YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 7

7
இயேசுவும் அவரது சகோதரர்களும்
1இதற்குப் பிறகு இயேசு கலிலேயாவைச் சுற்றிப் பிரயாணம் செய்தார். அவர் யூதேயா நாட்டில் பிரயாணம் செய்ய விரும்பவில்லை. ஏனென்றால் அங்குள்ள யூதர்கள் அவரைக் கொலை செய்ய விரும்பினர். 2அப்பொழுது யூதர்களின் கூடாரப் பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது. 3ஆகையால் இயேசுவின் சகோதரர்கள் அவரிடம், “நீங்கள் இந்த இடத்தை விட்டு பண்டிகைக்காக யூதேயாவிற்கு போங்கள். அங்கே உமது சீஷர்கள் உம்முடைய அற்புதங்களைக் காண்பார்கள். 4மக்கள் தன்னை அறிந்து கொள்ள வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் அவன், தான் செய்கிற காரியங்களை மறைக்கக் கூடாது. உங்களை உலகத்துக்கு வெளிப்படுத்துங்கள். அவர்களும் நீங்கள் செய்யும் அற்புதங்களைக் கண்டுகொள்ளட்டும்” என்றார்கள். 5(இயேசுவின் சகோதரர்கூட அவரிடம் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள்.)
6இயேசு தனது சகோதரர்களிடம், “எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை. ஆனால் நீங்கள் போவதற்கு எந்த நேரமும் சரியான நேரம்தான். 7இந்த உலகம் உங்களை வெறுப்பதில்லை. ஆனால் உலகம் என்னை வெறுக்கிறது. ஏனென்றால் நான் அவர்களிடம் அவர்கள் தீமை செய்கிறார்கள் என்று சொல்கிறேன். 8ஆகையால் நீங்கள் பண்டிகைக்குப் போங்கள். நான் இப்பொழுது பண்டிகைக்குப் போவதாக இல்லை. எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை” என்றார். 9இயேசு இவற்றைச் சொன்ன பிறகு கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.
10எனவே, இயேசுவின் சகோதரர்கள் பண்டிகைக்காகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் போனபிறகு இயேசுவும் போனார். ஆனால் அவர் மக்களுக்குக் காட்சி தரவில்லை. 11அப்பண்டிகையின்போது யூதர்கள் இயேசுவைத் தேடினார்கள். “எங்கே அந்த மனிதன்?” என்றார்கள்.
12அங்கே ஒரு பெருங்கூட்டம் இருந்தது. அவர்களில் பெரும்பாலோர் இயேசுவைப் பற்றி தங்களுக்குள் பேசிக்கொண்டனர். சிலர் “அவர் மிக நல்ல மனிதர்” என்றனர். ஆனால் வேறு சிலர், “இல்லை, அவன் மக்களை ஏமாற்றுகிறவன்” என்றனர். 13ஆனால் எவருக்கும் இயேசுவைப்பற்றி வெளிப்படையாகக் கூறுவதற்குரிய தைரியம் இல்லை. மக்கள் யூதத் தலைவர்களுக்கு அஞ்சினர்.
இயேசு எருசலேமில் உபதேசித்தல்
14பண்டிகை பாதி முடிந்துவிட்டது. பிறகு இயேசு தேவாலயத்துக்குப் போய் அங்கே உபதேசம் செய்தார். 15யூதர்கள் ஆச்சரியப்பட்டனர். “இந்த மனிதர் பள்ளியில் படித்ததில்லை. இவற்றை இவர் எவ்வாறு கற்றுக்கொண்டார்?” என்று கூறிக்கொண்டனர்.
16“நான் உங்களுக்கு செய்கிற உபதேசம் எனக்குச் சொந்தமானவை அல்ல. அவை என்னை அனுப்பினவரிடமிருந்து எனக்கு வந்தவை. 17தேவனின் விருப்பப்படி செயல்புரிய ஒருவன் விரும்பினால், அவன் என் உபதேசம் தேவனிடமிருந்து வந்தது என்பதை அறிந்துகொள்வான். அதோடு அவன், இந்த உபதேசம் எனக்குச் சொந்தமானது அல்ல என்பதையும் அறிந்துகொள்வான். 18தன் சொந்தமான சிந்தனைகளை உபதேசிக்கிற எவனும் தனக்குரிய பெருமையை அடையவே முயற்சிக்கிறான். தன்னை அனுப்பினவரைப் பெருமைப்படுத்த முயற்சிக்கும் ஒருவன் எப்பொழுதும் உண்மையையே பேசுகிறான். அவனிடம் எந்தத் தவறும் இல்லை. 19மோசே உங்களுக்குச் சில சட்டங்களைக் கொடுத்திருக்கிறார் இல்லையா? ஆனால் உங்களில் எவரும் அதற்குக் கீழ்ப்படிவதில்லை. என்னை ஏன் கொலை செய்ய முயற்சி செய்கிறீர்கள்?” என்று இயேசு கேட்டார்.
20“நீ பிசாசு பிடித்தவன். அதனால்தான் இப்படி உளறுகிறாய். நாங்கள் உன்னைக் கொலை செய்ய முயற்சி செய்யவில்லை” என்று மக்கள் பதில் சொன்னார்கள்.
21“நான் ஓர் அற்புதம் செய்தேன். நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். 22மோசே விருத்தசேதனம்பற்றிய சட்டங்களைக் கொடுத்திருக்கிறார். (ஆனால் உண்மையில் மோசே உங்களுக்கு விருத்தசேதனத்தைத் தரவில்லை. அது மோசேக்கு முற்காலத்திலேயே நமது மக்களிடமிருந்து வந்துவிட்டது) ஆகையால் சில வேளைகளில் ஓய்வு நாட்களிலும் நீங்கள் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். 23மோசேயின் கட்டளைக்குக் கீழ்ப்படிய ஓய்வு நாளிலும் ஒரு குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யலாம் என்பதை இது காட்டுகிறது. எனவே, நான் ஓய்வுநாளில் ஒரு மனிதனின் முழு சரீரத்தையும் குணமாக்கினேன் என்பதற்காக என்மேல் ஏன் கோபமாக இருக்கிறீர்கள்? 24வெளித் தோற்றத்தை வைத்து முடிவுக்கு வருவதை நிறுத்துங்கள். சரி எது என்பதைக்கொண்டு அதன் மூலம் நியாயமாக முடிவு செய்யுங்கள்” என்றார் இயேசு.
இயேசுதான் கிறிஸ்துவா?
25எருசலேமில் உள்ள மக்களில் சிலர் “அவர்கள் கொலை செய்ய முயல்கிற மனிதர் இவர்தான். 26ஆனால் இவரோ எல்லோரும் காணும்படியும் கேட்கும்படியும் உபதேசம் செய்துகொண்டிருக்கிறார். ஒருவரும் அவர் உபதேசிப்பதை நிறுத்திவிட முயற்சி செய்யவில்லை. ஒருவேளை, யூதத் தலைவர்கள் இவர்தான் உண்மையான கிறிஸ்து என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும். 27ஆனால் இந்த மனிதர் எங்கிருந்து வருகிறாரென்று நாம் அறிவோம். ஆனால் உண்மையான கிறிஸ்து வரும்போது அவர் எங்கிருந்து வந்தார் என்பது எவருக்கும் தெரியாமல் இருக்கும்” என்றனர்.
28இயேசு தேவாலயத்தில் தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருந்தார். “ஆம், நான் யார் என்பதையும் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. உண்மையான ஒருவரால் நான் அனுப்பப்பட்டேன். நீங்கள் அவரை அறியமாட்டீர்கள். 29ஆனால் அவரை நான் அறிவேன். நான் அவரிடமிருந்தே வந்தேன். அவர் என்னை அனுப்பினார்” என்றார் இயேசு.
30இயேசு இவ்வாறு சொன்னபிறகு மக்கள் அவரைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் ஒருவராலும் இயேசுவைத் தொடமுடியவில்லை. இயேசு கொல்லப்படுவதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை.
31ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தார்கள். “நாங்கள் கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். கிறிஸ்து வந்தால், அவர் இந்த மனிதரைவிட அதிகமான அற்புதங்களைச் செய்வாரோ? இல்லை. எனவே, இந்த மனிதரே கிறிஸ்துவாக இருக்க வேண்டும்” என்றனர்.
இயேசுவைக் கைது செய்ய முயற்சி
32இயேசுவைப்பற்றி மக்கள் பேசிக்கொள்வதைப் பரிசேயர்கள் அறிந்தனர். தலைமை ஆசாரியரும், பரிசேயரும் தேவாலயச் சேவகர்களை இயேசுவைக் கைதுசெய்ய அனுப்பினர். 33இயேசு மக்களிடம், “இன்னும் கொஞ்சக் காலம் நான் உங்களோடு இருப்பேன். பிறகு நான் என்னை அனுப்பியவரிடம் திரும்பிப்போவேன். 34அப்போது என்னை நீங்கள் தேடுவீர்கள். ஆனால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. நான் இருக்கும் இடத்துக்கும் உங்களால் வர முடியாது” என்றார்.
