YouVersion Logo
Search Icon

எண்ணாகமம் 15

15
பலிகளைப் பற்றிய விதிகள்
1கர்த்தர் மோசேயிடம், 2“இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி இதனைக் கூறு. உங்கள் வீடாக இருக்கும்படி நான் உங்களுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கிறேன். நீங்கள் அதனுள்ளே நுழைந்ததும், 3நீங்கள் கர்த்தருக்குச் சில சிறப்புக்குரிய தகன பலிகளைச் செலுத்த வேண்டும். அவற்றின் வாசனை கர்த்தருக்கு விருப்பமானது. நீங்கள் உங்கள் மாடுகளையும், ஆடுகளையும், வெள்ளாடுகளையும் தகனபலிக்குப் பயன்படுத்தலாம். அவற்றை சிறப்பு காணிக்கைகள், உற்சாக பலிகள், சமாதானப் பலிகள் அல்லது சிறப்புப் பண்டிகைப் பலிகள், ஆகியவற்றுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.
4“ஒருவன் கர்த்தருக்கு காணிக்கையைக் கொண்டு வரும்போது, அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். தானியக் காணிக்கை என்பது, ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் காற்படி எண்ணெய் பிசைந்து கொண்டு வரவேண்டும். 5ஒரு ஆட்டுக்குட்டியைத் தகனபலியாகக் கொண்டுவரும் ஒவ்வொரு முறையும், நீங்கள் காற்படி திராட்சை ரசத்தையும், பானங்களின் காணிக்கையாகப் படைக்கவேண்டும்.
6“நீங்கள் ஒரு ஆட்டுக்கடாவைப் படைக்கும்போது, தானியக் காணிக்கையையும் சேர்த்து படைக்கவேண்டும். இந்தத் தானியக் காணிக்கை, ஒரு மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான, மெல்லிய மாவிலே ஒருபடியில் மூன்றில் ஒரு பங்கு, ஒலிவ எண்ணெயோடு பிசைந்து கொடுக்க வேண்டும். 7ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானது.
8“ஓர் இளங்காளையைத் தகனபலியாகவோ, சிறப்பான பொருத்தனைப் பலியாகவோ, சமாதான பலியாகவோ, கொடுக்கலாம். 9அப்போது, அதனோடு தானியக் காணிக்கையையும், ஒரு காளையையும் படைக்கவேண்டும். அதாவது, ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவுடன், அரைப்படி ஒலிவ எண்ணெயைப் பிசைந்து கொடுக்க வேண்டும். 10அதோடு பானங்களின் காணிக்கையாக அரைப்படி திராட்சைரசத்தையும் கொடுக்கவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமாக இருக்கும். 11நீங்கள் கர்த்தருக்கு தகனபலியாக கொடுக்கப் போகும் பலி, காளை அல்லது ஆட்டுக்கடா அல்லது செம்மறி ஆட்டுக் குட்டி அல்லது வெள்ளாட்டுக் குட்டியை இம்முறையில்தான் அளிக்கவேண்டும். 12நீங்கள் படைக்கும் ஒவ்வொரு மிருகத்திற்கும் இவ்வாறுதான் செய்யவேண்டும்.
13“இவ்வாறே ஒவ்வொரு இஸ்ரவேலனும் கர்த்தருக்குப் பிரியமான முறையில் தகன பலியைச் செலுத்த வேண்டும். 14உங்களிடையே பிறநாட்டு ஜனங்களும் வாழ்வார்கள். அவர்களும் தகனபலி கொடுத்து கர்த்தரை வழிபட விரும்பினால் இந்த முறையில்தான் செலுத்தவேண்டும். 15இதே விதிகள்தான் உங்களுக்கும், உங்களோடு வாழும் பிற நாட்டு ஜனங்களுக்கும் உரியதாகும். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியதாக விளங்கும். கர்த்தருக்கு முன்பு, நீங்களும், உங்களோடு வாழும் மற்றவர்களும், சமமாகக் கருதப்படுவார்கள். 16எனவே, நீங்கள் இந்த விதிகளையும், சட்டங்களையும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள். அந்தச் சட்டங்களும், விதிகளும் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்கும், உங்களோடு வாழும் மற்ற ஜனங்களுக்கும் பொருந்தும்” என்றார்.
17கர்த்தர் மேலும் மோசேயிடம், 18“இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. நான் உங்களை வேறு நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். 19அங்கு நீங்கள் விளைந்த உணவை உண்பதற்கு முன்னால், அதில் ஒரு பங்கை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். 20நீங்கள் தானியத்தைச் சேகரித்து, மாவாக அரைக்கவேண்டும். அது அப்பம் செய்வதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். முதலில் செய்யப்படும் அப்பத்தை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். போரடிக்கிற களத்தில் தானியத்தைக் காணிக்கையாகக் கொடுப்பது போன்று இது இருக்கும். 21இவ்விதிமுறை எக்காலத்திற்கும் தொடர்ந்திருக்கும். நீங்கள் பிசைந்த மாவின் முதற்பகுதியை, கர்த்தருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்.
22“இந்தக் கட்டளையை மறதியினால் தவறி நீங்கள் அநுசரியாமற்போனால், நீங்கள் அதற்காக என்ன செய்யவேண்டும்? 23இந்தக் கட்டளைகளை கர்த்தர் உங்களுக்கு மோசே மூலமாகக் கொடுத்தார். உங்களுக்கு கொடுத்த அந்நாளிலேயே இக்கட்டளைகள் செயல்படத் துவங்கியது. அந்நாள் முதல் எல்லாக் காலத்திற்கும் இக்கட்டளைகள் உங்களுக்குத் தொடர்ந்து வரும். 24எனவே, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் திட்டமிடாமல் இந்தக் கட்டளைகளை காக்கத் தவறினால் அதற்கு என்ன செய்வீர்கள்? இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இந்தத் தவறைச் செய்தால், அவர்கள் அனைவரும் சேர்ந்து, ஓர் இளங்காளையைப் பலி கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானதாகும். அதோடு தானியக் காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் ஒரு காளையோடு காணிக்கையாக கொடுக்கவேண்டும். பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பலி கொடுக்கவேண்டும்.
25“ஜனங்களைத் சுத்தப்படுத்த ஆசாரியன் அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டும். அவன் இவற்றை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காகவும் செய்யவேண்டும். தாங்கள் பாவிகள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், எப்போது அவர்களுக்கு அது தெரிய வருகிறதோ, அப்போதே அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புச் செலுத்த வேண்டும். அவர்கள் தகனபலியையும் பாவ நிவாரண பலியையும் கொடுக்க வேண்டும். அதனால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். 26இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும், அவர்களோடு வாழும் மற்ற ஜனங்களும் மன்னிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாதிருந்தால் அவர்களும் மன்னிக்கப்படுவார்கள்.
27“ஒரே ஒரு மனிதன் மட்டும் தவறிப் பாவம் செய்தால் அவன் ஓராண்டு வயதுள்ள பெண் வெள்ளாட்டைக் கொண்டு வர வேண்டும். அது பாவப்பரிகார பலியாகும். 28அவனைத் சுத்தப்படுத்துவதற்குரிய நியமனத்தை ஆசாரியன் நிறைவேற்றவேண்டும். அந்த மனிதன் கர்த்தர் முன்னால் தவறி குற்றம் செய்து பாவியானால் ஆசாரியன் அவனுக்கு நிவாரணம் செய்தபின் அவன் சுத்தமாக்கி மன்னிக்கப்படுகிறான். 29குற்றம் செய்து பாவியாகிற எவனுக்கும் இந்தச் சட்டம் உரியதாகும். இச்சட்டங்கள் இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஜனங்களுக்கும், அவர்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களுக்கும் உரியதாகும்.
30“ஆனால் ஒருவன் அறிந்தே பாவம் செய்துகொண்டேயிருக்கிறவனாயிருந்தால் அவன் கர்த்தருக்கு எதிராகிறான். அவன் தம் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படவேண்டும். இந்தச் சட்டம் இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஜனங்களுக்கும், உங்களோடு வாழும் பிறநாட்டு ஜனங்களுக்கும் உரியதாகும். 31கர்த்தரின் வார்த்தைகள் முக்கியமானவை என்று அந்த மனிதன் நினைக்கவில்லை. அவன் கர்த்தரின் கட்டளையை உடைத்துவிட்டான். அப்படிப்பட்டவன் உங்கள் குழுவிலிருந்து நிச்சயம் விலக்கப்பட வேண்டும். அவன் குற்றவாளியாகித் தண்டிக்கப்படுவான்!” என்றார்.
ஓய்வு நாளில் ஒருவன் வேலை செய்தால்
32இந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்திலேயே இருந்தனர். ஒருவன் ஓய்வு நாள் ஒன்றில் எரிப்பதற்கான விறகுகளைக் கண்டு அவற்றைச் சேகரித்தான். சிலர் இதனைப் பார்த்தனர். 33அவன் விறகைச் சேகரித்துக்கொண்டு வரும்போது, அவர்கள் அவனை மோசேயிடமும், ஆரோனிடமும் அழைத்து வந்தனர். மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து வந்தனர். 34அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது தெரியாததால் அவனை காவலுக்குள் வைத்திருந்தனர்.
35பிறகு மோசேயிடம் கர்த்தர், “இவன் சாகவேண்டும். முகாமிற்கு வெளியே அவனைக் கொண்டு போய் அனைவரும் அவன் மேல் கல்லெறியுங்கள்” என்றார். 36எனவே, ஜனங்கள் அவனை முகாமிற்கு வெளியே கொண்டு போய் கல்லால் எறிந்தனர். அவர்கள் இதனை மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தனர்.
ஜனங்கள் விதிகளை நினைவுப்படுத்திக்கொள்ள தேவன் உதவுதல்
37கர்த்தர் மோசேயிடம், 38“இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி கீழ்க்கண்டவற்றை அவர்களிடம் கூறு. எனது கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ள நான் உங்களுக்கு உதவுவேன். பல துண்டு நூல் கயிறுகளைச் சேர்த்து, உங்கள் ஆடைகளின் மூலையில் தொங்கல்களைக் கட்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தொங்கலிலும் நீல நிற நூலைக் கட்டிக்கொள்ளுங்கள். இதனை இப்போதும் எக்காலத்திற்கும் அணிந்துகொள்ள வேண்டும். 39நீங்கள் இம்முடிச்சுகளைப் பார்க்கும்போதெல்லாம் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படிவீர்கள். இதனால் மறதி காரணமாக பாவம் செய்யாமல் இருப்பீர்கள். உங்கள் உடம்பும், கண்களும் விரும்புகிற காரியங்களை செய்யமாட்டீர்கள். 40எனது அனைத்து கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் உங்கள் தேவனுக்கென்று பரிசுத்தமாக இருப்பீர்கள். 41நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நானே உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தேன். நான் உங்கள் தேவனாயிருக்க இவற்றைச் செய்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy