YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 33

33
1“இப்போது, யோபுவே, என்னைக் கவனித்துக் கேளும்:
நான் சொல்கிறவற்றிற்குச் செவிகொடும்.
2நான் பேச தயாராயிருக்கிறேன்.
3என் இருதயம் நேர்மையானது, எனவே நேர்மையான வார்த்தைகளைப் பேசுவேன்.
எனக்குத் தெரிந்தவற்றைக் குறித்து நான் உண்மையாக பேசுவேன்.
4தேவனுடைய ஆவி என்னை உண்டாக்கிற்று.
என் உயிர் சர்வ வல்லமையுள்ள தேவனிடமிருந்து வந்தது.
5யோபுவே, நான் சொல்வதைக் கேளும், முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்.
உனது பதிலைத் தயாராக வைத்திரும், அப்போது நீ என்னோடு விவாதிக்க முடியும்.
6தேவனுக்கு முன்பாக நீயும் நானும் சமமானவர்களே.
தேவன் மண்ணைப் பயன்படுத்தி நம்மிருவரையும் உண்டாக்கினார்.
7யோபுவே, எனக்கு அஞ்சாமல் இரும்.
நான் உன்னிடம் கடினமாயிருக்கமாட்டேன்.
8“ஆனால் யோபுவே, நீ சொன்னதை நான் கேட்டேன்.
9நீ, ‘நான் பரிசுத்தமானவன் நான் களங்கமற்றவன்.
நான் தவறேதும் செய்யவில்லை.
நான் குற்றமற்றவன்.
10நான் தவறேதும் செய்யவில்லை.
ஆனால் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார்.
தேவன் என்னை ஒரு பகைவனைப்போல் நடத்தினார்.
11தேவன் என் கால்களில் விலங்கிட்டார்.
நான் செய்கிற ஒவ்வொன்றையும் தேவன் கண்ணோக்குகிறார்’ என்று சொன்னாய்.
12“ஆனால் யோபுவே, நீ இவ்விஷயத்தில் தவறியிருக்கிறாய்.
நீ தவறு செய்கிறாய் என்பதை நான் நிரூபிப்பேன்.
ஏனெனில் தேவன் எல்லா மனிதர்களையும்விட அதிகமாக அறிந்திருக்கிறார்.
13யோபுவே, நீ தேவனோடு விவாதிக்கிறாய்.
தேவன் எல்லாவற்றையும் உனக்கு விளக்கவேண்டுமென நீ நினைக்கிறாய்.
14தேவன் தாம் செய்கிற எல்லாவற்றையும் விளக்கலாம்.
வெவ்வேறு வகைகளில் தேவன் பேசலாம், ஆனால் ஜனங்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
15-16தேவன் கனவில் ஜனங்களோடு பேசலாம், அல்லது இரவில் அவர்கள் ஆழ்ந்த நித்திரைக் கொள்ளும்போது தரிசனம் தந்து பேசலாம்,
அவர்கள் தேவனுடைய எச்சரிக்கையைக் கேட்கும்போது மிகவும் அச்சம்கொள்ளலாம்.
17ஜனங்கள் தவறு செய்வதை நிறுத்தவும்
பெருமைகொள்வதை விடவும் தேவன் எச்சரிக்கை செய்கிறார்.
18மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி அவர்களைக் காப்பதற்காக தேவன் ஜனங்களை எச்சரிக்கிறார்.
ஒருவன் அழியாதபடி காப்பதற்கு தேவன் அவ்வாறு செய்கிறார்.
19“அல்லது ஒருவன் படுக்கையில் கிடந்து தேவனுடைய தண்டனையை அனுபவிக்கும்போது ஒருவன் தேவனுடைய சத்தத்தைக் கேட்கக்கூடும்.
வேதனையால் அம்மனிதனை தேவன் எச்சரிக்கிறார்.
எலும்பெல்லாம் நொறுங்கும்படி அம்மனிதன் நோவை அனுபவிக்கிறான்.
20அப்போது அம்மனிதன் உண்ணமுடியாது.
மிகச் சிறந்த உணவையும் வெறுக்கும்படி அவன் மிகுந்த நோவை அனுபவிக்கிறான்.
21அவன் மிகவும் மெலிந்து எலும்புகள் வெளித் தோன்றும்வரை
அவன் உடம்பு மெலிந்து போகும்.
22அம்மனிதன் மரணத்தின் இடத்திற்கு அருகே இருக்கிறான்.
அவன் வாழ்க்கை மரணத்திற்கு அருகாமையில் உள்ளது.
23தேவனிடம் ஆயிரக்கணக்காக தூதர்கள் இருப்பார்கள்.
அத்தூதர்களுள் ஒருவன் அம்மனிதனைக் கண்ணோக்கிக் கொண்டிருக்கலாம். அந்த தூதன் அம்மனிதனுக்காகப் பரிந்துபேசி அவன் செய்த நற்செயல்களை எடுத்துரைக்கலாம்.
24அந்த தூதன் அம்மனிதனிடம் இரக்கம் காட்டலாம்.
அத்தூதன் தேவனிடம், ‘மரணத்தின் இடத்திலிருந்து அம்மனிதனைக் காப்பாற்றும்.
அவன் பாவத்திற்குப் பரிகாரமாக நான் ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கிறேன்’ எனலாம்.
25அப்போது அம்மனிதனின் உடல் மீண்டும் இளமையும், வலிமையும் பெறும்.
அவன் இளமையிலிருந்தாற்போன்று இருப்பான்.
26தேவனிடம் ஜெபிப்பான், தேவன் அவனுடைய ஜெபத்திற்குப் பதில் தருவார்.
அம்மனிதன் களிப்பால் ஆரவாரித்து, தேவனைத் தொழுதுகொள்வான்.
அப்போது அம்மனிதன் மீண்டும் நல்வாழ்க்கை வாழ்வான்.
27அப்போது அம்மனிதன் ஜனங்களிடம் அறிக்கையிடுவான்.
அவன், ‘நான் பாவம் செய்தேன்.
நான் நல்லதைக் கெட்டதாக்கினேன்.
ஆனால் தேவன் என்னைத் தண்டிக்க வேண்டிய அளவு தண்டிக்கவில்லை.
28மரணத்தின் இடத்திற்குப் போகாதபடி, தேவன் என் ஆத்துமாவைக் காப்பாற்றினார்.
இப்போது மீண்டும் என் வாழ்க்கையை நான் அனுபவிக்க முடியும்’ என்பான்.
29“அம்மனிதனுக்காக மீண்டும், மீண்டும் தேவன் எல்லாவற்றையும் செய்கிறார்.
30ஏனென்றால், அம்மனிதனை எச்சரித்து, அவனது ஆத்துமாவை மரணத்தின் இடத்திலிருந்து காப்பதால்
அம்மனிதன் வாழ்க்கையை அனுபவிக்க முடியும் என்பதற்காக இதைச் செய்கிறார்.
31“யோபுவே, என்னை கவனியும்.
நான் கூறுவதைக் கேளும்.
அமைதியாக இரும், என்னை பேசவிடும்.
32ஆனால் யோபுவே, நீர் என்னோடு கருத்து வேறுபாடு கொள்ளவிரும்பினால், அப்போது நீர் பேசத் தொடங்கும்.
உமது விவாதத்தைக் கூறும், ஏனெனில், நான் உம்மைத் திருத்த விரும்புகிறேன்.
33ஆனால் யோபுவே, நீர் கூற எதுவுமில்லையெனில், நான் சொல்வதைக் கேளும்.
அமைதியாக இரும், உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யோபுடைய சரித்திரம் 33