YouVersion Logo
Search Icon

யோனா 4

4
தேவனுடைய இரக்கம் யோனாவைக் கோபமடையச்செய்கிறது
1தேவன் நகரத்தை காப்பாற்றியதைக் குறித்து யோனா மகிழ்ச்சி அடையவில்லை, யோனா கோபம் அடைந்தான். 2யோனா கர்த்தரிடம் முறையிட்டு, “நான் இது நடக்குமென்று அறிவேன்! நான் எனது சொந்த நாட்டில் இருந்தேன். நீர் என்னை இங்கு வரச்சொன்னீர். அந்த நேரத்தில், இப்பாவ நகரத்திலுள்ள மக்களை நீர் மன்னிப்பீர் என்பதை நான் அறிவேன். எனவே நான் தர்ஷிசுக்கு ஓடிப்போக முடிவுசெய்தேன். நீர் இரக்கமுள்ள தேவன் என்பது எனக்குத் தெரியும்! நீர் இரக்கங்காட்டி மக்களைத் தண்டிக்கமாட்டீர் என்பதை நான் அறிவேன்! நீர் கருணை நிறைந்தவர் என்பதை அறிவேன். இம்மக்கள் பாவம் செய்வதை நிறுத்தினால், நீர் அவர்களை அழிக்கவேண்டும் என்னும் திட்டத்தை மாற்றிக்கொள்வீர் என்றும் நான் அறிவேன். 3எனவே நான் இப்பொழுது உம்மை வேண்டுகிறேன், கர்த்தாவே, தயவுசெய்து என்னைக் கொன்றுவிடும், நான் உயிரோடு இருப்பதைவிட மரித்துப் போவது நல்லது!” என்றான்.
4பிறகு, கர்த்தர், “நான் அம்மக்களை அழிக்கவில்லை என்பதற்காக நீ என்னிடம் கோபம் கொள்வது சரியென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார்.
5யோனா இவை எல்லாவற்றுக்காகவும் கோபத்தோடு இருந்தான். எனவே அவன் நகரத்தை விட்டுப்போனான். யோனா, நகரத்திற்குக் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு இடத்திற்குச் சென்று, தனக்கென்று ஒரு இருப்பிடத்தை அமைத்துக்கொண்டான். பிறகு அவன் அங்கே நிழலில் உட்கார்ந்து, நகரத்திற்கு என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கக் காத்துக்கொண்டிருந்தான்.
ஆமணக்குச் செடியும், ஒரு புழுவும்
6கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை யோனாவுக்கு மேல் வேகமாக வளரச் செய்தார். இது யோனா உட்காருவதற்குரிய நல்ல குளிர்ந்த நிழலைத் தந்தது. இது யோனவிற்கு மேலும் வசதியாக இருக்க உதவியது. யோனா அந்தச் செடிக்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
7மறுநாள் காலையில், தேவன் அச்செடியைத் தின்பதற்கு ஒரு புழுவை அனுப்பினார். அப்புழு செடியைத் தின்னத் தொடங்கியது, செடி செத்துப்போனது.
8சூரியன் வானத்தில் உயரமாக வந்தபோது, தேவன் சூடான கிழக்குக் காற்று வீசச் செய்தார். சூரியன் யோனாவின் தலையை மிகச் சூடாக்கியது. யோனா மிகமிகப் பலவீனமானான், யோனா தன்னை மரிக்கவிடும்படி தேவனிடம் வேண்டினான். யோனா, “நான் உயிர் வாழ்வதைவிட மரிப்பதே நல்லது” என்றான்.
9ஆனால் தேவன் யோனாவிடம், “இந்தச் செடி செத்ததற்காக நீ என் மீது கோபப்படுவது சரியென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார். யோனா, “ஆம், நான் கோபப்படுவது சரிதான், நான் சாகிற அளவிற்குக் கோபமாக இருக்கிறேன்!” என்றார்.
10கர்த்தர், “நீ அச்செடிக்காக எதுவும் செய்யவில்லை! நீ அதனை வளரச்செய்யவில்லை. அது இரவில் வளர்ந்தது, மறுநாள் அது செத்தது. இப்பொழுது நீ அச்செடியைப்பற்றி துக்கப்படுகிறாய். 11நீ ஒரு செடிக்காகக் கவலைப்படுவதானால், நிச்சயமாக நான் நினிவே போன்ற பெரிய நகரத்திற்காக வருத்தப்படலாம். நகரத்தில் ஏராளமான மனிதர்களும் மிருகங்களும் இருக்கிறார்கள். அந்த நகரத்தில் தாங்கள் தீமை செய்து கொண்டிருந்ததை அறியாத 1,20,000 க்கும் மேலான மக்கள் இருக்கிறார்கள்!” என்றார்.

Currently Selected:

யோனா 4: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in