YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 9

9
பஸ்கா
1சீனாய் பாலைவனத்தில் மோசேயிடம் கர்த்தர் பேசினார். இது இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தை விட்டு வந்த இரண்டாவது ஆண்டின் முதல் மாதமாகும். கர்த்தர் மோசேயிடம்: 2“தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில், பஸ்கா பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. 3அவர்கள் பஸ்கா விருந்தை இம்மாதத்தின் 14ஆம் நாளன்று சூரியன் மறைகிற அந்தி வேளையில் உண்ண வேண்டும். அவர்கள் அந்தத் தேர்ந்தெடுத்த நேரத்தில் இதனைச் செய்ய வேண்டும். பஸ்கா பண்டிகையின் விதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.
4எனவே, பஸ்காவைக் கொண்டாடும்படி இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே கூறினான். 5அவர்கள் சீனாய் பாலைவனத்தில், முதல் மாதத்தின் 14ஆம் நாளன்று, சூரியன் மறைகின்ற சாயங்கால வேளையில் பஸ்காவைக் கொண்டாடினர். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் ஜனங்கள் எல்லாவற்றையும் செய்து முடித்தனர்.
6ஆனால் அந்நாளில் சில ஜனங்கள் பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. காரணம், அவர்கள் பிணத்தைத் தொட்டதால் தீட்டாகி இருந்தனர். எனவே, அன்று அவர்கள் மோசேயிடமும், ஆரோனிடமும் சென்றனர். 7அவர்கள் மோசேயிடம், “நாங்கள் பிணத்தைத் தொட்டதால் தீட்டாகிவிட்டோம். எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நேரத்தில் நாங்கள் கர்த்தருக்கு அன்பளிப்பைச் செலுத்த முடியாமல் ஆசாரியர்களால் தடுக்கப்பட்டோம். எனவே, எங்களால் மற்ற இஸ்ரவேலர்களோடு பஸ்காவைக் கொண்டாட முடியவில்லை. நாங்கள் என்ன செய்யலாம்?” என்று கேட்டனர்.
8மோசே அவர்களிடம், “கர்த்தர் இதனைப் பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்கிறேன்” என்றான்.
9பிறகு கர்த்தர் மோசேயிடம், 10“எல்லா இஸ்ரவேல் ஜனங்களிடமும் இவற்றைக் கூறு. இந்த விதியானது உனக்கும் உனது எல்லாச் சந்ததிக்கும் உரியதாகும். சரியான நேரத்தில் ஒருவனால் பஸ்காவைக் கொண்டாட முடியாமல் போகலாம். அவன் பிணத்தைத் தொட்டதால் தீட்டுள்ளவனாக இருக்கலாம், அல்லது அவன் பயணத்தின் பொருட்டு வெளியே போயிருக்கலாம். 11ஆனாலும் அவன் இரண்டாவது மாதத்தில் 14ஆம் தேதி மாலை வேளையில் பஸ்காவைக் கொண்டாடலாம். அப்போது அவன் ஆட்டுக்குட்டியின் இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும், கசப்பான கீரையையும் உண்ண வேண்டும். 12அவன் மறுநாள் விடியும்வரை அதில் எதையும் மீதி வைக்காமல் உண்ண வேண்டும். அவன் ஆட்டுக்குட்டியின் எலும்புகள் எதையும் உடைக்கக் கூடாது. அவன் பஸ்காவின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். 13ஆனால் இயன்றவர்கள் குறிப்பிட்ட காலத்திலேயே பஸ்காவைக் கொண்டாட வேண்டும். ஆனால் அவன் தீட்டில்லாமல் இருந்து, பயணம் போகாமல் இருந்தால் அவனுக்கு மன்னிப்பு இல்லை. அவன் சரியான காலத்தில் பஸ்காவைக் கொண்டாடாவிட்டால், அவன் மற்ற ஜனங்களிடமிருந்து பிரிக்கப்படவேண்டும். அவன் குற்றவாளியாகி அதனால் தண்டிக்கப்படுவான். ஏனென்றால் அவன் சரியான நேரத்தில் தன் அன்பளிப்பை கர்த்தருக்குச் செலுத்தவில்லை.
14“உங்களோடு வாழ்கின்ற அயல் நாட்டுக்காரன், கர்த்தரின் பஸ்காப் பண்டிகையை பகிர்ந்துகொள்ள விரும்பலாம், இதனை அனுமதிக்கலாம். ஆனால், அவன் பஸ்காவின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவ்விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரிதான்” என்றார்.
மேகமும் நெருப்பும்
15பரிசுத்தக் கூடாரத்தையும், உடன்படிக்கையின் கூடாரத்தையும் அமைத்த அன்று, கர்த்தரின் மேகமானது அதை மூடிற்று. மாலை முதல் காலைவரை பரிசுத்தக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகமானது நெருப்பு போல் காணப்பட்டது. 16அம்மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் எப்போதும் இருந்தது. இரவு நேரத்தில் அது நெருப்புபோல தோன்றியது. 17மேகமானது பரிசுத்தக் கூடாரத்தை விட்டு நகர்ந்தபோது, இஸ்ரவேலரும் கூடவே சென்றனர். அம்மேகம் நின்ற இடத்தில் அவர்கள் தங்கள் முகாமை அமைத்தனர். 18இவ்வாறு எப்போது புறப்பட வேண்டும், எப்போது நிற்க வேண்டும், முகாமை எங்கே அமைக்க வேண்டும் என்பதையெல்லாம் இஸ்ரவேலர்களுக்கு கர்த்தர் சுட்டிக் காட்டினார். அங்கே மேகம் நிலைத்திருக்கும்வரை அவர்கள் அங்கேயே தங்கள் முகாமை அமைத்திருந்தனர். 19சில வேளைகளில் அம்மேகமானது நீண்ட காலம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் தங்கியிருக்கும். கர்த்தரின் கட்டளைக்குப் பணிந்து இஸ்ரவேலர்கள் அதை விட்டு நகராமல் இருந்தனர். 20சில வேளைகளில், மேகமானது பரிசுத்தக் கூடாரத்தின்மேல் சில நாட்களே தங்கியிருக்கும். எனவே, அவர்கள் கர்த்தரின் கட்டளைக்கு அடிபணிந்து, அது நகரும்போது அவர்களும் நகர்ந்தனர். 21சில வேளைகளில் மேகமானது இரவு மட்டுமே தங்கியிருக்கும். மறுநாள் காலையில் அது நகர்ந்துவிடும். அப்போது அவர்களும் தங்கள் பொருட்களை கட்டிக்கொண்டு பின்பற்றிச் செல்வார்கள். மேகமானது பகலில் நகர்ந்தாலும், அல்லது இரவில் நகர்ந்தாலும் இஸ்ரவேல் ஜனங்கள் அதைப் பின்பற்றிச் சென்றனர். 22அந்த மேகம் பரிசுத்தக் கூடாரத்தின் மேல் இரண்டு நாட்களோ, ஒரு மாதமோ, ஒரு ஆண்டோ இருந்தால் அவர்களும் அங்கே தங்கியிருப்பார்கள். கர்த்தரின் ஆணைப்படி மேகம் நகரும்வரை அவர்களும் நகரமாட்டார்கள். எப்போது மேகம் எழும்பி நகருகிறதோ அப்போது அவர்களும் நகருவார்கள். 23எனவே, ஜனங்கள் இவ்வாறு கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்தனர். கர்த்தரின் ஆணைப்படி முகாமை அமைத்தனர். கர்த்தர் சொல்லும்போது முகாமை கலைத்து விட்டுப் புறப்பட்டனர். ஜனங்கள் மிக எச்சரிக்கையாகக் கவனித்து மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடி கீழ்ப்படிந்தனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in