நீதிமொழிகள் 1
1
முகவுரை
1இவை தாவீதின் குமாரனான சாலொமோன் கற்பித்த ஞான போதனைகள். சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவாக இருந்தான். 2ஜனங்கள் புத்திசாலிகளாக இருக்கும்பொருட்டும், செய்யத்தக்க நேர்மையான காரியங்களைச் செய்யும்பொருட்டும் இந்த ஞானவார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன. இந்த வார்த்தைகள், ஜனங்கள் ஞான போதனைகளைப் புரிந்துகொள்ள உதவும். 3இந்த ஞானவார்த்தைகள் ஜனங்களுக்குத் தங்களுடைய மனம் நேர்மையான வழியில் செல்ல போதிக்கும். ஜனங்கள் நேர்மையோடும், நியாயத்தோடும் நல்லவர்களாகவும் தங்கள் புத்தியைச் சரியான வழியில் செலுத்த இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். 4ஞானத்தை அடைய விரும்பும் ஜனங்களுக்கு இந்த ஞானவார்த்தைகள் போதிக்கும். இந்த ஞானவார்த்தைகள் இளந்தலைமுறையினருக்கு அவர்கள் அறிய வேண்டியவற்றையும் அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைக் குறித்தும் போதிக்கும். 5அறிவாளிகள்கூட இந்த வார்த்தைகளைக் கவனிக்கவேண்டும். இதை அவர்கள் கற்று மேலும் ஞானிகளாவார்கள். பிரச்சனைகளைச் சரிசெய்துகொள்ளும் திறமைகொண்ட ஜனங்கள் இவற்றின்மூலம் மேலும் புரிந்துகொள்ளும் திறமையைப் பெறலாம். 6பின்னர் நீதிக்கதைகளையும், அதன் அர்த்தங்களையும் அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும். அறிவாளிகள் சொல்வதை அந்த ஜனங்களால் புரிந்துகொள்ள முடியும்.
7ஒருவன் செய்யவேண்டிய முதலாவது காரியம், கர்த்தருக்கு கனம் செலுத்துவதையும் அவருக்குக் கீழ்ப்படிவதையும் கற்றுக்கொள்ளவேண்டும். அது தம்மை உண்மையான ஞானத்தைப்பெற வழிநடத்தும். ஆனால், தீய ஜனங்கள் உண்மையான ஞானத்தையும் ஒழுக்கத்தையும் வெறுக்கிறார்கள்.
சாலொமோன் தன் குமாரனுக்குச் சொன்ன அறிவுரை
8என் மகனே! உன் தந்தை உன்னை திருத்தும்போது கீழ்ப்படியவேண்டும். நீ உன் தாயின் போதனைகளையும் தள்ளிவிடவேண்டாம். 9உனது தாயும் தந்தையும் சொல்லுகிற வார்த்தைகள் உன் தலைக்கு அலங்காரமான கிரீடமாக இருக்கும். அவை உன் கழுத்துக்கு அழகான மாலையாக விளங்கும்.
10என் மகனே! பாவத்தை விரும்புகிறவர்கள், அவர்கள் உன்னையும் தீயசெயல்களை செய்யும்படி தூண்டுவார்கள். நீ அவர்களைப் பின்பற்றக் கூடாது. 11அந்தப் பாவிகள் உன்னிடம், “எங்களோடு வா, நாம் ஒளித்திருப்போம். ஒன்றும் அறியாதவர்களைக்கொல்லும்படிக் காத்திருப்போம். 12நாம் அவர்களை மரண இடத்திற்கு அனுப்புவோம். நாம் அவர்களை அழித்து கல்லறைக்கு அனுப்புவோம். 13நாம் விலைமதிப்புள்ள உயர்ந்த பொருட்களையெல்லாம் திருடுவோம். நாம் இவற்றால் நம் வீடுகளை நிரப்புவோம். 14எனவே எங்களோடு வா. இவற்றைச் செய்ய உதவு. இதில் கிடைப்பதை நாம் பங்கிட்டுக்கொள்வோம்” என்பார்கள்.
15என் மகனே அவர்களைப் பின்பற்றிச் செல்லாதே. அவர்கள் வாழ்கிற வாழ்க்கை முறையில் ஒரு அடிகூட எடுத்து வைக்காதே. 16அந்தத் தீயவர்கள் எப்பொழுதும் தீமை செய்யவே தயாராக இருப்பார்கள். எப்பொழுதும் அவர்கள் ஜனங்களைக்கொல்வதையே விரும்புவார்கள்.
17ஜனங்கள் வலையை விரித்துப் பறவைகளைப் பிடிக்கிறார்கள். ஆனால் பறவைகள் கவனித்துக்கொண்டிருக்கும்போது அதனைப் பிடிக்க வலையை விரிப்பது வீண். 18அந்தத் தீயவர்கள் மறைந்துகொண்டு மற்றவர்களைக்கொல்ல வலை விரிப்பார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் தங்களுக்காகவே வலையை விரிக்கிறார்கள். அவர்கள் தம் சொந்த வலையாலேயே அழிந்து போவார்கள். 19பேராசை உடையவர்கள் எப்பொழுதும் அதனாலேயே அழிந்துபோவார்கள்.
நல்ல பெண்மணியான ஞானம்
20கவனியுங்கள்! ஞானம் ஜனங்களுக்குப் போதிக்க முயற்சி செய்கிறாள். வீதிகளிலும் சந்தையிலும் நின்று அவள் (ஞானம்) சத்தமிடுகிறாள். 21அவள் நெரிசலான தெருமுனைகளில் நின்று கூப்பிடுகிறாள். நகர வாசல் அருகில் நின்றுகொண்டு ஜனங்கள் தன்னைக் கவனிக்கும்படி முயற்சி செய்கிறாள்.
22ஞானம் சொல்கிறதாவது, “நீங்கள் முட்டாள்கள், நீங்கள் தொடர்ந்து எவ்வளவுகாலம் முட்டாள்தனமாக செயல்படுவீர்கள்? நீங்கள் எவ்வளவு காலம் ஞானத்தைக் கேலிச் செய்வீர்கள்? நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலத்துக்கு அறிவை வெறுப்பீர்கள்? 23நீங்கள் எனது ஆலோசனைகளையும், போதனைகளையும் கேட்டிருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் நான் உங்களுக்குச் சொல்லியிருந்திருப்பேன். என் அறிவையெல்லாம் உங்களுக்கு வழங்கியிருந்திருப்பேன்.
24“நான் சொல்வதைக் கவனிக்க நீங்கள் மறுத்துவிட்டீர்கள். நான் உதவ முயன்றேன். நான் கைகொடுக்க வந்தேன். ஆனால் என் உதவியை ஏற்க மறுத்துவிட்டீர்கள். 25எனது அறிவுரைகளைக் கேட்காமல் நீங்கள் திரும்பிக்கொண்டீர்கள். என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள மறுத்தீர்கள். 26எனவே, உங்கள் துன்பத்தைக் கண்டு நான் சிரிப்பேன். உங்களுக்குத் துன்பம் வருவதைப் பார்த்து நான் மகிழ்ச்சி அடைவேன். 27ஒரு கொடிய புயலைப்போன்று பெருந்துன்பம் உங்களுக்கு வரும். பெருங்காற்றைப்போன்று அது உங்கள் மேல் மோதும். உங்கள் துன்பமும் கவலைகளும் உங்கள் மேல் சுமையாக அழுத்தும்.
28“இவையெல்லாம் நடக்கும்போது நீங்கள் என்னை உதவிக்காக அழைப்பீர்கள். ஆனால் நான் உதவிசெய்யமாட்டேன். என்னை நீங்கள் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டு பிடிக்க முடியாது. 29நீங்கள் என் அறிவை விரும்பாததால் நான் உதவி செய்யமாட்டேன். நீங்கள் கர்த்தருக்குப் பயப்படவும் அவரை மதிக்கவும், கனப்படுத்தவும் மறுத்தீர்கள். 30நீங்கள் என்னுடைய அறிவுரைகளைக் கேட்க மறுத்தீர்கள். நான் உங்களுக்குச் சரியான பாதையைக் காட்டியபோது நீங்கள் கேட்கவில்லை. 31நீங்கள் உங்கள் சொந்த வழியிலேயே செயல்களைச் செய்தீர்கள். நீங்கள் உங்கள் சொந்த ஆலோசனையைப் பின்பற்றினீர்கள். உங்கள் சொந்த செய்கைகளினால் வந்த விளைவுகளை நீங்கள் இப்பொழுது ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
32“முட்டாள்கள் அறிவைப் பின்பற்ற மறுப்பதால் மரணமடைவார்கள். தங்கள் முட்டாள்தனமான பாதையில் தொடர்ந்து செல்வதில் அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். இது அவர்களை அழித்துவிடும். 33ஆனால் எனக்குக் கீழ்ப்படிகிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவன் வசதியாக இருப்பான். அவன் தீமைக்குப் பயப்படவேண்டியதில்லை.”
Currently Selected:
நீதிமொழிகள் 1: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International