YouVersion Logo
Search Icon

யோனா 1

1
தேவன் அழைக்கிறார், யோனா ஓடுகிறான்
1கர்த்தர் அமித்தாயின் குமாரனான யோனாவோடு பேசினார். கர்த்தர், 2“நினிவே ஒரு பெரிய நகரம். நான் அங்கே மக்கள் செய்து கொண்டிருக்கிற அநேக தீமைகைளப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எனவே அந்நகரத்திற்குப் போய் அம்மக்களிடம் அத்தீமைகளை நிறுத்தும்படிச் சொல்” என்றார்.
3யோனா தேவனுக்குக் கீழ்ப்படிய விரும்பவில்லை. எனவே யோனா கர்த்தரிடமிருந்து விலகி ஓடிவிட முயற்சித்தான். யோப்பா பட்டணத்திற்குப் போனான். யோனா அங்கே தர்ஷீசுக்குப் போகும் படகு ஒன்றைக் கண்டான். யோனா பயணத்துக்காக பணம் கொடுத்து படகில் ஏறினான். யோனா அம்மக்களோடு தர்ஷீசுக்குப் பயணம் செய்து கர்த்தரை விட்டு விலகி ஓடிப்போக விரும்பினான்.
பெரும்புயல்
4ஆனால் கர்த்தர் கடலில் ஒரு பெரும் புயலை உருவாக்கினார். காற்றானது கடலைக் கொந்தளிக்கச் செய்தது. புயல் மிகவும் பலமாக வீச, படகு இரண்டு பகுதியாக உடைந்துவிடும் போலத் தோன்றியது. 5பணியாட்கள் படகை மூழ்குவதிலிருந்து காப்பாற்ற அதன் கனத்தைக் குறைக்க விரும்பினார்கள். எனவே அவர்கள் கடலுக்குள் சரக்குகளைத் தூக்கி எறிந்தனர். படகோட்டிகள் மிகவும் பயந்தார்கள். ஒவ்வொருவரும் தனது தேவனிடம் ஜெபம் செய்யத் தொடங்கினார்கள்.
யோனா படகின் கீழ்த்தளத்திற்குச் சென்று படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். 6படகின் தலைவன் யோனாவிடம், “எழுந்திரு! ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறாய்? உனது தேவனிடம் ஜெபம் செய். ஒரு வேளை உனது தேவன் உன் ஜெபத்தைக் கேட்டு நம்மைக் காப்பாற்றலாம்!” என்றான்.
புயல் வரக் காரணம் என்ன?
7பிறகு அவர்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் சீட்டுக் குலுக்கிப்போட்டு இத்துன்பம் வரக் காரணம் என்னவென்று பார்ப்போம்” என்று பேசிக்கொண்டார்கள்.
எனவே அவர்கள் சீட்டுப் போட்டார்கள். யோனாவால் இந்தத் துன்பம் வந்தது என்பதை அது காட்டியது. 8பிறகு அவர்கள் யோனவிடம், “உனது குற்றத்தால்தான் எங்களுக்கு இந்த பயங்கரமான துன்பம் ஏற்பட்டிருக்கிறது. எனவே நீ என்ன செய்திருக்கிறாய் என்று எங்களிடம் சொல். உனது தொழில் என்ன? நீ எங்கிருந்து வருகிறாய்? உனது நாடு எது? உனது மக்கள் யார்?” என்று கேட்டார்கள்.
9யோனா அவர்களிடம், “நான் ஒரு எபிரேயன் (யூதன்). நான் பரலேகத்தின் தேவனாகிய கர்த்தரை ஆராதிக்கிறேன். அவரே கடலையும் நிலத்தையும் படைத்த தேவன்” என்றான்.
10யோனா, தான் கர்த்தரிடமிருந்து ஓடி வந்ததாகச் சொன்னான். அவர்கள் அதனை அறிந்ததும் மிகவும் பயந்தார்கள். அவர்கள் யோனாவிடம் “உனது தேவனுக்கு எதிராக எந்த பயங்கரமான செயலைச் செய்தாய்?” என்று கேட்டார்கள்.
11காற்றும், கடல் அலைகளும் மேலும், மேலும் பலமடைந்தன. எனவே அவர்கள் யோனாவிடம், “நாங்கள் எங்களைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யவேண்டும்? நாங்கள் கடலை அமைதிப்படுத்த உனக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார்கள்.
12யோனா அவர்களிடம், “நான் குற்றம் செய்துவிட்டேன் என்று எனக்குத் தெரியும். என்னால்தான் இந்தப் புயல் வந்துள்ளது என்று எனக்குத் தெரியும். எனவே என்னைக் கடலுக்குள் எறியுங்கள். கடல் அமைதி அடையும்” என்றான்.
13ஆனால் அவர்கள் யோனாவைக் கடலுக்குள் எறிய விரும்பவில்லை. அவர்கள் கப்பலை மறுபடியும் கரைக்குக் கொண்டுப்போக முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் முடியவில்லை. காற்றும், கடல் அலைகளும் மேலும், மேலும் பலமடைந்தன.
யோனாவின் தண்டனை
14எனவே அவர்கள் கர்த்தரிடம், “கர்த்தாவே, நாங்கள் இவனை அவன் செய்த தவறுக்காக கடலில் தூக்கி எறிகிறோம். எனவே, ஒரு அப்பாவி மனிதனைக் கொன்றோம் என்று எங்களைக் குற்றப்படுத்தாதிரும். நாங்கள் அவனைக் கொன்றதற்காக எங்களை மரிக்கச் செய்யாதிரும். நீர்தான் கர்த்தர், நீர் என்ன செய்ய விரும்புகிறீரோ அதைச் செய்வீர் என்பதை நாங்கள் அறிகிறோம். ஆனால் தயவு செய்து எங்களிடம் இரக்கமாய் இரும்” என்று அழுதார்கள்.
15அவர்கள் யோனாவைக் கடலுக்குள் வீசினார்கள். புயல் நின்று கடல் அமைதியானது. 16இதனைப் பார்த்த அவர்கள் பயப்படத் தொடங்கி கர்த்தரிடம் மரியாதை செலுத்தத் தொடங்கினார்கள். அவர்கள் பலி கொடுத்து கர்த்தருக்குச் சிறப்பான வாக்குறுதிகளைச் செய்தார்கள்.
17யோனா கடலுக்குள் விழுந்தவுடன், கர்த்தர் ஒரு பெரிய மீனைத் தேர்ந்தெடுத்து, யோனாவை விழுங்கும்படிச் செய்தார். யோனா அந்த மீனின் வயிற்றுக்குள் மூன்று பகல்களும், மூன்று இரவுகளும் இருந்தான்.

Currently Selected:

யோனா 1: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy