YouVersion Logo
Search Icon

யோவேல் 1

1
வெட்டுக்கிளிகள் விளைச்சலை அழிக்கும்
1பெத்துவேலின் குமாரனாகிய யோவேல் கர்த்தரிடமிருந்து இந்த செய்தியைப் பெற்றான்.
2தலைவர்களே, இந்தச் செய்தியைக் கேளுங்கள்.
இந்த நாட்டில் வாழ்கின்ற ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
உங்கள் வாழ்நாளில் இதற்கு முன்பு இது போல் நடந்திருக்கிறதா? இல்லை.
உங்கள் தந்தைகளின் வாழ்நாளில் இதுபோல் நடந்திருக்கிறதா? இல்லை.
3நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் இவற்றைக் கூறுங்கள்.
உங்கள் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகளிடம் சொல்லட்டும். உங்கள் பேரக்குழந்தைகள் அதற்கு அடுத்தத் தலைமுறையிடம் சொல்வார்கள்.
4பச்சைப்புழு விட்டதை
வெட்டுக்கிளி தின்றது.
வெட்டுக்கிளி விட்டதைப்
பச்சைக் கிளி தின்றது.
பச்சைக்கிளி விட்டதை
முசுக்கட்டைப் பூச்சி தின்றது.
வெட்டுக்கிளிகளின் வருகை
5குடியர்களே, விழித்து எழுந்து அழுங்கள்.
திராட்சைரசத்தைக் குடிக்கும் ஜனங்களே அழுங்கள்.
ஏனென்றால் உங்கள் இனிமையான திரட்சைரசம் முடிந்தது.
நீங்கள் இனி அந்தத் திராட்சைரசத்தின் சுவையைப் பெறமாட்டீர்கள்.
6எனது தேசத்திற்கு எதிராகப் போரிட ஒரு பெரிய வல்லமை வாய்ந்த நாடு வந்தது.
அதன் வீரர்கள் எண்ணமுடியாத அளவிற்கு அநேகராக இருந்தார்கள்.
அவர்களது ஆயுதங்கள் சிங்கத்தின் பற்களைப் போன்று கூர்மையுள்ளதாகவும்,
சிங்கத்தின் தாடையைப்போன்று வல்லமையுள்ளதாகவும் இருந்தது.
7அது என் திராட்சைச் செடியை அழித்தது.
அதன் நல்ல கொடிகள் வாடி அழிந்தது.
அது என் அத்திமரத்தை அழித்தது.
பட்டைகளை உரித்து எறிந்துவிட்டது.
ஜனங்களின் அழுகை
8மணமுடிப்பதற்குத் தயாராக இருந்த இளம் பெண்
மரித்துப்போன தன் மணவாளனுக்காக அழுவது போன்று அழுங்கள்.
9ஆசாரியர்களே, கர்த்தருடைய பணியாளர்களே, அழுங்கள்.
ஏனென்றால், கர்த்தருடைய ஆலயத்தில் இனிமேல் தானியக் காணிக்கையும், பானங்களின் காணிக்கையும் இருக்கப்போவதில்லை.
10வயல்வெளிகள் பாழாயின. பூமி கூட அழுதுகொண்டிருக்கிறது.
ஏனென்றால் தானியம் அழிக்கப்பட்டிருக்கிறது.
புதிய திராட்சைரசம் வறண்டிருக்கிறது.
ஒலிவ எண்ணெய் போய்விட்டது.
11உழவர்களே, துக்கமாயிருங்கள்.
திராட்சை விவசாயிகளே சத்தமாக அழுங்கள்.
கோதுமைக்காகவும் பார்லிக்காகவும் அழுங்கள்.
ஏனென்றால் வயல்வெளியில் அறுவடை இல்லாமல் போனது.
12திராட்சைக்கொடிகள் காய்ந்துவிட்டன.
அத்திமரம் அழிந்துகொண்டிருக்கிறது.
மாதுளை, பேரீச்சை, கிச்சிலி
மற்றும் அனைத்து மரங்களும் வாடிவிட்டன.
ஜனங்களின் மகிழ்ச்சி மரித்துப்போயிற்று.
13ஆசாரியர்களே, உங்களது துக்கத்திற்குரிய ஆடையை அணிந்துகொண்டு உரக்க அழுங்கள்.
பலிபீடத்தின் பணியாளர்களே, உரக்க அழுங்கள். எனது தேவனுடைய பணியாளர்களே,
நீங்கள் துக்கத்தின் ஆடைகளோடு தூங்குவீர்கள்.
ஏனென்றால் தேவனுடைய ஆலயத்தில் இனிமேல் தானிய காணிக்கையும் பானங்களின் காணிக்கையும் இருப்பதில்லை.
வெட்டுக்கிளிகளின் பேரழிவு
14உபவாசமிருக்க வேண்டிய சிறப்பு நேரம் இருக்குமென்று ஜனங்களுக்கு அறிவியுங்கள் ஒரு சிறப்புக் கூட்டத்திற்கு ஜனங்களைக் கூட்டுங்கள். தலைவர்களைக் கூப்பிடுங்கள். நாட்டில் வாழ்கிற எல்லா ஜனங்களையும் சேர்த்துக் கூப்பிடுங்கள். அவர்கள் அனைவரையும் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்திற்கு வரவழைத்து கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள்.
15துக்கமாயிருங்கள். ஏனென்றால் கர்த்தருடைய சிறப்புக்குரிய நாள் அருகில் இருக்கிறது. அப்போது, தண்டனையானது சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து ஒரு சங்காரம் போன்று வரும். 16நமது உணவு போய்விட்டது. நமது தேவனுடைய ஆலயத்திலிருந்து மகிழ்ச்சியும் சந்தோஷமும் போய்விட்டன. 17நாங்கள் விதைகளை விதைத்தோம். ஆனால் விதைகள் மண்ணில் காய்ந்து மரித்துக்கிடக்கின்றன. நமது செடிகள் எல்லாம் காய்ந்து மரித்துப்போயின. நமது களஞ்சியங்கள் வெறுமையாகவும் விழுந்தும் கிடக்கின்றன.
18மிருகங்கள் பசியோடு தவிக்கின்றன. மாட்டு மந்தைகள், அலைந்து திரிந்து கலங்குகின்றன. அவற்றுக்கு மேய்வதற்கு புல் இல்லை. ஆட்டு மந்தைகளும் மரித்துக்கொண்டிருக்கின்றன. 19கர்த்தாவே நான் உம்மை உதவிக்காக அழைக்கின்றேன். நெருப்பானது நமது பசுமையான வயல்களை வனாந்தரமாக்கிவிட்டது. வயல்வெளிகளில் உள்ள மரங்களை எல்லாம் நெருப்புச் ஜுவாலைகள் எரித்துவிட்டன. 20காட்டுமிருங்கள் கூட உமது உதவியை நாடுகின்றன. ஓடைகள் வற்றிவிட்டன. அங்கு தண்ணீரில்லை. நெருப்பானது நமது பச்சை வயல்வெளிகளை வனாந்தரமாக்கிவிட்டது.

Currently Selected:

யோவேல் 1: TAERV

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in