35“நாம் கண்டுபிடிக்க முடியாதபடி இவன் எந்த இடத்திற்குப் போகப்போகிறான்? இவன் நமது மக்கள் வாழ்கிற கிரேக்க நகரங்களுக்குப் போகப் போகிறானா? அல்லது அங்கேயுள்ள கிரேக்க மக்களுக்கு உபதேசிக்கப் போகிறானா? 36‘நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியாது’ என்று கூறுகிறானே. ‘நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்றும் கூறுகிறானே, அதற்கு என்ன பொருள்?” என்று யூதர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
பரிசுத்த ஆவியானவர்
37பண்டிகையின் இறுதி நாளும் வந்தது. இது மிக முக்கியமான நாள். அன்று இயேசு எழுந்து நின்று உரத்த குரலில் பேசினார். “ஒருவன் தாகமாய் இருந்தால் அவன் என்னிடம் வந்து பருகட்டும். 38என்னில் நம்பிக்கை வைக்கிறவனுடைய இதயத்தில் இருந்து ஜீவத் தண்ணீருள்ள ஆறுகள் பெருக்கெடுக்கும், இதைத்தான் வேத வாக்கியங்கள் கூறுகின்றன” என்றார். 39இயேசு பரிசுத்த ஆவியானவரைப்பற்றி இவ்வாறு பேசினார். இன்னும் மக்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் பகிர்ந்தளிக்கப்படவில்லை. ஏனென்றால் இயேசு இன்னும் மரணமடையவும் இல்லை; மகிமையாக உயிர்த்தெழவும் இல்லை. ஆனால் பிறகு அவரிடம் விசுவாசம் வைக்கப்போகிற மக்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெறுவர்.
இயேசுவைப் பற்றி மக்களின் விவாதம்
40இயேசு சொன்ன இக்காரியங்களை மக்கள் கேட்டனர். சிலர், “இந்த மனிதர் உண்மையான தீர்க்கதரிசிதான்” என்றனர்.
41வேறு சிலரோ, “இவர்தான் கிறிஸ்து” என்றனர். மற்றும் சிலரோ, “கிறிஸ்து கலிலேயாவிலிருந்து வரமாட்டார். 42வேதவாக்கியங்கள், தாவீதின் குடும்பத்திலிருந்து தான் கிறிஸ்து வரப்போகிறார் என்று கூறுகின்றன. அத்துடன் தாவீது வாழ்ந்த பெத்லகேமிலிருந்துதான் கிறிஸ்து வருவார் என்றும் கூறுகின்றன” என்றனர். 43எனவே, இயேசுவைப் பற்றிய கருத்துக்களில் ஒருவருக்கொருவர் ஒத்துக்கொள்ளவில்லை. 44சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினர். ஆனால் ஒருவரும் உண்மையில் அவர் மேல் கை வைக்கவில்லை.
யூததலைவர்களின் அவிசுவாசம்
45தேவாலயச் சேவகர்கள் தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயர்களிடமும் திரும்பிப் போனார்கள். “ஏன் இயேசுவைக் கொண்டுவரவில்லை?” என்று அவர்கள் கேட்டனர்.
46தேவாலயச் சேவகர்களோ, “எந்த ஒரு மனிதனும் அவரைப்போல் கருத்துக்களைக் கூறியதில்லை” என்றனர்.
47இதற்குப் பரிசேயர்கள், “அப்படியானால் இயேசு உங்களையும் முட்டாளாக்கிவிட்டார். 48எந்தத் தலைவராவது இயேசுவின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களா? இல்லை. எந்தப் பரிசேயராவது அவனை நம்புகிறார்களா? இல்லை. 49ஆனால் அவரை நம்புகிற மக்கள் மோசேயின் சட்டத்தைப்பற்றி ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனின் சாபத்திற்கு ஆளாவார்கள்” என்றார்கள்.
50ஆனால் அந்தக் கூட்டத்தில் நிக்கொதேமுவும் இருந்தான். நிக்கொதேமுவும் இயேசுவைக் காண்பதற்காகப் போனவர்களில் ஒருவன்.#7:50 நிக்கொதேமு … ஒருவன் நிக்கொதேமு இயேசுவிடம் வந்தது பற்றிய விவரம் யோவான் 3:1-21-ல் உள்ளது. 51அவன், “ஒரு மனிதனைப் பற்றி முழுவதும் கேட்டறிவதற்கு முன்னால் தண்டிப்பதற்கு நம் சட்டம் இடம் கொடுப்பதில்லை. அவன் என்னென்ன செய்திருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளும்வரை நாம் தீர்ப்பளிக்க முடியாது” என்றான்.
52யூதத் தலைவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவிலிருந்துதான் வந்திருக்கிறாயா? வேதவாக்கியங்களைப் படித்துப் பார். கலிலேயாவிலிருந்து எந்தவொரு தீர்க்கதரிசியும் வர முடியாது என்று நீ அறிந்துகொள்வாய்” என்றனர்.
விபசாரத்தில் பிடிக்கப்பட்ட பெண்
53 # 7:53 சில கிரேக்க பிரதிகளில் 7:53–8:11 வரை உள்ள வசனங்களை எழுதவில்லை. யூதத் தலைவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு வீட்டிற்குப் போயினர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy