YouVersion Logo
Search Icon

லூக்கா எழுதிய சுவிசேஷம் 22

22
இயேசுவைக் கொல்லத் திட்டம்
(மத்தேயு 26:1-5,14-16; மாற்கு 14:1-2,10-11; யோவான் 11:45-53)
1பஸ்கா எனப்படும், யூதர்களின் புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்குரிய காலம் நெருங்கி வந்தது. 2தலைமை ஆசாரியரும், வேதபாரகரும் இயேசுவைக் கொல்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் மக்களுக்கு பயந்தனர்.
யூதாஸின் சதித்திட்டம்
(மத்தேயு 26:14-16; மாற்கு 14:10-11)
3இயேசுவின் பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் யூதாஸ் காரியோத்து என்பவன் ஆவான். சாத்தான் யூதாஸிற்குள் புகுந்து ஒரு தீய செயலைச் செய்யுமாறு அவனைத் தூண்டினான். 4யூதாஸ் தலைமை ஆசாரியரிடமும், தேவாலயத்தைப் பாதுகாத்த வீரர்களிடமும் சென்று பேசினான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதைக் குறித்து அவன் அவர்களிடம் பேசினான். 5அவர்கள் இதனால் மிகுந்த சந்தோஷம் அடைந்தார்கள். இயேசுவை அவர்களிடம் ஒப்படைத்தால் அவனுக்குப் பணம் கொடுப்பதாக அவர்கள் கூறினார்கள். 6யூதாஸ் அதற்கு ஒப்புக்கொண்டான். இயேசுவை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு ஏற்ற நேரத்தை எதிர்பார்த்திருந்தான் யூதாஸ். தன்னைச் சுற்றிலும் மக்கள் எவரும் பார்க்காத நேரத்தில் அதைச் செய்யவேண்டுமென யூதாஸ் விரும்பினான்.
பஸ்கா உணவு ஆயத்தம்
(மத்தேயு 26:17-25; மாற்கு 14:12-21; யோவான் 13:21-30)
7புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் நாள் வந்தது. பஸ்கா ஆட்டுக்குட்டிகளை யூதர்கள் பலியிடுகிற நாள் அது ஆகும். 8பேதுருவையும் யோவனையும் நோக்கி இயேசு, “நாம் உண்பதற்கு நீங்கள் சென்று பஸ்கா விருந்தைத் தயாரியுங்கள்” என்றார்.
9பேதுருவும், யோவானும், இயேசுவிடம், “பஸ்கா விருந்தை நாங்கள் எங்கே தயாரிக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, 10“கவனியுங்கள், நீங்கள் எருசலேமுக்குள் சென்ற பின்பு ஒரு குடத்தில் தண்ணீரைச் சுமந்து செல்லும் ஒரு மனிதனைக் காண்பீர்கள். அவனைத் தொடர்ந்து செல்லுங்கள். அவன் ஒரு வீட்டுக்குள் செல்வான். அவனோடு நீங்கள் செல்லுங்கள். 11அந்த வீட்டின் சொந்தக்காரனிடம், ‘போதகரும் அவரது சீஷர்களும் பஸ்கா விருந்து உண்ணக் கூடிய அறையைத் தயவுசெய்து எங்களுக்குக் காட்டும்படியாக போதகர் கேட்கிறார்’ என்று சொல்லுங்கள். 12உடனே அந்த வீட்டின் சொந்தக்காரனான அம்மனிதன் மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவான். இந்த அறை உங்களுக்குத் தயாராக இருக்கும். பஸ்கா விருந்தை அங்கே தயாரியுங்கள்” என்றார்.
13எனவே பேதுருவும், யோவானும் சென்றார்கள். இயேசு கூறியபடியே எல்லாம் நிகழ்ந்தன. எனவே அவர்கள் பஸ்கா விருந்தைத் தயாரித்தார்கள்.
இயேசுவின் இரவு உணவு
(மத்தேயு 26:26-30; மாற்கு 14:22-26; 1 கொரி. 11:23-25)
14பஸ்கா விருந்தை அவர்கள் சாப்பிடும் நேரம் வந்தது. இயேசுவும், சீஷர்களும் மேசையைச் சூழ்ந்து அமர்ந்தனர். 15அவர்களிடம் இயேசு, “நான் இறக்கும் முன்பு இந்தப் பஸ்கா விருந்தை உங்களோடு சேர்ந்து உண்ணவேண்டும் என்று மிகவும் விரும்பினேன். 16தேவனின் இராஜ்யத்தில் அதற்குரிய உண்மையான பொருள் கொடுக்கப்படும்வரைக்கும் நான் இன்னொரு பஸ்கா விருந்தைப் புசிக்கமாட்டேன்” என்றார்.
17பின்பு இயேசு ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். அதற்காக தேவனுக்கு நன்றி கூறினார். பின்பு அவர், “இக்கோப்பையை எடுத்து இங்கு இருக்கும் ஒவ்வொருவருக்கும் கொடுங்கள். 18ஏனெனில் தேவனின் இராஜ்யம் வரும்வரைக்கும் நான் மீண்டும் திராட்சை இரசம் குடிக்கப் போவதில்லை” என்றார்.
19பின்பு இயேசு, அப்பத்தை எடுத்தார். அப்பத்திற்காக தேவனுக்கு நன்றி கூறிவிட்டு அதைப் பிட்டார். சீஷர்களுக்கு அதைக் கொடுத்தார். பின்பு இயேசு, “இதனை நான் உங்களுக்காகக் கொடுக்கிறேன். எனது சரீரமே இந்த அப்பமாகும். எனவே என்னை நினைவுகூருவதற்கு இப்படிச் செய்யுங்கள்” என்றார். 20அப்பத்தை உண்ட பின்னர், அதே வகையில் இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து “இந்தத் திராட்சை இரசம் தேவனுக்கும் அவரது மக்களுக்கும் உள்ள புதிய உடன்படிக்கையைக் காட்டுகிறது. நான் உங்களுக்காகக் கொடுக்கிற என் இரத்தத்தில் (மரணத்தில்) இப்புது உடன்படிக்கை ஆரம்பமாகிறது” என்றார்.
இயேசுவின் எதிரி யார்?
21இயேசு, “உங்களில் ஒருவன் என்னை வஞ்சிக்கப் போகிறான். மேசை மீது அவனது கை என் கைக்குப் பக்கத்தில் இருக்கிறது. 22தேவன் திட்டமிட்டபடியே மனிதகுமாரன் செய்வார். ஆனால் மனிதகுமாரனைக் கொல்லப்படுவதற்காக ஒப்படைக்கிற மனிதனுக்கு மிகவும் தீமை நடக்கும்” என்றார்.
23அப்போது சீஷர்கள் ஒருவருக்கொருவர், “இயேசுவுக்கு அவ்வாறு செய்பவன் நமக்குள் யார்?” என்று கேட்டார்கள்.
தாழ்மையாக இருங்கள்
24பின்னர் தங்களில் மிக முக்கியமானவன் யார் என்று அப்போஸ்தலர்கள் தமக்குள் விவாதிக்க ஆரம்பித்தார்கள். 25ஆனால் இயேசு அவர்களை நோக்கி, “உலகத்தில் (வேறுவேறு) தேசங்களின் ராஜாக்கள் மக்களை அரசாளுகிறார்கள். பிற மக்களின் மீது அதிகாரம் செலுத்துபவர்கள் ‘மக்களின் உதவியாளன்’ என தம்மை எல்லாரும் அழைக்கும்படிச் செய்கிறார்கள். 26ஆனால் நீங்கள் அவ்வாறு இருக்கலாகாது. உங்களுக்குள் மிகச் சிறந்தவன் சிறியவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். தலைவர்கள் வேலைக்காரனைப்போல இருக்கவேண்டும். 27யார் மிகவும் முக்கியமானவன்? மேசையின் அருகே உட்கார்ந்திருப்பவனா அல்லது அவனுக்குப் பரிமாறுகிறவனா? மேசையருகே உட்கார்ந்திருப்பவன் முக்கியமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் உங்களில் நான் ஒரு வேலைக்காரனைப்போல இருக்கிறேன்.
28“பெரும் சிக்கல்களின்போது நீங்கள் நம்பிக்கையோடு என்னருகில் தங்கி இருக்கிறீர்கள். 29எனது பிதா எனக்கு ஓர் இராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். என்னோடு அரசாளுகிற அதிகாரத்தை உங்களுக்கு நானும் கொடுக்கிறேன். 30என் அரசில் நீங்கள் மேசை அருகே என்னோடு உண்டு, பருகுவீர்கள். நீங்கள் சிம்மாசனங்களில் உட்கார்ந்து இஸ்ரவேலின் பன்னிரண்டு குலங்களையும் நியாயம்தீர்ப்பீர்கள்.
நம்பிக்கையை இழக்காதீர்கள்
(மத்தேயு 26:31-35; மாற்கு 14:27-31; யோவான் 13:36-38)
31“ஓர் உழவன் கோதுமையைப் புடைப்பது போல சாத்தான் உங்களைச் சோதிக்க வேண்டும் எனக் கேட்டுள்ளான். சீமோனே, சீமோனே (பேதுரு), 32நீ உன் நம்பிக்கையை இழக்காதிருக்கும்படியாக நான் பிரார்த்தனை செய்திருக்கிறேன். நீ என்னிடம் திரும்பி வரும்போது உன் சகோதரர்கள் வலிமையுறும்பொருட்டு உதவி செய்” என்றார்.
33ஆனால் பேதுரு இயேசுவை நோக்கி, “ஆண்டவரே, நான் உங்களுடன் சிறைக்கு வரத் தயாராக இருக்கிறேன். நான் உங்களோடு இறக்கவும் செய்வேன்” என்றான்.
34ஆனால் இயேசு, “பேதுரு, நாளைக் காலையில் சேவல் கூவும் முன்பு என்னைப்பற்றி உனக்குத் தெரியாதென கூறுவாய். இதனை நீ மூன்று முறை சொல்வாய்” என்றார்.
நிறைவேறும் வேதவாக்கியம்
35பின்பு இயேசு சீஷர்களை நோக்கி, “மக்களுக்குப் போதிப்பதற்காக நான் உங்களை அனுப்பினேன். நான் உங்களை பணம், பை, காலணிகள் எதுவுமின்றி அனுப்பினேன். ஆனால் ஏதேனும் உங்களுக்குக் குறை இருந்ததா?” என்று கேட்டார்.
சீஷர்கள், “இல்லை” என்றார்கள்.
36இயேசு அவர்களை நோக்கி, “ஆனால், இப்போது பணமோ, பையோ உங்களிடம் இருந்தால் அதை உங்களோடு கொண்டு செல்லுங்கள். உங்களிடம் வாள் இல்லையென்றால் உங்கள் சட்டையை விற்று ஒரு வாள் வாங்குங்கள். 37வேதவாக்கியம் சொல்கிறது,
“‘மக்கள் அவரைக் குற்றவாளி என்றார்கள்.’#ஏசா. 53:12
இந்த வேதாகமக் கருத்து நிறைவேறவேண்டும். இது என்னைக் குறித்து எழுதப்பட்டது, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது” என்றார்.
38சீஷர்கள், “ஆண்டவரே, பாருங்கள், இங்கு இரண்டு வாள்கள் உள்ளன” என்றார்கள்.
இயேசு அவர்களிடம், “இரண்டு போதுமானவை” என்றார்.
இயேசுவின் பிரார்த்தனை
(மத்தேயு 26:36-46; மாற்கு 14:32-42)
39-40இயேசு பட்டணத்தை (எருசலேம்) விட்டு ஒலிவமலைக்குச் சென்றார். அவரது சீஷர்கள் அவரோடு சென்றார்கள். அங்கே சென்றபிறகு சீஷர்களிடம் இயேசு, “நீங்கள் சோதனைக்கு ஆளாகாதவண்ணம் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
41பின்பு இயேசு ஐம்பது அடி தூரம் அளவு அவர்களைவிட்டுச் சென்றார். அவர் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தார்: 42“பிதாவே, நீங்கள் விரும்பினால் நான் துன்பத்தின் கோப்பையைக் குடிக்காமல் இருக்கும்படிச் செய்யுங்கள். ஆனால், நான் விரும்பும் வழியில் அல்லாமல் நீங்கள் விரும்பும் வழியிலேயே அது நடக்கட்டும்” என்றார். 43அப்போது பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதன் அவருக்கு உதவி செய்ய அனுப்பப்பட்டான். 44வேதனையால் இயேசு வருந்தினார். எனவே மிகவும் வேதனையோடு ஊக்கமாகப் பிரார்த்தனை செய்தார். குருதி கொட்டுவதுபோல அவரது முகத்தில் இருந்து வியர்வை வடிந்தது. 45இயேசு பிரார்த்தனை செய்து முடிந்த பின்னர், அவரது சீஷர்களிடம் சென்றார். அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். (அவர்கள் துயரம் அவர்களைச் சோர்வுறச் செய்தது.) 46இயேசு அவர்களை நோக்கி, “ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறீர்கள்? எழுந்து சோதனைக்கு எதிரான வலிமைக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்றார்.
இயேசு கைது செய்யப்படுதல்
(மத்தேயு 26:47-56; மாற்கு 14:43-50; யோவான் 18:3-11)
47இயேசு பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மக்கள் கூட்டம் வந்தது. பன்னிரண்டு சீஷர்களில் ஒருவன் அக்கூட்டத்தை வழிநடத்தி வந்தான். அவன் யூதாஸ். இயேசுவை முத்தமிடும் அளவுக்கு நெருக்கமாக யூதாஸ் வந்தான்.
48ஆனால் இயேசு அவனை நோக்கி, “யூதாஸ், மனித குமாரனை வஞ்சிக்கும்பொருட்டு நட்பின் முத்தத்தைப் பயன்படுத்துகிறாயா?” என்று கேட்டார். 49இயேசுவின் சீஷர்களும் அங்கேயே நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன நடக்கப்போகிறதென உணர்ந்தார்கள். சீஷர்கள் இயேசுவிடம், “ஐயா, எங்கள் வாள்களை பயன்படுத்தட்டுமா?” என்றார்கள். 50சீஷர்களில் ஒருவன் வாளைப் பயன்படுத்தவும் செய்தான். தலைமை ஆசாரியனின் வேலைக்காரனின் வலது காதை அவன் வெட்டினான்.
51இயேசு “நிறுத்து” என்றார். பின்பு இயேசு வேலைக்காரனின் காதைத் தொட்டு அவனைக் குணப்படுத்தினார்.
52இயேசுவைச் சிறைப்பிடிக்க வந்த கூட்டத்தில் தலைமை ஆசாரியரும், முதிய யூத அதிகாரிகளும், தேவாலயக் காவலர்களும் இருந்தனர். இயேசு அவர்களை நோக்கி, “வாளோடும் தடிகளோடும் நீங்கள் ஏன் வந்தீர்கள்? நான் குற்றவாளி என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 53ஒவ்வொரு நாளும் நான் தேவாலயத்தில் உங்களோடு இருந்தேன். ஏன் என்னை அங்கே சிறைபிடிக்க முயல வில்லை? ஆனால் இது உங்கள் காலம். இருள் (பாவம்) ஆட்சி புரியும் நேரம்” என்றார்.
பேதுருவின் மறுதலிப்பு
(மத்தேயு 26:57-58,69-75; மாற்கு 14:53-54,66-72; யோவான் 18:12-18,25-27)
54அவர்கள் இயேசுவைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். தலைமை ஆசாரியனின் வீட்டுக்கு இயேசுவை அவர்கள் கொண்டுவந்தார்கள். பேதுரு அவர்களைத் தொடர்ந்து வந்தான். ஆனால் அவன் இயேசுவின் அருகே வரவில்லை. 55வீரர்கள் வீட்டுக்கு வெளிப்புறத்தில் நடுவில் நெருப்பை வளர்த்து அதைச் சுற்றி உட்கார்ந்தார்கள். பேதுருவும் அவர்களோடு அமர்ந்தான். 56ஒரு வேலைக்காரச் சிறுமி பேதுரு உட்கார்ந்திருப்பதைக் கண்டாள். நெருப்பின் ஒளியில் அவனை அவள் பார்க்க முடிந்தது. அவனுடைய முகத்தைக் கூர்ந்து நோக்கினாள். பின்பு அவள், “இந்த மனிதனும் அவரோடு (இயேசு) கூட இருந்தான்” என்றாள்.
57ஆனால் பேதுரு, அது உண்மையில்லை என்றான். அவன், “பெண்ணே, எனக்கு அவரைத் தெரியாது” என்றான். 58சற்று நேரத்துக்குப் பின் இன்னொருவன் பேதுருவைப் பார்த்து, “இயேசுவைப் பின்பற்றும் சீஷர்களில் நீயும் ஒருவன்” என்றான்.
ஆனால் பேதுரு “மனிதனே, நான் அவரது சீஷர்களில் ஒருவன் அல்ல” என்றான்.
59ஏறத்தாழ ஒரு மணி நேரத்துக்குப் பின்னர், இன்னொரு மனிதன், “இது உண்மை, இந்த மனிதன் அவரோடு இருந்தான். இவன் கலிலேயாவைச் சேர்ந்தவன்” என்றான். “எனக்கு நிச்சமாகத் தெரியும்” என்று அம்மனிதன் மீண்டும் வலியுறுத்தினான்.
60ஆனால் பேதுரு, “மனிதனே. நீ கூறுகிற விஷயத்தைக்குறித்து எனக்குத் தெரியாது” என்றான்.
பேதுரு இவ்வாறு சொல்லிக்கொண்டிருக்கும் தருணத்திலேயே சேவல் கூவியது. 61அப்போது கர்த்தர் (இயேசு) திரும்பி பேதுருவின் கண்களைக் கூர்ந்து நோக்கினார். “சேவல் காலையில் கூவும் முன்னரே நீ மூன்று முறை என்னை உனக்குத் தெரியாது என்று கூறுவாய்” என்று கர்த்தர் ஏற்கெனவே தன்னிடம் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்தான். 62பின்னர் பேதுரு வெளியே சென்று மனமுருகி அழுதான்.
இயேசுவைப் பரிகசித்தல்
(மத்தேயு 26:67-68; மாற்கு 14:65)
63-64சில மனிதர்கள் இயேசுவைக் காவல்புரிந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பலவாறு கேலிசெய்தார்கள். அவர் பார்க்க முடியாதபடி அவரது கண்களை மறைத்தார்கள். பின்பு அவரை அடித்து விட்டு “நீ தீர்க்கதரிசியானால் யார் உன்னை அடித்தார்கள் என்று கூறு” என்றார்கள். 65அம்மனிதர்கள் அவரை அவமானப்படுத்தினார்கள்.
யூத அதிகாரிகள் முன் இயேசு
(மத்தேயு 26:59-66; மாற்கு 14:55-64; யோவான் 18:19-24)
66மறுநாள் காலையில், மக்களின் முதிய அதிகாரிகள், தலைமை ஆசாரியர், வேதபாரகர் ஆகியோர் ஒன்றாகக் கூடினார்கள். அவர்கள் தம் உயர்ந்த நீதிமன்றத்துக்கு இயேசுவை அழைத்துச் சென்றார்கள். 67அவர்கள், “நீ கிறிஸ்துவானால் அப்படியே எங்களுக்குச் சொல்” என்றார்கள்.
இயேசு அவர்களுக்கு, “நான் கிறிஸ்து என்று உங்களுக்குக் கூறினால் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். 68நான் உங்களைக் கேட்டால் நீங்கள் பதில் தரமாட்டீர்கள். 69ஆனால் இப்பொழுதிலிருந்து தேவனுடைய சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் மனித குமாரன் உட்கார்ந்திருப்பார்” என்றார்.
70அவர்கள் எல்லாரும், “அப்படியானால் நீ தேவனுடைய குமாரனா?” என்றார்கள். இயேசு அவர்களுக்கு “ஆம், நான் தேவனுடைய குமாரன் என்று நீங்கள் சொல்வது சரியே” என்றார்.
71அவர்கள், “ஏன் நமக்கு இப்போது சாட்சிகள் தேவை? அவன் இவ்வாறு சொல்வதை நாமே கேட்டோமே!” என்றனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for லூக்கா எழுதிய சுவிசேஷம் 22