YouVersion Logo
Search Icon

பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4

4
செய்யத்தக்க சில
1என்னுடைய அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களை நேசிக்கிறேன். உங்களைப் பார்க்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தீர்கள். உங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். நான் சொன்னதைப் போன்று நீங்கள் கர்த்தரைத் தொடர்ந்து பின்பற்றி வாழுங்கள்.
2கர்த்தருக்குள் ஒரே சிந்தையாய் இருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்தி சொல்லுகிறேன். 3ஏனென்றால் நீங்கள் என்னோடு உண்மையாய்ப் பணிபுரிகிறீர்கள். எனது நண்பர்களே! அப்பெண்களுக்கு உதவுமாறு உங்களை வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் நற்செய்தியை மக்களிடம் பரப்பிட உதவினார்கள். அவர்கள் கிலேமந்தோடும் மற்றவர்களோடும் சேர்ந்து எனக்கு உதவினார்கள். அவர்களின் பெயர்கள் ஜீவ புஸ்தகத்தில்#4:3 ஜீவ புஸ்தகத்தில் தேவனுடைய பிள்ளைகளின் பெயர்கள் எழுதப்பட்ட ஜீவ புஸ்தகம். வெளிப்படுத்தின வெளி. 3:5; 21:27. எழுதப்பட்டுள்ளன.
4எப்பொழுதும் கர்த்தருக்குள் முழுமையான மகிழ்ச்சியோடு இருங்கள். நான் மீண்டும் கூறுகிறேன். முழு மகிழ்ச்சியோடு இருங்கள்.
5நீங்கள் சாந்தமும் கருணையும் கொண்டவர்கள் என்பதை மக்கள் எல்லாரும் தெரிந்துகொள்ளட்டும். கர்த்தர் விரைவில் வருவார். 6நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றுக்காகவும் தேவனிடம் பிரார்த்தனை செய்து கேளுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும் பொழுதெல்லாம் நன்றி செலுத்துங்கள். 7தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.
8இப்போது சகோதர சகோதரிகளே! தொடர்ந்து உங்கள் மனதில் உண்மையும், பெருமையும், நீதியும், தூய்மையும், அன்பும், அழகும், மரியாதையும், உயர்வும் கொண்ட எல்லாவற்றையும் சிந்தித்துக்கொள்ளுங்கள். 9என்னிடமிருந்து நீங்கள் கற்றவற்றையும், பெற்றவற்றையும், கண்டவற்றையும், கேட்டவற்றையும் மட்டும் நீங்கள் செய்யுங்கள். சமாதானம் கொடுக்கிற தேவன் உங்களோடிருப்பார்.
பிலிப்பியர்களுக்கு பவுலின் நன்றி
10மீண்டும் என்னிடம் நீங்கள் அக்கறை காட்டுவதற்காக எனக்கு கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ச்சி. நீங்கள் எப்பொழுதும் அக்கறை கொண்டவர்கள். ஆனால் அதை வெளிப்படுத்த உங்களுக்கு வேறு வழி இருக்கவில்லை. 11எனக்குத் தேவைகள் உள்ளன என்பதற்காக இவற்றையெல்லாம் நான் உங்களுக்குக் கூறவில்லை. எனக்கு இருக்கிற சூழ்நிலையில் நான் திருப்தி அடைந்த உணர்வில் இருக்கிறேன். 12ஏழ்மையில் இருக்கும்போது எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். செல்வம் இருக்கும்போதும் எப்படி வாழ்வது என்று நான் அறிந்திருக்கிறேன். எல்லாவற்றிலும் எப்பொழுதும் மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி என்று எனக்குத் தெரியும். அந்த இரகசியத்தை நான் கற்றிருக்கிறேன். எனக்கு உண்ணுவதற்கு இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். எனக்கு தேவையானவை அனைத்தும் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, மகிழ்ச்சியுடன் நான் இருக்கக் கற்றிருக்கிறேன். 13கிறிஸ்துவின் மூலம் எனக்கு எல்லாவற்றையும் செய்ய வலிமை இருக்கிறது. ஏனென்றால் அவர் எனக்குப் பலத்தைக் கொடுக்கிறார்.
14ஆனால் எனக்கு உதவி தேவைப்பட்டபோது நீங்கள் உதவி செய்தீர்கள் என்பது நன்று. 15பிலிப்பியில் இருக்கிற நீங்கள், அங்கே நான் நற்செய்தியைப் பிரச்சாரம் செய்யத் தொடங்கிய நிலையை எண்ணிப் பாருங்கள். மக்கதோனியாவை விட்டு நான் வந்தபோது எனக்கு ஆதரவு கொடுத்தது, உங்கள் சபை மட்டுமே. 16நான் தெசலோனிக்கேயில் இருந்தபோது எனக்குப் பலமுறை தேவைகளுக்கெல்லாம் அனுப்பி வைத்தீர்கள். 17உண்மையில், நான் உங்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை. ஆனால் உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். 18எனக்குத் தேவைப்பட்டபோதெல்லாம் பொருள்கள் கிடைத்தன. தேவைக்கு அதிகமாகவும் கிடைக்கின்றன. உங்கள் பரிசை எப்பாப்பிரோதீத்து கொண்டு வந்ததன் மூலம் எனக்குத் தேவையான அனைத்தும் கிடைத்தன. உங்களது பரிசுகள் தேவனுக்கான மணமிக்க பலியைப்போல இருந்தன. அப்பலியை தேவன் ஏற்றுக்கொண்டார். அது அவருக்கு விருப்பமானதாயிற்று. 19இயேசு கிறிஸ்துவின் மகிமையால் நமது தேவன் மிக உயர்ந்த செல்வந்தராக இருக்கிறார். அவர் அச்செல்வத்தைப் பயன்படுத்தி உமக்குத் தேவையானவற்றையெல்லாம் கொடுப்பார். 20நமது பிதாவாகிய தேவனுக்கு மகிமை என்றென்றைக்கும் உண்டாவதாக. ஆமென்.
21கிறிஸ்துவின் மக்கள் அனைவரும் ஒருவரையொருவர் பார்க்கும்போது வாழ்த்துதல் கூறுங்கள். என்னோடு இருக்கிற தேவனுடைய மக்களும் உங்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறார்கள். 22பரிசுத்தமான அனைத்து மக்களும், சிறப்பாக இராயனுடைய அரண்மனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள்.
23கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for பிலிப்பியருக்கு எழுதிய கடிதம் 4