YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 9

9
யோபு பில்தாத்திற்குப் பதில் கூறுகிறான்.
1அப்போது யோபு,
2“ஆம் நீர் கூறுவது உண்மையென அறிவேன்.
ஆனால் ஒரு மனிதன் எப்படி தேவனுக்கு முன் நீதிமானாயிருக்க முடியும்?
3ஒருவன் தேவனிடம் வாதாட முடியாது!
தேவன் 1,000 கேள்விகளைக் கேட்கமுடியும், ஒருவனும் ஒரு கேள்விக்குக்கூட பதில் கூற முடியாது!
4தேவன் மிகுந்த ஞானமுள்ளவர், அவரது வல்லமை மிகப்பெரியது!
ஒருவனும் தேவனோடு போராடி, காயமுறாமலிருக்க முடியாது.
5தேவன் கோபமாயிருக்கும்போது பர்வதங்களை அசைக்கிறார்,
அவை அதனை அறியாது.
6பூமியை அசைக்கும்படி தேவன் பூமியதிர்ச்சியை அனுப்புகிறார்.
தேவன் பூமியின் அஸ்திபாரங்களை அசைக்கிறார்.
7தேவன் சூரியனிடம் பேசமுடியும், அதை உதயமாகாமல் செய்யமுடியும்.
அவர் விண்மீன்களை ஒளிவிடாதபடி பூட்டமுடியும்.
8தேவன் மட்டுமே வானங்களை உண்டாக்கினார்,
அவர் சமுத்திரத்தின் அலைகளின் மேல் நடக்கிறார்.
9“அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருக சீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினார்.
10மனிதர் புரிந்துகொள்ள முடியாத அற்புதமான காரியங்களை தேவன் செய்கிறார்.
தேவனுடைய எண்ணிமுடியாத அதிசங்களுக்கு முடிவேயில்லை!
11தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைப் பார்க்க முடியாது.
தேவன் என்னைக் கடந்துச் செல்கையில் நான் அவரைக் கவனிப்பதில்லை.
12தேவன் எதையாவது எடுத்துக்கொண்டால் அவரை யாரும் தடுக்க முடியாது.
‘நீர் என்ன செய்கிறீர்?’
என்று யாரும் அவரைக் கேட்கமுடியாது.
13தேவன் தமது கோபத்தை அடக்கிக்கொள்ளமாட்டார்.
ராகாபின்#9:13 ராகாப் ஒரு ராட்சசன் அல்லது கடல்மிருகம். ராகாப் கடலைக் கட்டுப்படுத்துவதாக ஜனங்கள் நினைத்தனர். ராகாப் தேவனின் பகைவரது அடையாளம் அல்லது தீமைக்குரிய ஏதோ ஒன்று. உதவியாளருங்கூட தேவனுக்குப் பயந்திருக்கிறார்கள்.
14எனவே நான் தேவனுக்கு பதில் கொடுக்க முடியாது.
அவரிடம் என்ன சொல்வேனென்பதை நான் அறியேன்.
15நான் களங்கமற்றவன், ஆனால் என்னால் அவருக்குப் பதில் கூறமுடியாது.
என் நீதிபதியிடம் (தேவனிடம்) இரக்கத்திற்காக மன்றாடமட்டுமே என்னாலாகும்.
16நான் கூப்பிட்டு அவர் பதில் தந்தாலும்,
அவர் உண்மையாகவே எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நான் நம்ப முடியாது.
17தேவன் என்னை நசுக்குவதற்குப் புயல்களை அனுப்புகிறார்.
எக்காரணமுமின்றி எனக்கு இன்னுமதிகமான காயங்களைத் தருகிறார்.
18மீண்டும் இன்னொரு முறை சுவாசிக்க தேவன் என்னை அனுமதிக்கமாட்டார்.
அவர் எனக்கு இன்னும் தெல்லைகளைத் தருகிறார்.
19தேவன் மிகுந்த வல்லமையுள்ளவர்!
யார் தேவனை நியாயசபைக்கு அழைத்து வந்து, நியாயம் வழங்கும்படி சொல்ல முடியும்?
20நான் களங்கமற்றவன், ஆனால் நான் கூறுபவை என்னைக் குற்றவாளியாகக் காட்டக்கூடும்.
நான் உத்தமன், ஆனால் நான் பேசினால் என் வாய் என்னைக் குற்றவாளியாக நிரூபிக்கிறது.
21நான் களங்க மற்றவன், நான் எதைச் சிந்திப்பதென அறியேன்.
நான் என் சொந்த வாழ்க்கையையே வெறுக்கிறேன்.
22நான் எனக்குள்ளே, ‘இதே மாதிரி எல்லோருக்கும் நிகழ்கிறது’
களங்கமற்றவர்களும் குற்றவாளிகளும் முடிவை காண்பார்கள் என்று சொல்லிக்கொள்கிறேன்.
23கொடிய செயலொன்று நிகழ்ந்து களங்கமற்றவன் கொல்லப்பட்டால்
தேவன் அவரைப் பார்த்து நகைப்பாரா?
24தீயவன் ஒருவன் ஒரு நிலத்தைத் தன தாக்கிக்கொள்ளும்போது,
நிகழ்வனவற்றைத் தலைவர்கள் காணாதபடி தேவன் செய்கிறாரா? அது உண்மையானால் தேவன் யார்?
25“ஓர் ஓட்டக்காரனைக் காட்டிலும் என் நாட்கள் வேகமாகக் கழிகின்றன.
என் நாட்கள் பறக்கின்றன, அவற்றில் சந்தோஷமில்லை.
26வேகமாய் ஓடுகின்ற கப்பல்களைப் போலவும்
இரையைப் பிடிக்க பாய்கின்ற கழுகுகளைப் போலவும் என் நாட்கள் கடந்துச்செல்கின்றன.
27“நான் முறையிடுவதில்லை, ‘என் வேதனையை மறப்பேன்,
என் முகத்தில் புன்னகை பொலிவேன்!’
என்று நான் கூறினால்,
28அது எந்த மாற்றத்தையும் உண்மையாக ஏற்படுத்துவதில்லை!
துன்பங்கள் என்னை அச்சுறுத்துகின்றன.
29நான் ஏற்கெனவே குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டேன்.
எனவே, நான் ஏன் முயன்றுகொண்டிருக்க வேண்டும்?
‘அதை மறந்துவிடு!’
என நான் சொல்கிறேன்.
30பனியால் என்னைக் கழுவினாலும்,
சவுக்காரத்தினால் (சோப்பினால்) என் கைகளைச் சுத்தம் செய்தாலும்,
31தேவன் என்னைச் சேற்றுக் குழியில் தள்ளுவார்.
அப்போது என் உடைகளும் என்னை வெறுக்கும்.
32தேவன் கூறும் குற்றங்களுக்கு பதில் கூற என்னைப் போன்று மனிதன் அல்ல,
நியாய சபையில் நாங்கள் ஒருவருக்கொருவர் சந்திக்க முடியாது.
33இரு பக்கங்களிலும் நியாயம் கேட்க ஒருவர் இருந்தால், நல்லதென நான் விரும்புகிறேன்.
எங்களை நியாயமாக (தக்க முறையில்) நியாயந்தீர்க்க வல்லவர் ஒருவர் இருக்கமாட்டாரா என நான் விரும்புகிறேன்.
34தேவனுடைய தண்டிக்கும் கோலை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடுபவர் ஒருவர் இருக்கமாட்டாரா என விரும்புகிறேன்.
அப்போது அவருடைய பயமுறுத்துதல்கள் என்னை அச்சுறுத்தாது.
35அப்போது தேவனைப்பற்றிப் பயப்படாமல், நான் சொல்ல விரும்புவனவற்றைக் கூற முடியும்.
ஆனால் இப்போது நான் அவ்வாறு செய்ய முடியாது” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in