YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 106

106
1கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!
2உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.
ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.
3தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.
எப்போதும் அந்த ஜனங்கள் நல்ல காரியங்களையே செய்கிறார்கள்.
4கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது
என்னை நினைவுகூர்ந்து இரட்சியும்.
5கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு
நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும்.
என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும்.
உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.
6எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.
நாங்கள் தவறு செய்தோம், நாங்கள் தீயவற்றைச் செய்தோம்.
7கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை.
செங்கடலின் அருகே எங்கள் முற்பிதாக்கள் உமக்கெதிராகத் திரும்பினார்கள்.
8ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார்.
அவரது மிகுந்த வல்லமையைக் காட்டும் பொருட்டு தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
9தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது.
ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார்.
10தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார்.
அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார்.
11தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார்.
அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை.
12அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள்.
அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள்.
13ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள்.
அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.
14பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று.
மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.
15ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார்.
கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.
16ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள்.
அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆசாரியனாகிய ஆரோனிடம் பொறாமை கொண்டார்கள்.
17எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார்.
தரை பிளந்து தாத்தானை விழுங்கியது.
தரை ஒன்று சேர்ந்தபோது அபிராமின் கூட்டத்தாரை மூடிக்கொண்டது.
18பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது.
அத்தீயோரை நெருப்பு எரித்தது.
19ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள்.
அவர்கள் ஒரு சிலையைத் தொழுதுகொண்டார்கள்.
20அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக
மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
21தேவன் நமது முற்பிதாக்களைக் காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் அவரை முற்றிலும் மறந்துபோனார்கள்.
எகிப்தில் அதிசயங்கள் செய்த தேவனை அவர்கள் மறந்துபோனார்கள்.
22காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார்.
செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.
23தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார்.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரைத் தடுத்தான்.
மோசே தேவன் தேர்ந்தெடுத்த பணியாள்.
தேவன் மிகுந்த கோபங்கொண்டார், ஆனால் மோசே தடுத்து, தேவன் ஜனங்களை அழிக்காதபடி செய்தான்.
24ஆனால் பின்பு அந்த ஜனங்கள் அற்புதமான கானான் தேசத்திற்குள் நுழைய மறுத்தார்கள்.
தேவன் அத்தேசத்தில் வாழும் ஜனங்களை முறியடிப்பதில் அவர்களுக்கு உதவுவார் என்பதை அவர்கள் நம்பவில்லை.
25அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி
தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
26எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள்
என்று தேவன் சபதமிட்டார்.
27அவர்கள் சந்ததியினரை அந்நியர் தோற்கடிக்க அனுமதிப்பதாக தேவன் கூறினார்.
தேசங்களிலெல்லாம் நம் முற்பிதாக்களைச் சிதறடிப்பதாக தேவன் ஆணையிட்டார்.
28பின்பு பாகால்பேயோரில், தேவனுடைய ஜனங்கள் பாகாலைத் தொழுதுகொள்ள கூடினார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தீய விருந்துகளில் கலந்து மரித்தோரைப் பெருமைப்படுத்தும் பலிகளை உண்டார்கள்.
29தமது ஜனங்களிடம் தேவன் மிகுந்த கோபமடைந்தார்.
தேவன் அவர்களை மிகவும் நோயுறச் செய்தார்.
30ஆனால் பினெகாஸ் தேவனிடம் ஜெபம் செய்தான்.
தேவன் அந்நோயைத் தடுத்தார்.
31பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார்.
தேவன் நோயைத் தடுத்தார்.
தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.
32மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர்.
மோசே தவறு செய்வதற்கு ஜனங்கள் காரணமாயினர்.
33மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர்.
எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.
34கானானில் வாழும் பிற தேசத்தினரைத் தோற்கடிக்குமாறு கர்த்தர் ஜனங்களுக்குக் கூறினார்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
35அவர்கள் பிற ஜனங்களோடு கலந்தார்கள்.
அந்த ஜனங்கள் செய்தவற்றையெல்லாம் செய்தார்கள்.
36தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் கண்ணியாக அமைந்தார்கள்.
பிறஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களை அவர்களும் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
37தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று
பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.
38தேவனுடைய ஜனங்கள் களங்கமற்றோரைக் கொன்றார்கள்.
அவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையேக் கொன்று அவர்களைப் பொய் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
39எனவே தேவனுடைய ஜனங்கள் பிற ஜனங்களின் பாவங்களால் அழுக்கடைந்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தங்கள் தேவனிடம் அவநம்பிக்கை கொண்டு, பிறர் செய்த காரியங்களையேச் செய்தார்கள்.
40தேவன் அவரது ஜனங்களிடம் கோபங்கொண்டார்.
தேவன் அவர்களிடம் வெறுப்படைந்தார்.
41தேவன் அவரது ஜனங்களைப் பிற தேசத்தாரிடம் கொடுத்தார்.
தேவன் அவர்களது பகைவர்கள் அவர்களை ஆளுமாறு செய்தார்.
42தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு
அவர்களின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தார்கள்.
43தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் தேவனுக்கெதிராகத் திரும்பி, தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் பற்பல தீயகாரியங்களைச் செய்தார்கள்.
44ஆனால் தேவனுடைய ஜனங்கள் துன்பத்திலிருந்தபோதெல்லாம் தேவனிடம் உதவிக்காக ஜெபித்தனர்.
ஒவ்வொரு முறையும் தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுத்தார்.
45தேவன் எப்போதும் அவரது உடன்படிக்கையை நினைவுக்கூர்ந்து
தமது மிகுந்த அன்பினால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
46பிற தேசத்தார் அவர்களைச் சிறைவாசிகளாக்கினார்கள்.
ஆனால் தம் ஜனங்களிடம் அவர்கள் இரக்கம் காட்டும்படி தேவன் செய்தார்.
47நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார்.
எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்,
எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.
48இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும், தேவன் எப்போதும் வாழ்கிறவர்.
அவர் என்றென்றும் வாழ்வார்.
எல்லா ஜனங்களும், “ஆமென்!”
கர்த்தரைத் துதியுங்கள் என்று சொல்லக்கடவர்கள்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in