்மை முற்றிலும் சார்ந்திருக்கிறேன் என்பதே உண்மை.
நான் பிறந்த நாளிலிருந்தே என்னைக் காப்பாற்றி வருகிறீர்.
என் தாயிடம் பால் பருகும் காலத்திலிருந்தே நீர் உறுதியான நம்பிக்கையை தந்து எனக்கு ஆறுதல் அளித்தீர்.
10நான் பிறந்த நாளிலிருந்தே நீரே என் தேவன்.
என் தாயின் உடலிலிருந்து வெளி வந்தது முதல் உமது பாதுகாப்பில் நான் வாழ்கிறேன்.
11எனவே, தேவனே, என்னை விட்டு நீங்காதிரும்!
தொல்லை அருகே உள்ளது, எனக்கு உதவுவார் எவருமில்லை.
12ஜனங்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர்.
முரட்டுக் காளைகள்போல் என்னைச் சுற்றிலும் இருக்கின்றனர்.
13கெர்ச்சித்துக்கொண்டு விலங்கைக் கிழித்துண்ணும் சிங்கத்தைப்போல்
அவர்கள் வாய்கள் திறந்திருக்கின்றன.
14நிலத்தில் ஊற்றப்பட்ட நீரைப்போன்று என் வலிமை அகன்றது.
என் எலும்புகள் பிரிக்கப்பட்டிருந்தன. என் தைரியம் மறைந்தது.
15உடைந்த மண்பாண்டத்தின் துண்டைப் போன்று என் வாய் உலர்ந்து போயிற்று.
என் வாயின் மேலண்ணத்தில் என் நாவு ஒட்டிக் கொண்டது.
“மரணத் தூளில்” நீர் என்னைப் போட்டீர்.
16“நாய்கள்” என்னைச் சூழ்ந்திருக்கின்றன.
தீயோர் கூட்டத்தின் கண்ணியில் விழுந்தேன்.
சிங்கத்தைப்போன்று என் கைகளையும் கால்களையும் அவர்கள் கிழித்தெறிந்தார்கள்.
17என் எலும்புகளை நான் காண்கிறேன்.
ஜனங்கள் என்னை முறைத்தனர்!
அவர்கள் என்னைக் கவனித்துக்கொண்டேயிருக்கிறார்கள்!
18அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள்.
19கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்!
20கர்த்தாவே, என் உயிரை வாளுக்குத் தப்புவியும்.
அந்த நாய்களிடமிருந்து அருமையான என் உயிரை மீட்டருளும்.
21சிங்கத்தின் வாயிலிருந்து என்னை விடுவியும்.
காளையின் கொம்புகளுக்கு என்னைத் தப்புவியும்.
22கர்த்தாவே, என் சகோதரர்களுக்கு உம்மைப் பற்றிச் சொல்லுவேன்.
பெரும் சபைகளில் நான் உம்மைத் துதிப்பேன்.
23கர்த்தரைத் துதியுங்கள். ஜனங்களே!
அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
இஸ்ரவேலின் சந்ததியினரே, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்.
இஸ்ரவேலின் எல்லா ஜனங்களே, கர்த்தருக்குப் பயந்து அவரை மதியுங்கள்.
24தொல்லைகளில் உழலும் ஏழைகளுக்கு கர்த்தர் உதவுகிறார்.
கர்த்தர் அவர்களைக் குறித்து வெட்கப்படுவதில்லை.
கர்த்தர் அவர்களை வெறுப்பதில்லை.
கர்த்தரிடம் ஜனங்கள் உதவி கேட்கையில் அவர்களைக் கண்டு அவர் ஒளிப்பதில்லை.
25கர்த்தாவே, மகாசபையில் எனது வாழ்த்துதல்கள் உம்மிடமிருந்தே வருகின்றன.
உம்மைத் தொழுதுகொள்வோர் முன்பாக, நான் உமக்குச் சொன்ன வாக்குறுதியான பலிகளைச் செலுத்துவேன்.
26ஏழைகள் உண்டு திருப்தியுறுவார்கள்.
கர்த்தரைத் தேடிவரும் ஜனங்களே, அவரைத் துதியுங்கள்.
உங்கள் இருதயம் என்றென்றும் மகிழ்வதாக!
27தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும்.
எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும்.
28ஏனெனில் கர்த்தரே ராஜா.
அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.
29பெலமுள்ள, ஆரோக்கியமான ஜனங்கள் உண்டு, தேவனுக்குமுன் வணங்கியிருக்கிறார்கள்.
எல்லா ஜனங்களும், ஏற்கெனவே இறந்தவரும், மரிக்கப் போவோரும் தேவனுக்கு முன்பாக நாம் ஒவ்வொருவரும் குனிந்து வணங்குவோம்.
30வருங்காலத்தில், நம் சந்ததியினர் கர்த்தருக்குச் சேவை செய்வார்கள்.
என்றென்றும் ஜனங்கள் அவரைக் குறித்துச் சொல்வார்கள்.
31பிறக்கவிருக்கும் பிள்ளைகளுக்கு அவர்கள் தேவனுடைய நன்மையைச் சொல்வார்கள்.
தேவன் உண்மையாகச் செய்த நல்ல காரியங்களை அவர்கள் சொல்வார்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in