யோவான் எழுதிய சுவிசேஷம் 19
19
1பிறகு பிலாத்து இயேசுவை அழைத்துப்போய் சவுக்கால் அடிக்குமாறு கட்டளையிட்டான். 2போர்ச் சேவகர்கள் முள்ளினால் ஒரு முடியைப் பின்னினர். அவர்கள் அதை இயேசுவின் தலைமீது அணிவித்தனர். பிறகு சிவப்பான அங்கியை அவருக்கு உடுத்தினார்கள். 3“யூதருடைய ராஜாவே, வாழ்க” என்று அடிக்கடி பலதடவை அவரிடம் வந்து சொன்னார்கள். அவர்கள் இயேசுவை முகத்தில் அறைந்தார்கள்.
4மீண்டும் பிலாத்து யூதர்களிடம் போய் “பாருங்கள்! நான் உங்களுக்காக இயேசுவை வெளியே கொண்டு வருகிறேன். நான் இவனிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்றான். 5பிறகு இயேசு வெளியே வந்தார். அவர் தலையில் முள்முடியும் சரீரத்தில் சிவப்பு அங்கியும் அணிந்திருந்தார். “இதோ அந்த மனிதன்” என்று யூதர்களிடம் பிலாத்து சொன்னான்.
6பிரதான ஆசாரியரும் யூதக் காவலர்களும் இயேசுவைக் கண்டவுடன் “அவனைச் சிலுவையில் அறையுங்கள்” என்று சத்தமிட்டனர்.
ஆனால் பிலாத்துவோ, “நீங்கள் அவனை அழைத்துப்போய் நீங்களாகவே அவனைச் சிலுவையில் அறையுங்கள். நான் தண்டனை தரும்படியாக இவனுக்கு எதிராக எந்த குற்றத்தையும் கண்டு பிடிக்கவில்லை” என்று கூறிவிட்டான்.
7யூதர்களோ, “எங்களுக்கென்று ஒரு சட்டம் உண்டு. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனென்றால் அவன் தன்னை தேவனின் குமாரன் என்று கூறியிருக்கிறான்” என்றனர்.
8பிலாத்து இவற்றைக் கேட்டதும் மேலும் பயந்தான். 9பிலாத்து மீண்டும் அரண்மனைக்குள் போனான். அவன் இயேசுவிடம், “நீ எங்கே இருந்து வருகிறாய்?” எனக் கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் சொல்லவில்லை. 10அதனால் பிலாத்து, “நீ என்னோடு பேச மறுக்கவா செய்கிறாய்? நான் உன்னை விடுதலை செய்யக்கூடிய அதிகாரத்தில் இருப்பவன். இதனை நினைத்துக்கொள். உன்னைச் சிலுவையில் அறைந்து கொல்லும் அதிகாரமும் எனக்கு இருக்கிறது” என்றான்.
11“தேவனிடமிருந்து அதிகாரம் வந்தால் ஒழிய நீர் என்மீது எவ்வித அதிகாரமும் செலுத்த முடியாது. எனவே, என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிகப் பாவம் உண்டு” என்று இயேசு பதிலுரைத்தார்.
12இதற்குப் பிறகு இயேசுவை விடுதலை செய்யப் பிலாத்து முயற்சி செய்தான். ஆனால் யூதர்களோ, “எவனொருவன் தன்னை ராஜா என்று கூறுகிறானோ அவன் இராயனின் பகைவன். எனவே, நீங்கள் இயேசுவை விடுதலை செய்தால் நீங்கள் இராயனின் நண்பன் இல்லை என்று பொருள்” எனச் சத்தமிட்டார்கள்.
13யூதர்கள் சொன்னவற்றைப் பிலாத்து கேட்டான். எனவே, அவன் இயேசுவை அரண்மனையை விட்டு வெளியே இழுத்து வந்தான். யூதர்களின் மொழியில் கபத்தா என்று அழைக்கப்பெறும் கல்தள வரிசை அமைக்கப்பட்ட மேடைக்கு வந்தான். அங்கே இருந்த நீதிபதியின் இருக்கையில் அமர்ந்தான். 14அப்பொழுது அது பஸ்காவுக்குத் தயாராகும் நாளாகவும் மதியவேளையாகவும் இருந்தது. பிலாத்து யூதர்களிடம் “இதோ உங்கள் ராஜா” என்றான்.
15அதற்கு யூதர்கள், “அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனை அப்புறப்படுத்துங்கள்! அவனைச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள்” என்று சத்தமிட்டனர்.
அவர்களிடம் பிலாத்து, “உங்களது ராஜாவை நான் சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
அதற்குத் தலைமை ஆசாரியன், “எங்களது ஒரே ராஜா இராயன் மட்டுமே” என்று பதில் சொன்னான். 16அதனால் பிலாத்து இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொல்லும்படி அவரை அவர்களிடம் ஒப்படைத்தான்.
சிலுவையில் இயேசு
(மத்தேயு 27:32-44; மாற்கு 15:21-32; லூக்கா 23:26-39)
சேவகர்கள் இயேசுவை இழுத்துக்கொண்டுபோனார்கள். 17இயேசு தனது சிலுவையைத் தானே சுமந்துகொண்டுபோனார். அவர் மண்டை ஓடுகளின் இடம் என்னும் கபாலஸ்தலம் என்று அழைக்கப்படும் இடத்துக்குப்போனார். (இதனை யூத மொழியில் கொல்கதா என்று அழைப்பர்) 18கொல்கதாவில் சிலுவையில் இயேசுவை ஆணிகளால் அறைந்தார்கள். அவர்கள் வேறு இருவரையும் சிலுவையில் அறைந்தனர். இயேசுவை நடுவிலும் ஏனைய இருவரை இரு பக்கத்திலும் நட்டு வைத்தனர்.
19பிலாத்து ஓர் அறிவிப்பு எழுதி அதனை இயேசுவின் சிலுவையின் மேல் பொருத்தி வைத்தான். அந்த அறிவிப்பில் “நசரேயனாகிய இயேசு, யூதர்களின் ராஜா” என்று எழுதப்பட்டிருந்தது. 20அந்த அறிவிப்பு யூத மொழியிலும் இலத்தீன், கிரேக்க மொழிகளிலும் இருந்தது. ஏராளமான யூதர்கள் இந்த அறிவிப்பை வாசித்தனர். ஏனென்றால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.
21யூதர்களின் தலைமை ஆசாரியன் பிலாத்துவிடம், “யூதருடைய ராஜா என்று எழுதக்கூடாது. அவன் தன்னை யூதருடைய ராஜா என்று சொன்னதாக எழுதவேண்டும்” என்றான்.
22அதற்குப் பிலாத்து, “நான் எழுதினதை மாற்றி எழுதமாட்டேன்” என்று கூறிவிட்டான்.
23ஆணிகளால் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பிற்பாடு, சேவகர்கள் அவரது ஆடையை எடுத்துக்கொண்டனர். அவர்கள் அதனை நான்கு பாகங்களாகப் பங்கு வைத்தனர். ஒவ்வொரு சேவகனும் ஒரு பாகத்தைப் பெற்றான். அவர்கள் அவரது அங்கியையும் எடுத்தனர். அது தையலில்லாமல் ஒரே துணியாக நெய்யப்பட்டிருந்தது. 24எனவே சேவகர்கள் தங்களுக்குள், “இதனை நாம் கிழித்து பங்கு போட வேண்டாம். அதைவிட இது யாருக்கு என்று சீட்டுப் போட்டு எடுத்துக்கொள்வோம்” என சொல்லிக் கொண்டனர்.
“அவர்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டனர்.
என் அங்கியின் மேல் சீட்டுப்போட்டார்கள்”#சங்கீ. 22:18
என்று வேதவாக்கியம் கூறியது நிறைவேறும்படிக்கு இவ்வாறு நிகழ்ந்தது.
25இயேசுவின் தாயார் சிலுவையின் அருகில் நின்றிருந்தார். அவரது தாயின் சகோதரியும், கிலேயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26இயேசு அவருடைய தாயைப் பார்த்தார். அவரால் பெரிதும் நேசிக்கப்பட்ட சீஷனையும் அங்கே பார்த்தார். அவர் தன் தாயிடம், “அன்பான பெண்ணே, அதோ உன் குமாரன்” என்றார். 27பிறகு இயேசு தன் சீஷனிடம், “இதோ உன்னுடைய தாய்” என்றார். அதற்குப்பின் அந்த சீஷன் இயேசுவின் தாயைத் தன் வீட்டிற்குத் தன்னோடு அழைத்துச் சென்றான்.
இயேசுவின் மரணம்
(மத்தேயு 27:45-56; மாற்கு 15:33-41; லூக்கா 23:44-49)
28பின்பு எல்லாம் முடிந்தது என்பதை இயேசு அறிந்தார். வேதவாக்கியம் நிறைவேறும்பொருட்டு அவர், “நான் தாகமாயிருக்கிறேன்”#19:28 நான் தாகமாயிருக்கிறேன் பார்க்க: சங்கீ. 22:15; 69:21. என்றார். 29காடி நிறைந்த பாத்திரம் ஒன்று அங்கே வைக்கப்பட்டிருந்தது. அங்கே நின்ற சேவகர்கள் கடற்பஞ்சைக் காடியிலே தோய்த்தார்கள். அதனை ஈசோப்புத் தண்டில் மாட்டினார்கள். பிறகு அதனை இயேசுவின் வாயருகே நீட்டினார்கள். 30இயேசு காடியைச் சுவைத்தார். பிறகு அவர், “எல்லாம் முடிந்தது” என்றார். இயேசு தன் தலையைச் சாய்த்து இறந்துபோனார்.
31அது ஆயத்தநாளாக இருந்தது. மறுநாள் சிறப்பான ஓய்வு நாள். ஓய்வு நாளில் சரீரங்கள் உயிரோடு சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பவில்லை. எனவே, அவர்களைச் சாகடிக்க கால்களை முறித்துக் கொல்ல வேண்டும் என இதற்கான உத்தரவை யூதர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள். அதோடு அவர்களின் பிணங்களைச் சிலுவையில் இருந்து அப்புறப்படுத்தவும் அனுமதி பெற்றனர். 32எனவே, சேவகர்கள் இயேசுவின் ஒருபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களை முறித்தனர். பிறகு அவர்கள் இயேசுவின் மறுபுறத்தில் சிலுவையில் அறையப்பட்டவனிடம் வந்து அவன் கால்களையும் முறித்தனர். 33அவர்கள் இயேசுவிடம் வந்தபோது அவர் ஏற்கெனவே இறந்திருந்தார். எனவே அவரது கால்களை அவர்கள் முறிக்கவில்லை.
34ஆனால் ஒரு சேவகன் தனது ஈட்டியால் இயேசுவின் விலாவில் குத்தினான். அதிலிருந்து இரத்தமும் நீரும் வெளியே வந்தது. 35(இவ்வாறு நிகழ்வதைப் பார்த்தவன் அதைப்பற்றிக் கூறுகிறான். அவனே அதைக் கூறுவதால் அதனை நீங்களும் நம்ப முடியும். அவன் சொல்கின்றவை எல்லாம் உண்மை. அவன் சொல்வது உண்மையென்று அவன் அறிந்திருக்கிறான்.) 36“அவரது எலும்புகள் எதுவும் முறிக்கப்படுவதில்லை”#சங்கீ. 34:20 என்று வேதவாக்கியங்களில் சொல்லப்பட்டவை நிறைவேறும்படி இவ்வாறு நிகழ்ந்தது.
37அத்துடன் “மக்கள் தாங்கள் ஈட்டியால் குத்தினவரைப் பார்ப்பார்கள்”#சகரி. 12:10 என்றும் வேதவாக்கியத்தில் இன்னொரு இடத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இயேசுவின் அடக்கம்
(மத்தேயு 27:57-61; மாற்கு 15:42-47; லூக்கா 23:50-56)
38பிறகு அரிமத்தியா ஊரானான யோசேப்பு எனப்படும் மனிதன் பிலாத்துவிடம் வந்து இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். (இவன் இயேசுவைப் பின்பற்றினவர்களில் ஒருவன். ஆனால் அவன் யூதர்களுக்குப் பயந்து இதைப்பற்றி இதுவரை மக்களிடம் சொல்லவில்லை). யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துச்செல்ல, பிலாத்து அனுமதி தந்தான். ஆகையால் யோசேப்பு வந்து இயேசுவின் சரீரத்தை எடுத்துப் போனான்.
39நிக்கோதேமு யோசேப்போடு சென்றான். இவன் ஏற்கெனவே ஒரு நாள் இரவு இயேசுவிடம் வந்து அவரோடு பேசியிருக்கிறான். அவன் 100 இராத்தல்#19:39 100 இராத்தல் 100 ரோமானிய இராத்தல் இன்றைய 75 இராத்தலுக்குச் சமமானது. வாசனைமிக்க கரியபோளமும் வெள்ளைப் போளமும் கலந்து கொண்டுவந்தான். 40அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை.) 41இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டம் இருந்தது. அங்கு ஒரு கல்லறை இருந்தது. அதில் இதுவரை எந்த சரீரமும் வைக்கப்படவில்லை. 42அந்தக் கல்லறையில் இயேசுவை வைத்தார்கள். அன்று யூதருடைய ஆயத்த நாளாக இருந்தது. அத்துடன் அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.
Currently Selected:
யோவான் எழுதிய சுவிசேஷம் 19: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International