YouVersion Logo
Search Icon

யோபுடைய சரித்திரம் 20

20
சோப்பார் பதிலளிக்கிறான்
1அப்போது நாகமாவின் சோப்பார் பதிலாக:
2“யோபுவே, உன்னிடம் குழப்பமான எண்ணங்கள் மிகுந்துள்ளன.
எனவே நான் உனக்குப் பதில் கூறவேண்டும்.
நான் நினைத்துக்கொண்டிருப்பதை விரைந்து உனக்குக் கூறவேண்டும்.
3நீ உனது பதில்களால் எங்களை அவமானப்படுத்தினாய்!
ஆனால் நான் ஞானமுள்ளவன் உனக்கு எவ்வாறு பதில் தரவேண்டும் என்பதை நான் அறிவேன்.
4-5“தீயவனின் மகிழ்ச்சி நீண்டகாலம் நிலைக்காது என்பதை நீ அறிவாய்.
ஆதாம், பூமியில் வந்த காலம் முதல் அதுவே உண்மையாக உள்ளது.
தேவனைப்பற்றிக் கவலைப்படாதவனின் மகிழ்ச்சி குறுகிய காலமே நிலைக்கும்.
6தீயவனின் பெருமை வானத்தை எட்டலாம்.
அவன் தலை மேகங்களைத் தொடலாம்.
7அவன் தன் மலத்தைப்போலவே, என்றென்றும் அழிக்கப்படுவான்.
அவனை அறிந்த ஜனங்கள் ‘அவன் எங்கே?’ என்பார்கள்.
8கனவைப்போன்று, அவன் பறந்துப் போவான்.
ஒருவனும் அவனைக் கண்டடைய முடியாது.
அவன் துரத்தப்பட்டு, ஒரு கெட்ட கனவாய் மறக்கப்படுவான்.
9அவனைப் பார்த்த ஜனங்கள் மீண்டும் அவனைக் காணமாட்டார்கள்.
அவன் குடும்பத்தினர் அவனை மீண்டும் பார்ப்பதில்லை.
10அவன் ஏழைகளிடமிருந்து எடுத்ததை அத்தீயவனின் பிள்ளைகள் திரும்பக் கொடுப்பார்கள்.
தீயவனின் சொந்தக் கைகளே அவனது செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கும்.
11அவன் இளைஞனாயிருந்தபோது, அவன் எலும்புகள் பெலனுள்ளவையாக இருந்தன.
ஆனால், உடம்பின் பிற பகுதிகளைப்போன்று, அவை விரைவில் துகளில் கிடக்கும்.
12“கெட்ட மனிதனின் வாய் தீமையை இனிமையாக ருசிக்கும்.
அவன் அதை முழுவதும் சுவைப்பதற்காக அவனது நாவின் அடியில் வைப்பான்.
13கெட்ட மனிதன் தீமையில் களிப்பான்.
அவன் அதை விட்டுவிட விரும்பமாட்டான்.
அது அவனது வாய்க்குள்ளிருக்கும் இனிப்பைப் போலிருக்கும்.
14ஆனால் அத்தீமை அவன் வயிற்றில் நஞ்சாகும்.
பாம்பின் விஷத்தைப்போன்று அது அவனுள் கசப்பான விஷமாக மாறும்.
15தீயவன் செல்வங்களை விழுங்கியிருக்கிறான்.
ஆனால் அவன் அவற்றை வாந்தியெடுப்பான்.
தீயவன் அவற்றை வாந்தியெடுக்கும்படி தேவன் செய்வார்.
16பாம்புகளின் விஷத்தைப்போன்று, தீயவன் பருகும் பானமும் இருக்கும்.
பாம்பின் நாக்கு அவனைக் கொல்லும்.
17அப்போது, அத்தீயவன் தேனாலும் பாலாலும் ஓடுகிற நதிகளைக் கண்டு களிக்கமாட்டான்.
18தீயவன், அவன் சம்பாதித்த செல்வங்களையெல்லாம் திருப்பித் தரும்படி கட்டாயப்படுத்தப்படுவான்.
தன்னுடைய உழைப்பின் பலனை அவன் அனுபவிக்க அனுமதிக்கப்படமாட்டான்.
19அவன் மற்றவர்கள் கட்டியிருந்த வீடுகளை அபகரித்துக்கொண்டான்.
20“தீயவன் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
அவனது செல்வம் அவனைக் காப்பாற்றாது.
21அவன் சாப்பிடுகிறபோது, எதுவும் மீதியாயிருப்பதில்லை.
அவன் வெற்றி தொடராது.
22தீயவனுக்கு மிகுதியாக இருக்கும்போது அவன் துன்பங்களால் அழுத்தப்படுவான்.
அவனது சிக்கல்கள் அவன்மேல் வந்து அழுத்தும்!
23தீயவன் அவனுக்குத் தேவையானவற்றையெல்லாம் உண்ட பின்பு,
அவனுக்கெதிராக தேவன் அவரது எரியும் கோபத்தை வீசுவார்.
தீயவன் மேல் தேவன் தண்டனையைப் பொழிவார்.
24தீயவன் இரும்பு வாளுக்குத் தப்பி ஓடிவிடலாம்,
ஆனால் ஒரு வெண்கல அம்பு அவனை எய்து வீழ்த்தும்.
25அவன் உடம்பின் வழியாக அந்த வெண்கல அம்புச் சென்று முதுகின் வழியாக வெளிவரும்.
அதன் பிரகாசிக்கும் (ஒளிவிடும்) முனை அவனது ஈரலைப் பிளக்கும்.
அவன் பயங்கர பீதி அடைவான்.
26அவன் பொக்கிஷங்கள் அழிந்துபோகும்.
எந்த மனிதனும் பற்றவைக்காத ஒரு நெருப்பு அவனை அழிக்கும்.
அவன் வீட்டில் மீந்திருக்கும் ஒவ்வொரு பொருளையும் அந்த நெருப்பு அழிக்கும்.
27தீயவன் குற்றவாளி என்று பரலோகம் நிரூபிக்கும் (நிறுவும்)
பூமி அவனுக்கெதிராக சாட்சிச் சொல்லும்.
28தேவனுடைய கோப வெள்ளத்தில்
அவன் வீட்டிலுள்ளவை எல்லாம் இழுத்துச் செல்லப்படும்.
29தீயோருக்கு தேவன் இவற்றைச் செய்யத் திட்டமிடுகிறார்.
அவர்களுக்கு அதையே கொடுக்க தேவன் திட்டமிடுகிறார்” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for யோபுடைய சரித்திரம் 20