YouVersion Logo
Search Icon

மாற்கு எழுதிய சுவிசேஷம் 11

11
எருசலேமுக்குள் இயேசு நுழைதல்
(மத்தேயு 21:1-11; லூக்கா 19:28-40; யோவான் 12:12-19)
1இயேசுவும் அவரது சீஷர்களும் எருசலேமை அடைந்தனர். அவர்கள் ஒலிவமலையில் உள்ள பெத்பகே, பெத்தானியா என்னும் நகரங்களுக்கு அருகில் வந்தனர். அங்கே இயேசு இரண்டு சீஷர்களை அனுப்பிச் சிலவற்றைச் செய்யச் சொன்னார். 2இயேசு, “நீங்கள் பார்க்கிற எதிரேயுள்ள ஊருக்குள் செல்லுங்கள். உள்ளே நுழைந்ததும் ஓர் இளம் கழுதை கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். இதுவரை எவராலும் சவாரி செய்யப்படாத கழுதை அது. அதை அவிழ்த்து இங்கே கொண்டு வாருங்கள். 3யாராவது உங்களிடம் எதற்காக இதனைக் கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம், ‘ஆண்டவருக்கு இது தேவைப்படுகிறது. அவர் இதனை விரைவில் திருப்பி அனுப்புவார் என்று சொல்லுங்கள்’” என்றார்.
4சீஷர்கள் நகரத்துக்குள் நுழைந்தனர். ஒரு வீட்டுக்கு வெளியே சாலை ஓரத்தில் ஓர் இளம் கழுதை கட்டி வைக்கப்பட்டிருந்தது. சீஷர்கள் அதனை அவிழ்த்தார்கள். 5அங்கு நின்றுகொண்டிருந்த சிலர் இதனைப் பார்த்தனர். “என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதையை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர். 6இயேசு சொன்னபடி அவர்கள் பதில் சொன்னார்கள். அவர்கள் கழுதையை அழைத்துச் செல்ல அனுமதித்தனர்.
7சீஷர்கள் கழுதையை இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவரது சீஷர்கள் தம் மேலாடைகளை கழுதையின் மேல் விரித்தனர். இயேசு அதன் மேல் உட்கார்ந்தார். 8ஏராளமான மக்கள் தம் மேலாடைகளைச் சாலையில் விரித்து இயேசுவை வரவேற்றனர். இன்னும் சிலர் மரக்கிளைகளை வெட்டி அவற்றைச் சாலையில் பரப்பினர். 9சிலர் இயேசுவிற்கு முன்னால் நடந்து சென்றனர். சிலர் இயேசுவிற்குப் பின்னால் சென்றனர்.
“அவரைப் புகழுங்கள்
‘கர்த்தரின் பெயரால் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’#சங்கீ. 118:25-26
10தமது தந்தையான தாவீதின் இராஜ்யம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவதாக.
அந்த இராஜ்யம் வந்துகொண்டிருக்கிறது.
பரலோகத்தில் உள்ள தேவனைப் போற்றுவோம்”
என்று அவர்கள் சத்தமிட்டனர்.
11எருசலேமுக்குள் சென்று அங்குள்ள தேவாலயத்திற்குள் இயேசு நுழைந்தார். தேவாலயத்தில் எல்லாவற்றையும் இயேசு பார்த்தார். ஆனால் ஏற்கெனவே நேரமாகிவிட்டிருந்தது. ஆகையால் இயேசு அங்கிருந்து பெத்தானியாவுக்கு தன் பன்னிரண்டு சீஷர்களோடு சென்றார்.
அத்திமரம் பட்டுப்போவதை இயேசு அறிவித்தல்
(மத்தேயு 21:18-19)
12மறுநாள், அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்பட்டனர். அவருக்குப் பசித்தது. 13இயேசு இலைகள் நிறைந்த அத்தி மரம் ஒன்றைப் பார்த்தார். அவர் அதனருகில் சென்று ஏதேனும் பழங்கள் உள்ளனவா என்று கவனித்தார். அதில் பழங்கள் ஏதுமில்லை. வெறும் இலைகளே இருந்தன. அது கனி கொடுப்பதற்கு உரிய சரியான காலம் இல்லை. 14ஆகையால் இயேசு அத்தி மரத்திடம், “இனி மக்கள் யாரும் உன்னிடமிருந்து ஒரு போதும் பழத்தைத் தின்னமாட்டார்கள்” என்றார். இயேசு சொன்னதை சீஷர்களும் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தேவாலயத்தில் இயேசு
(மத்தேயு 21:12-17; லூக்கா 19:45-48; யோவான் 2:13-22)
15அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார். 16ஒருவரையும் தேவாலயத்தின் வழியே பொருள்களை எடுத்துச் செல்ல இயேசு அனுமதிக்க மறுத்தார். 17பிறகு இயேசு மக்களுக்குப் போதனை செய்ய ஆரம்பித்தார். “‘எனது வீடு எல்லா மக்களின் பிரார்த்தனைக்கான வீடு என அழைக்கப்படும்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.#ஏசா. 56:7 ஆனால் நீங்கள் தேவனின் வீட்டைத் ‘திருடர்கள் ஒளியும் இடமாக’ மாற்றுகிறீர்கள்”#எரே. 7:11 என்றார்.
18தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் இவற்றைக் கேட்டனர். அவர்கள் இயேசுவைக் கொல்வதற்கு வழிதேடினர். மக்கள் அனைவரும் இயேசுவின் போதனைகளைக் கேட்டு வியப்பதை அறிந்து அவர்கள் அச்சப்பட்டனர். 19அன்று இரவு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்நகரத்தை விட்டு வெளியேறினர்.
விசுவாசத்தின் வல்லமை
(மத்தேயு 21:20-22)
20மறுநாள் காலையில் இயேசு தனது சீஷர்களோடு நடந்துகொண்டிருந்தார். முந்தின நாள் இயேசு சபித்த அத்தி மரத்தை அவர்கள் பார்த்தனர். அம்மரம் செத்து, காய்ந்து, வேரும் உலர்ந்துபோய் இருந்தது. 21பேதுரு அம்மரத்தைப்பற்றி நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே! பாருங்கள். நேற்று இம்மரம் பட்டுப்போகுமாறு சொன்னீர்கள். இன்று இது உலர்ந்து இறந்துவிட்டது” என்றான்.
22அதற்கு இயேசு, “தேவனிடம் விசுவாசம் வைத்திருங்கள். 23நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். ‘மலையே போ, போய்க் கடலில் விழு!’ என்று உங்களால் மலைக்கு ஆணையிட முடியும். உங்கள் மனதில் சந்தேகம் இல்லாதிருந்தால், நீங்கள் சொல்வது நடக்கும் என்கிற விசுவாசம் உங்களுக்கு இருக்குமானால், தேவன் உங்களுக்காக அவற்றைச் செய்வார். 24ஆகையால் உங்கள் பிரார்த்தனையின்போது தேவனிடம் காரியங்களைக் கேளுங்கள். அவற்றைக் கிடைக்கப்பெற்றோம் என்று நீங்கள் நம்பினால் அவை உங்களுக்கு உரியதாகும். 25நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, ஏதாவது ஒன்றைக்குறித்து நீங்கள் யாரிடமாவது கோபம் கொண்டிருப்பது நினைவில் வந்தால் அவர்களை மன்னித்து விடுங்கள். நீங்கள் இதைச் செய்தால் பரலோகத்தில் இருக்கிற உங்கள் பிதாவும் உங்களது தவறுகளை மன்னித்துவிடுவார்” என்றார். 26#11:26 சில பழைய கிரேக்க பிரதிகளில் 26வது வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. “ஆனால் நீங்கள் மற்றவர்களின் பாவங்களை மன்னிக்காவிட்டால் பரலோகத்தில் உள்ள உங்கள் பிதா உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்.”
இயேசுவின் அதிகாரத்தை சந்தேகித்தல்
(மத்தேயு 21:23-27; லூக்கா 20:1-8)
27இயேசுவும் சீஷர்களும் மீண்டும் எருசலேமுக்குச் சென்றார்கள். அவர் தேவாலயத்திற்குள் நடந்து கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும், மூத்த யூதத் தலைவர்களும் இயேசுவிடம் வந்தனர். 28அவரிடம், “எங்களுக்குச் சொல். இவற்றையெல்லாம் செய்ய நீ எங்கிருந்து அதிகாரம் பெற்றாய்? யார் உனக்கு இந்த அதிகாரத்தைக் கொடுத்தது?” என்று கேட்டனர்.
29அதற்கு இயேசு, “நான் உங்களிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்லுங்கள். பிறகு நான் யாருடைய அதிகாரத்தால் இவற்றையெல்லாம் செய்கிறேன் என்பதைக் கூறுகிறேன். 30யோவான் ஸ்நானகன் ஞானஸ்நானம் கொடுத்தபோது அந்த அதிகாரம் அவனுக்கு தேவனிடமிருந்து வந்ததா அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார்.
31யூதத் தலைவர்கள் இயேசுவின் கேள்வியைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அவர்கள், “நாம் இவனிடம், ‘யோவான் தேவனிடமிருந்து அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதாகச் சொன்னால்’, நம்மிடம் இவன், ‘பிறகு ஏன் யோவான் மீது நம்பிக்கை வைக்கவில்லை’ என்று கேட்பான். 32‘மனிதனிடமிருந்து வந்தது’ என்று சொல்வோமானால், பின்னர் மக்கள் நம்மீது கோபம்கொள்வர்” (யூதத் தலைவர்கள் மக்களுக்கு எப்போதும் பயந்தனர். ஏனென்றால் அனைத்து மக்களும் யோவானை உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்று நம்பினர்) என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
33ஆகையால் அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குப் பதில் தெரியாது” என்றனர். இயேசுவும், “அப்படியானால், நானும் யார் அதிகாரத்தால் இதனைச் செய்கிறேன் என்பதைச் சொல்லமாட்டேன்” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy