YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 41

41
1“யோபுவே, உன்னால் லிவியாதானை ஒரு தூண்டிலினால் பிடிக்க முடியுமா?
அதன் நாவை உன்னால் ஒரு கயிற்றினால் கட்ட முடியுமா?
2யோபுவே, லிவியாதானின் மூக்கில் ஒரு கயிற்றை நுழைக்கமுடியுமா?
அல்லது, அதன் தாடையில் ஒரு ஆணியைச் செருகமுடியுமா?
3யோபுவே, அதனை விடுதலைச் செய்யுமாறு லிவியாதான் உன்னை இரந்து வேண்டுமா?
மென்மையான சொற்களால் அது உன்னோடு பேசுமா?
4யோபுவே, லிவியாதான் உன்னோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு
என்றென்றும் உனக்குச் சேவை புரிய வாக்குறுதி தருமா?
5யோபுவே, நீ லிவியாதானோடு ஒரு பறவையிடம் விளையாடுவதைப்போன்று விளையாடுவாயா?
உன் பணிப்பெண்கள் அதனோடு விளையாடுமாறு அதனை ஒரு கயிற்றால் கட்டுவாயா?
6யோபுவே, மீன் பிடிப்போர் உன்னிடமிருந்து லிவியாதானை வாங்க முயல்வார்களா?
அவர்கள் அதைத் துண்டுகளாக்கி, வியாபாரிகளுக்கு அதை விற்பார்களா?
7யோபுவே, நீ லிவியாதானின் தோலோ அல்லது தலையிலோ ஈட்டியை எறிய (வீச) முடியுமா?
8“யோபுவே, நீ லிவியாதானைத் தாக்க ஒரு முறை முயன்றால், பின்பு ஒருபோதும் அதனைச் செய்யமாட்டாய்!
எத்தகைய யுத்தம் நடக்கும் என்பதைச் சற்றே யோசித்துப்பார்!
9நீ லிவியாதானைத் தோற்கடிக்க முடியுமென எண்ணினால் அதை மறந்துவிடு!
எந்த நம்பிக்கையும் இல்லை!
(நம்பிக்கையற்றுப்போவாய்)!
அதைப் பார்த்தாலே பீதி (அச்சம்) விளையும்!
10அதனை எழுப்பிக் கோபமுறுத்த
எந்த மனிதனுக்கும் தைரியம் (துணிவு) இல்லை.
“ஒருவனும் என்னை எதிர்த்து நிற்கமுடியாது!
11நான் (தேவன்) ஒருவனுக்கும் கடமைப்பட்டவன் அல்லன்.
பரலோகத்தின் கீழ் உள்ளவை அனைத்தும் எனக்குரியன.
12“யோபுவே, லிவியாதானின் கால்களைப் பற்றியும் அதன் வலிமை, அழகிய வடிவம் ஆகியற்றைப் பற்றியும்
நான் உனக்குக் கூறுவேன்.
13ஒருவனும் அதன் தோலைக் குத்திப் பிளக்க முடியாது.
அதன் தோல் ஒரு கேடயத்தைப் போன்றது!
14லிவியாதானின் தாடையைத் திறக்குமாறு செய்ய ஒருவனும் அதனை வற்புறுத்த முடியாது.
அதன் வாயிலுள்ள பற்கள் ஜனங்களைப் பயமுறுத்தும்.
15லிவியாதானின் முதுகில் இறுக்கமாக இணைக்கப்பட்டுள்ள
கேடய வரிசைகள் காணப்படும்.
16அக்கேடயங்கள் காற்றும் நுழைய முடியாதபடி
இறுகிப் பிணைந்திருக்கும்,
17கேடயங்கள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும்.
அவை பிரிக்க முடியாதபடி ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கும்.
18லிவியாதான் தும்மும்போது, மின்னல் மின்னுவதைப் போன்றிருக்கும்.
அதன் கண்கள் உதயகால ஒளிபோல் பிரகாசிக்கும்.
19அதன் வாயிலிருந்து தீப்பந்தங்கள் வெளிவரும்.
நெருப்புப் பொறிகள் வெளிப்படும்.
20கொதிக்கும் பானையின் அடியில் எரியும் புதரைப்போல்
லிவியாதானின் மூக்கிலிருந்து புகை கிளம்பும்.
21லிவியாதானின் மூச்சு நிலக்கரியை எரிக்கும்,
அதன் வாயிலிருந்து நெருப்பு எழும்பும்.
22லிவியாதானின் கழுத்து மிகுந்த வல்லமை கொண்டது.
ஜனங்கள் பயந்து அதனிடமிருந்து ஓடிப்போகிறார்கள்.
23அதன் தோலில் மிருதுவான பகுதி கிடையாது.
அது இரும்பைப்போல கடினமானது.
24லிவியாதானின் இருதயம் பாறையைப் போன்றது.
அதற்கு அச்சம் கிடையாது.
(அது அஞ்சுவதில்லை).
அது எந்திரத்தின் அடிக்கல்லைப்போல் கடினமாயிருக்கும்.
25லிவியாதான் எழுகையில் வலியோர் அஞ்சுவார்.
லிவியாதான் வாலை வீசும்போது அவர்கள் ஓடிவிடுவர்.
26வாட்கள், ஈட்டிகள், மற்றும் வல்லயம் லிவியாதானைத் தாக்கும்.
ஆனால் அவையே எகிறிவிழும்.
அக்கருவிகள் அதைக் காயப்படுத்துவதேயில்லை!
27லிவியாதான் இரும்பைப் புல்லைப் போல் உடைக்கும்.
உளுத்துப்போன (அரித்துப்போன) மரத்தைப்போன்று அது வெண்கலத்தை உடைக்கும்.
28அம்புகள் லிவியாதானை ஓடச்செய்யாது,
உலர்ந்த புல்லாய் பாறைகள் அதனின்று விலகிவீழும்.
29பெருந்தடிகள் லிவியாதானைத் தாக்கும்போது, அவற்றை அது புல்லாய் உணரும்.
மனிதர் அதன் மீது ஈட்டிகளை எறியும்போது, அது சிரிக்கும்.
30கடினமாக, கூரிய, உடைந்த, மட்பாண்டத்தின் துண்டுகளைப்போல், லிவியாதானின் உடம்பின் அடியிலுள்ள தோல் இருக்கும்.
தாற்றுக்கோலைப் போன்று அது சேற்றின் மீது அடையாளமிட்டுச் செல்லும்.
31கொதிக்கும் பானையைப்போன்று லிவியாதான் தண்ணீரைக் கலக்குகிறது.
பானையின் கொதிக்கும் எண்ணெயைப் போன்று அது குமிழிகளை எழுப்பும்.
32லிவியாதான் நீந்தும்போது, அதன் பின்னே ஒரு பாதையை விட்டுச்செல்லும்.
அது தண்ணீரைக் கலக்கும், அதன் பின்னே வெண்மையான நுரையைத் தள்ளிச் செல்லும்.
33லிவியாதானைப்போன்று உலகில் வேறெந்த மிருகமும் இல்லை.
அச்சமின்றி படைக்கப்பட்ட மிருகம் அது.
34கர்வம் மிக்க மிருகங்களையும் லிவியாதான் நகைப்போடு பார்க்கும்.
அது எல்லா காட்டுமிருகங்களுக்கும் ராஜா.
கர்த்தராகிய நான் லிவியாதானைப் படைத்தேன்!” என்றார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யோபுடைய சரித்திரம் 41