நெகேமியாவின் புத்தகம் 5
5
நெகேமியா ஏழை ஜனங்களுக்கு உதவுகிறான்
1ஏழை ஜனங்களுள் அநேகம் பேர் தங்கள் யூத சகோதரர்களுக்கு எதிராக முறையிடத் தொடங்கினார்கள். 2சிலர், “எங்களுக்கு நிறைய குழந்தைகள் இருக்கின்றனர். நாங்கள் சாப்பிட்டு உயிரோடு இருக்க வேண்டுமானால் தானியங்களைப் பெறவேண்டும்” என்றனர்.
3மற்ற ஜனங்கள், “இது பஞ்சகாலம், நாங்கள் எங்கள் வயல்களையும் திராட்சைத் தோட்டங்களையும் வீடுகளையும் தானியங்களைப் பெறுவதற்காக அடமானமாக வைத்திருக்கிறோம்” என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
4மேலும் சிலர், “நாங்கள் எங்களது வயல்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்களுக்கு ராஜாவிடம் வரி கட்ட வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆனால் எங்களால் வரிகட்ட முடியாது. எனவே நாங்கள் வரி கட்டுவதற்குப் பணத்தை கடன் வாங்கவேண்டியவர்களாக இருக்கிறோம். 5அந்த பணக்கார ஜனங்களைப் பாருங்கள். நாங்களும் அவர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறோம். எங்கள் குமாரர்களும் அவர்களது குமாரர்களைப் போன்றே நல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அடிமையாக விற்கும் நிலையில் உள்ளோம். ஏற்கெனவே எங்களில் சிலர் தங்கள் குமாரத்திகளையும் அடிமைகளாக விற்றிருக்கின்றனர். எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. நாங்கள் ஏற்கனவே எங்கள் வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் இழந்துவிட்டோம். இப்பொழுது அவற்றை மற்றவர்கள் சொந்தமாக்கிக் கொண்டனர்” என்றனர்.
6நான் அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்டதும் மிகவும் கோபமடைந்தேன். 7நான் என்னை அமைதிப்படுத்திக் கொண்டு பிறகு நான் பணக்காரக் குடும்பங்களிடமும் அதிகாரிகளிடமும் சென்றேன். நான் அவர்களிடம், “நீங்கள் உங்கள் சொந்த ஜனங்களிடையே உங்கள் பணத்துக்கு வட்டி தருமாறு பலவந்தப்படுத்துகிறீர்கள். இவ்வாறு செய்வதை நீங்கள் நிறுத்தவேண்டும்” என்றேன். பிறகு நான் அனைத்து ஜனங்களையும் கூடும்படி அழைத்தேன். 8நான் அந்த ஜனங்களிடம், “நமது யூத சகோதரர்கள் மற்ற நாடுகளுக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். நாங்கள் அவர்களைத் திரும்ப விலைகொடுத்து வாங்கி, அவர்களை விடுதலைச்செய்ய எங்களால் இயன்றதைச் செய்தோம். இப்பொழுது, மீண்டும் நீங்கள் அவர்களை அடிமைகளைப்போன்று விற்றுக்கொண்டிருக்கிறீர்கள்” என்றேன்.
அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும் அமைதியாக இருந்தார்கள். அவர்களால் சொல்வதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 9எனவே நான் தொடர்ந்து பேசினேன். நான் அவர்களிடம், “நீங்கள் செய்துகொண்டிருப்பது சரியில்லை. நீங்கள் தேவனுக்குப் பயந்து அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும். மற்ற ஜனங்கள் செய்வதுபோன்ற வெட்கப்படத்தக்கச் செயல்களை நீங்கள் செய்யக்கூடாது. 10எனது ஜனங்களே, எனது சகோதரர்களே, நானும் கூட அந்த ஜனங்களுக்குப் பணத்தையும் தானியத்தையும் கடனாகக் கொடுத்திருக்கிறேன். அந்தக் கடன்களுக்கு வட்டி கொடுக்குமாறு பலவந்தப்படுத்துவதை விட வேண்டும். 11நீங்கள் அவர்களது திராட்சைத் தோட்டங்களையும், வயல்களையும், ஒலிவ வயல்களையும், வீடுகளையும் இப்போதே திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடமிருந்து பெற்ற வட்டியையும் திருப்பிக் கொடுக்கவேண்டும். நீங்கள் அவர்களிடம் பணம், தானியம், புதிய திராட்சைரசம் மற்றும் எண்ணெய் ஆகியவற்றுக்கு நூற்றுக்கு ஒன்று வீதம் வட்டி வசூலித்திருக்கிறீர்கள். நீங்கள் அவற்றை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும்” என்றேன்.
12பிறகு அந்தப் பணக்காரர்களும் அதிகாரிகளும், “நாங்கள் இவற்றைத் திருப்பிக் கொடுப்போம். நாங்கள் அவர்களிடம் மேலும் எதையும் கேட்கமாட்டோம். நெகேமியா, நீ சொன்னபடியே நாங்கள் செய்வோம்” என்றனர்.
பிறகு நான் ஆசாரியர்களை அழைத்தேன். நான் பணக்காரர்களையும் அதிகாரிகளையும் தாங்கள் சொன்னதைச் செய்வதாக தேவனுக்கு உறுதிமொழி அளிக்கச்செய்தேன். 13பிறகு நான் எனது ஆடைகளின் மடிப்புகளை உதறிப்போட்டேன். நான், “தனது வாக்குறுதியைக் காப்பாற்றாத எவரையும் தேவன் இவ்வாறே உதறிப்போடுவார். தேவன் அவர்களைத் தமது வீடுகளிலிருந்து உதறுவார். அவர்கள் தமது சம்பாத்தியத்தை எல்லாம் இழப்பார்கள். அம்மனிதன் எல்லாவற்றையும் இழப்பான்” என்றேன்.
நான் இவற்றைச் சொல்லி முடித்தேன். அந்த ஜனங்கள் ஒத்துக்கொண்டனர். அவர்கள் அனைவரும் “ஆமென்” என்றனர். அவர்கள் கர்த்தரை துதித்தனர். எனவே ஜனங்கள் அவர்கள் வாக்குறுதிப்படியே செய்தனர்.
14அந்தக் காலம் முழுவதும் நான் யூதாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டபோது, நானும் என் சகோதரர்களும் ஆளுநருக்கு ஒதுக்கப்பட்டிருந்த உணவை உண்ணவில்லை. எனது உணவை வாங்குவதற்கான வரியைக் கட்டுமாறு நான் ஜனங்களைப் பலவந்தப்படுத்தவில்லை. நான், அர்தசஷ்டா ராஜாவாகிய இருபதாம் ஆண்டு முதல் முப்பத்திரெண்டாம் ஆண்டுவரை ஆளுநராக இருந்தேன். நான் 12 ஆண்டுகள் யூதாவின் ஆளுநராக இருந்தேன். 15ஆனால் எனக்கு முன்னால் ஆளுநராக இருந்தவர்கள் ஜனங்களது வாழ்க்கையைக் கடினமாக்கினார்கள். அந்த ஆளுநர்கள் ஒவ்வொருவரையும் ஒரு பவுண்டு வெள்ளி கொடுக்குமாறு பலவந்தப்படுத்தினர். அவர்கள் ஜனங்களிடம் உணவும் திராட்சைரசமும் கொடுக்குமாறு செய்தனர். அந்த ஆளுநர்களுக்குக் கீழே இருந்த தலைவர்களும் ஜனங்களின் வாழ்க்கையை அதிகாரம் செலுத்தி மேலும் கடினமானதாகச் செய்தனர். ஆனால் நான் தேவனுக்கு பயந்து மரியாதை செலுத்தியதால் இதைப்போன்ற செயல்களைச் செய்யவில்லை. 16நான் எருசலேம் சுவரைக் கட்டுவதில் கடினமாக வேலை செய்தேன். எனது ஜனங்கள் அனைவரும் சுவரில் வேலை செய்வதற்காக அங்கே கூடினார்கள். நாங்கள் எவரிடமிருந்தும் எந்த நிலத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.
17நான் ஒழுங்காக 150 யூதர்களை எனது பந்தியில் உண்ண வைத்தேன். சுற்றியிருந்த தேசங்களிலிருந்து எங்களிடத்தில் வந்தவர்களுக்கு உணவு கொடுத்தேன். 18ஒவ்வொரு நாளும் நான் இவ்வளவு உணவு தான் எனது பந்தியில் பரிமாறவேண்டும் என்று தீர்மானித்தேன். ஒரு பசு, ஆறு நல்ல ஆடு, பல வகை பறவைகள் ஆகியவை. பத்து நாட்களுக்கு ஒருமுறை எனது பந்தியில் எல்லாவகை திராட்சைரசமும் கொண்டு வரவேண்டும். எனினும் நான் ஆளுநருக்கு ஒதுக்கப்படவேண்டிய உணவே வேண்டுமென வற்புறுத்தியதில்லை. எனது உணவுக்காகச் செலுத்த வேண்டிய வரியைச் செலுத்துமாறு நான் ஜனங்களை எப்பொழுதும் வற்புறுத்தியதில்லை. ஜனங்கள் மிகவும் கஷ்டப்பட்டு வேலைச் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். 19தேவனே, இந்த ஜனங்களுக்காக நான் செய்த நல்லவற்றை எல்லாம் நினைத்துப் பாரும்.
Currently Selected:
நெகேமியாவின் புத்தகம் 5: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International