YouVersion Logo
Search Icon

மீகா 4

4
சட்டம் எருசலேமிலிருந்து வரும்
1இறுதி நாட்களில்,
கர்த்தருடைய ஆலயம் அனைத்து மலைகளையும் விட மிக உயரத்தில் இருக்கும்.
அந்தக் குன்று மலைகளையும் விட உயரமாக உயர்த்தப்பட்டு இருக்கும்.
அங்கு எப்போதும் ஜனங்கள் கூட்டம் சென்றுகொண்டிருக்கும்.
2பல நாடுகளிலிருந்து ஜனங்கள் அங்கே போவார்கள்.
அவர்கள், “வாருங்கள் கர்த்தருடைய பர்வதத்திற்குப் போகலாம்.
யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்குப் போவோம்,
பிறகு தேவன் நமக்கு வாழும் வழியைக் கற்பிப்பார்.
நாம் அவரைப் பின்பற்றுவோம்” என்பார்கள்.
தேவனிடமிருந்து வரும் பாடங்கள் கர்த்தருடைய செய்தி,
சீயோன் குன்றுமேல் உள்ள எருசலேமில் தொடங்கி உலகம் முழுவதும் செல்லும்.
3பிறகு தேவன் அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களுக்கு நீதிபதியாக இருப்பார்.
தேவன் தூர தேசங்களைச் சேர்ந்த பல ஜனங்களின் விவாதங்களை முடிப்பார்.
அந்த ஜனங்கள் போருக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துவார்கள்.
அவர்கள் தமது வாள்களிலிருந்து கொழுக்களைச் செய்வார்கள்.
அவர்கள் தம் ஈட்டிகளைச் செடிகளை வெட்டும் கருவிகளாகப் பயன்படுத்துவார்கள்.
ஜனங்கள் மற்றவர்களோடு சண்டையிடுவதை நிறுத்துவார்கள்.
ஜனங்கள் போரிடுவதற்கு மீண்டும் பயிற்சிபெறமாட்டார்கள்.
4ஒவ்வொருவரும் தமது திராட்சைச் செடி
மற்றும் அத்தி மரங்களின் கீழும் அமர்ந்திருப்பார்கள்.
எவரும் அவர்களைப் பயப்படும்படிச் செய்யமாட்டார்கள்.
ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சென்னது போல நடக்கும்.
5மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் தமது சொந்தத் தெய்வங்களைப் பின்பற்றுகின்றார்கள்.
ஆனால் நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய வழியில் என்றென்றைக்கும் நடப்போம்.
இராஜ்யம் திரும்பிக் தரப்படும்
6கர்த்தர் கூறுகிறார்:
“எருசலேம் புண்பட்டு நொண்டியானது.
எருசலேம் தூர எறியப்பட்டது.
எருசலேம் காயப்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டது.
ஆனால் நான் அவனை என்னிடம் திரும்ப கொண்டு வருவேன்.
7“‘அந்நொண்டி’ நகரின் ஜனங்கள், மீதியான ஜனங்களாவார்கள்.
சென்றுவிடும்படி நகரஜனங்கள் பலவந்தப்படுத்தப்பட்டனர்.
ஆனால் நான் அவர்களை ஒரு வலிமையான நாடாக்குவேன்.”
கர்த்தர் அவர்களுடைய ராஜாவாய் இருப்பார்.
அவர் என்றென்றும் சீயோன் பர்வதத்திலிருந்து ஆளுவார்.
8மந்தையின் துருகமே,#4:8 மந்தையின் துருகம் எருசலேமின் ஒரு பகுதி. உங்கள் காலம் வரும். சீயோன், மலையான ஆப்பேலே நீ மீண்டும் ஆட்சி பீடத்தில் அமருவாய்.
ஆமாம், முற்காலத்தைப் போன்று எருசலேமின் ராஜாங்கம் இருக்கும்.
இஸ்ரவேலர்கள் எதற்காக பாபிலோனுக்கு போகவேண்டும்
9இப்பொழுது எதற்காக நீ உரக்க கதறுகிறாய்.
உங்கள் ராஜா போய்விட்டானா?
உங்கள் தலைவரை இழந்து விட்டீர்களா?
நீங்கள் பிரசவ வேதனைப்படும் பெண்ணைப் போன்று துக்கப்படுகிறீர்கள்.
10சீயோன் மகளே, வலியை உணர்ந்துக் கொண்டு உங்கள் “குழந்தையை” பெற்றெடுங்கள்.
நீங்கள் நகரை விட்டு (எருசலேம்) வெளியே போகவேண்டும்.
நீங்கள் வயல் வெளியில் போவீர்கள்.
நீங்கள் பாபிலோனுக்குப் போகவேண்டும் எனக் கருதுகிறேன்.
ஆனால் நீங்கள் அந்த இடத்திலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.
கர்த்தர் அங்கே போய் உங்களைக் காப்பார்.
அவர் உங்களை உங்கள் எதிரிகளிடமிருந்து எடுப்பார்.
கர்த்தர் மற்ற நாடுகளை அழிப்பார்
11பல நாட்டினர் உங்களுக்கு எதிராகப் போரிட வந்திருக்கின்றனர்.
அவர்கள், “பாருங்கள், அங்கே சீயோன் இருக்கிறது. அவளைத் தாக்குவோம்!” என்கிறார்கள்.
12அந்த ஜனங்கள் அவர்களின் திட்டங்களை வைத்துள்ளனர்.
ஆனால் கர்த்தர் என்ன திட்டமிட்டுக்கொண்டிருகிறார் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.
கர்த்தர் அந்த ஜனங்களை ஒரு சிறப்பான நோக்கத்திற்காக இங்கே கொண்டுவந்தார்.
அந்த ஜனங்கள் அரவை எந்திரத்தில் போடப்பட்ட தானியத்தைப் போன்று நசுக்கப்படுவார்கள்.
இஸ்ரவேல் அதன் எதிரிகளைத் தோற்கடித்து வெல்லுவார்கள்
13“சீயோன் குமாரத்தியே, எழுந்து அந்த ஜனங்களை நசுக்கு.
நான் உன்னைப் பலமுள்ளதாக்குவேன்.
உனக்கு இரும்பினாலான கொம்புகளும், வெண்கலத்தாலான குளம்புகள் உள்ளது போன்றும் இருக்கும்.
நீ பல மக்களை அடித்துச் சிறிய துண்டுகளாக்குவாய்.
அவர்களின் செல்வத்தை கர்த்தருக்குக் கொடுப்பாய்.
பூமிக்கெல்லாம் கர்த்தராய் இருப்பவர்க்கு அவர்களுடைய பொக்கிஷத்தை நீ கொடுப்பாய்.”

Currently Selected:

மீகா 4: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in