எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 48
48
மோவாப் பற்றிய செய்தி
1இது மோவாபைப் பற்றிய செய்தி. இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறது:
“நேபோ மலைக்கு கேடு வரும்.
நேபோ மலை அழிக்கப்படும்.
கீரியாத் தாயீம் தாழ்மைப்படும்.
இது கைப்பற்றப்படும்.
பலமான இடம் தாழ்மைப்படும்.
இது நொறுக்கப்படும்.
2மோவாப் மீண்டும் பாராட்டப்படாது.
மோவாபின் தோல்விக்கு எஸ்போனின் ஆட்கள் திட்டமிடுவார்கள்.
அவர்கள், ‘வா, அந்த நாட்டிற்கு ஒரு முடிவு செய்வோம்’ என்று சொல்வார்கள்.
மத்மேனே, நீ மௌனமாக்கப்படுவாய்.
பட்டயம் உன்னைத் துரத்தும்.
3ஒரோனாயிமிலிருந்து வரும் கதறல்களைக் கேள்.
அவை குழப்பமும் பேரழிவுமுள்ள கதறல்களாக இருக்கும்.
4மோவாப் அழிக்கப்படும்.
அவளது சிறு குழந்தை உதவிக்காக அழும்.
5மோவாபின் ஜனங்கள் லூகித்துக்குச் செல்லும் பாதையில் செல்வார்கள்.
அவர்கள் போகும் போது மிக மோசமாக அழுதுக்கொண்டிருப்பார்கள்.
ஒரோனாயிமுக்குச் செல்லும் இறக்கமான பாதையில்
வேதனை மற்றும் துன்பத்தின் அழுகையொலி கேட்கலாம்.
6ஓடுங்கள்! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்!
வனாந்தரத்தில் காற்றில் அடித்துச்செல்லும் முட்செடியைப் போல ஓடுங்கள்!
7“நீங்கள் உங்களால் செய்யப்பட்ட பொருளின் மீதும், உங்கள் செல்வத்தின்மீதும் நம்பிக்கை வைத்தீர்கள்.
எனவே, நீங்கள் கைப்பற்றப்படுவீர்கள்.
கேமோஷ் தெய்வம் சிறையெடுக்கப்படும்.
அதனோடு அதன் ஆசாரியர்களும் அதிகாரிகளும் கொண்டு செல்லப்படுவார்கள்.
8ஒவ்வொரு பட்டணத்துக்கு எதிராகவும் அழிக்கிறவன் வருவான்.
ஒரு பட்டணம் கூட தப்பிக்காது.
பள்ளத்தாக்கு அழிக்கப்படும்.
மேட்டு நிலமும் அழிக்கப்படும்.
இது நிகழும் என்று கர்த்தர் சொன்னார்.
எனவே, இது நடக்கும்.
9மோவாபின் வயல்களின் மேல் உப்பைத் தூவுங்கள்.
அந்நாடு காலியான வனாந்தரமாகும்.
மோவாபின் பட்டணங்கள் காலியாகும்.
அவற்றில் ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.
10கர்த்தர் சொல்வதின்படி ஒருவன் செய்யாவிட்டால்,
அவரது பட்டயத்தைப் பயன்படுத்தி அந்த ஜனங்களைக் கொல்லாவிட்டால் பிறகு அந்த மனிதனுக்கு தீயக் காரியங்கள் நிகழும்.
11“மோவாப் என்றைக்கும் துன்பங்களை அறிந்ததில்லை.
மோவாப் அடியில் தங்கும் படிவிட்ட திராட்சைரசத்தைப் போன்றது.
அது ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படாமல் இருந்தது.
அது சிறைபிடிக்கப்படாமல் இருந்தது.
அது முன்புப் போலவே சுவைக்கப்பட்டது.
அதன் வாசனை மாறாமல் இருக்கிறது.”
12கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்,
“ஆனால் நான் விரைவில் உங்களை
உங்கள் பாத்திரத்திலிருந்து ஊற்றி ஆட்களை அனுப்புவேன்.
பிறகு அவர்கள் அப்பாத்திரங்களைக் காலிச் செய்து
உடைத்துப் போடுவார்கள்.”
13பிறகு மோவாப் ஜனங்கள் தம் கேமோஷ் எனும் அந்நிய தெய்வத்துக்காக அவமானம் அடைவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அந்த அந்நிய தெய்வத்தை பெத்தேலில் நம்பினார்கள். அந்த அந்நிய தெய்வம் உதவி செய்யவில்லை என்று இஸ்ரவேல் ஜனங்கள் வெட்கப்பட்டனர். மோவாபும் அது போலாகும்.
14“உங்களால், ‘நாங்கள் நல்ல வீரர்கள்.
போரில் நாங்கள் தைரியமான ஆட்கள்’ என்று சொல்ல முடியாது.
15பகைவர்கள் மோவாபைத் தாக்குவார்கள்.
பகைவர்கள் அப்பட்டணங்களுக்குள் நுழைந்து அவற்றை அழிப்பார்கள்.
அவளது சிறந்த இளைஞர்கள் வெட்டப்படுவார்கள்”
இந்த வார்த்தை அரசரிடமிருந்து வந்தது.
அந்த ராஜாவின் நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
16“மோவாபின் முடிவு அருகில் உள்ளது.
மோவாப் விரைவில் அழிக்கப்படும்.
17மோவாபைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்கின்ற ஜனங்களாகிய நீங்கள் அந்நாட்டிற்காக அழுவீர்கள்.
மோவாப் எவ்வளவு புகழுடையதாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.
எனவே அதற்காக அழுங்கள்.
‘ஆள்வோனின் வல்லமை உடைக்கப்பட்டது.
மோவாபின் வல்லமையும் மகிமையும் போய்விட்டன’ என்று சோகப் பாட்டைப் பாடுங்கள்.
18“தீபோனில் வாழ்கின்ற ஜனங்களே,
உங்களது மகிமையுள்ள இடத்தைவிட்டு கீழே இறங்கி வாருங்கள்.
புழுதித் தரையில் உட்காருங்கள்.
ஏனென்றால், மோவாபை அழித்தவன் வந்துக் கொண்டிருக்கிறான்.
அவன் உங்களது பலமான நகரங்களை அழிப்பான்.”
19கர்த்தர், “ஆரோவேரில் வாழ்கின்ற ஜனங்களே
சாலையிலே நின்று கவனித்துக்கொண்டிருங்கள்.
மனிதன் வெளியே ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்.
பெண்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்.
என்ன நடந்தது என்று அவர்களைக் கேளுங்கள்.
20“மோவாப் அழிக்கப்படும். வெட்கத்தால் நிறையும்.
மோவாப் மேலும், மேலும் அழும்.
மோவாப் அழிக்கப்படுகிறது என்று ஆர்னோன்
நதிக்கரையில் அறிவியுங்கள்.
21மேட்டுச் சமவெளியில் வாழ்கின்ற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.
ஓலோன், யாத்சா, மேப்காத் ஆகிய பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.
22தீபோன், நேபோ, பெத்லாத்தாயீம் ஆகிய
பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.
23கீரியாத்தாயீம், பேத்கமூல், பெத்மெயோன் ஆகிய
பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
24கீரியோத் மற்றும் போஸ்றா
பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
மோவாபின் பக்கத்திலும் தூரத்திலுமுள்ள அனைத்து
பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
25மோவாபின் பலம் வெட்டப்பட்டிருக்கிறது.
மோவாபின் கை உடைந்திருக்கிறது” என்று சொன்னார்.
26“மோவாப் தன்னை கர்த்தரை விட முக்கியமானவனாக நினைத்தான்.
எனவே அவன் குடிக்காரனைப்போன்று தடுமாறுகிறவரை தண்டியுங்கள்.
மோவாப் விழுந்து தனது வாந்தியிலேயே உருளட்டும்.
ஜனங்கள் மோவாபைக் கேலிசெய்யட்டும்.
27“மோவாபே, ஒரு திருடர் கூட்டத்தால் இஸ்ரவேல்
சிறைபிடிக்கப்பட்டபோது நீ அதனால் சந்தோஷப்பட்டு இஸ்ரவேலைக் கேலிசெய்தாய்.
நீ இஸ்ரவேலைப்பற்றி ஒவ்வொரு முறையும் பேசும்போது,
உன் தலையை உதறி இஸ்ரவேலைவிட நீ சிறந்தவன் என்பதுபோல நடித்தாய்.
28மோவாபின் ஜனங்களே, உங்கள் பட்டணங்களை விட்டு விலகுங்கள்.
பாறைகளுக்கு இடையில் வாழப் போங்கள்.
குகைப் பிளவுகளில் புறாக்கள் கூடு கட்டியிருப்பதுப் போல
அமைத்துக்கொள்ளுங்கள்.”
29“நாங்கள் மோவாபின் பெருமையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
அவன் மிகப் பெருமிதம் உடையவனாக இருந்தான்.
அவன் தன்னை முக்கியமானவன் என்று நினைத்தான்.
அவன் எப்பொழுதும் பெருமை பேசினான்.
அவன் மிகமிகப் பெருமை உடையவன்.”
30கர்த்தர் கூறுகிறார்: “எந்தக் காரணமுமில்லாமல் மோவாப் கோபங்கொண்டு வீம்பு பேசுகிறது என்று நான் அறிவேன்.
ஆனால் அவன் வீண் பெருமைகள் பொய்யானவை.
அவன் சொல்வதை அவனால் செய்ய முடியாது.
31எனவே, நான் மோவாபிற்காக அழுகிறேன்.
நான் மோவாபிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் அழுகிறேன்.
நான் கீராரேஸ்ஸிலிருந்து வந்தவர்களுக்காகவும் அழுகிறேன்.
32நான் யாசேருக்காக யாசேர் ஜனங்களோடு சேர்ந்து அழுகிறேன்.
சிப்மாவூர் கடந்தகாலத்தில் உனது திராட்சைக் கொடிகள் கடலைக் கடந்து பரவின.
அது வெகு தொலைவிலுள்ள நகரமான யாசேரை அடைந்தது.
ஆனால் அழிக்கிறவன் உனது பழங்களையும் திராட்சைகளையும் எடுத்திருக்கிறான்.
33மகிழ்ச்சியும், சந்தோஷமும் மோவாபின் பெரிய திராட்சைத் தோட்டங்களிலிருந்து முடிவடைந்தன.
திராட்சை ஆலைகளில் இருந்து திராட்சைரசம் பாய்வதை நான் நிறுத்தினேன்.
அங்கே திராட்சை ரசத்துக்காகத் திராட்சை ஆலையை மிதிக்கிறவர்களின் பாடலும் ஆடலும் இல்லை.
மகிழ்ச்சியின் சத்தங்கள் இல்லை.”
34கர்த்தர், “எஸ்போன், எலெயாலே நகரங்களில் உள்ள ஜனங்கள் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அழுகை வெகு தொலைவில் உள்ள யாகாஸ் வரைக்கும் கேட்கிறது. அவர்களின் அழுகை சோவாரிலிருந்து கேட்கிறது. அது வெகு தொலைவில் உள்ள ஒரோனாயிம் மற்றும் எக்லாத்செலிஷியாத் வரைக்கும் கேட்கிறது. நிம்ரீமின் தண்ணீரும் வற்றிப்போகும். 35மோவாப் தேசத்து மேடைகளில் தகனபலிகள் இடுவதை நான் தடுப்பேன். அவர்கள் தம் தெய்வங்களுக்குப் பலிகள் கொடுப்பதை நான் நிறுத்துவேன்” என்று கூறினார்.
36“நான் மோவாபிற்காக மிகவும் வருந்துகிறேன். மரணப் பாடலில் புல்லாங்குழலில் சோக ஒலியைப்போன்று எனது இதயம் அழுகின்றது. கீராரேஷ் ஜனங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். அவர்களது பணமும் செல்வமும் எல்லாம் எடுக்கப்பட்டன. 37ஒவ்வொருவரும் தலையை மழித்திருந்தார்கள். ஒவ்வொருவரின் தாடியும் வெட்டப்பட்டிருந்தது. ஒவ்வொருவரின் கைகளும் வெட்டப்பட்டு இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இடுப்பைச் சுற்றி சோகத்தின் ஆடையை அணிந்துக்கொண்டிருக்கின்றனர். 38ஜனங்கள், மோவாபின் ஒவ்வொரு இடங்களிலும் அனைத்து வீடுகளின் மேலும் தெருச்சதுரங்களிலும் மரித்துப்போனவர்களுக்காக அழுதுக்கொண்டிருந்தனர். அங்கே துயரம் இருந்தது. ஏனென்றால், ஒரு காலியான ஜாடியை உடைப்பதுப்போன்று நான் மோவாபை உடைத்துள்ளேன்” என்று கர்த்தர் சொன்னார்.
39“மோவாப் சிதறடிக்கப்படுகிறது. ஜனங்கள் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். மோவாப் சரணடைந்தது. இப்பொழுது மோவாப் அவமானப்படுகிறது. ஜனங்கள் மோவாபைக் கேலிசெய்கிறார்கள். ஆனால் நடந்தவைகள் அவர்களிடம் பயத்தை நிரப்பியுள்ளன.”
40கர்த்தர் கூறுகிறார், “பார் ஒரு கழுகு வானத்திலிருந்து கீழே பறந்து வந்துக்கொண்டிருக்கிறது.
அது மோவாபின் மேல் தன் இறக்கைகளை விரித்துக்கொண்டிருக்கிறது.
41மோவாபின் பட்டணங்கள் கைப்பற்றப்படும்.
பலமான மறைவிடங்கள் தோற்கடிக்கப்படும்.
அப்போது மோவாபின் வீரர்கள் ஒரு ஸ்திரீ பிள்ளையை பெறுகிற சமயத்தில் பயப்படுவதுபோல பயப்படுவார்கள்.
42மோவாப் தேசம் அழிக்கப்படும்.
ஏனென்றால், அவர்கள் தம்மை கர்த்தரைவிட முக்கியமானவர்களாக நினைத்தனர்.”
43கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்.
“மோவாபின் ஜனங்களே, பயமும், ஆழமான குழிகளும், கண்ணிகளும் உனக்காகக் காத்திருக்கின்றன.
44ஜனங்கள் பயந்து வெளியே ஓடுவார்கள்.
அவர்கள் ஆழமான குழிகளில் விழுவார்கள்.
எவராவது ஆழமான குழிகளில் இருந்து
வெளியே ஏறி வந்தால் அவன் கண்ணிகளில் சிக்குவான்.
நான் மோவாபிற்குத் தண்டனை ஆண்டைக் கொண்டு வருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
45“ஜனங்கள் வல்லமை மிக்க பகைவரிடமிருந்து ஓடினார்கள்.
அவர்கள் பாதுகாப்புக்காக எஸ்போனுக்கு ஓடினார்கள்.
(ஆனால் அங்கே பாதுகாப்பு இல்லை.)
எஸ்போனில் நெருப்பு பற்றியது.
சீகோனில் பட்டணத்திலும் நெருப்பு பிடித்தது.
மோவாபின் தலைவர்களையும் அது அழிக்கிறது.
இது அந்த வீண்பெருமையுள்ள ஜனங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது.
46மோவாபே, இது உனக்குக் கேடாகும்.
கேமோஷின் ஜனங்கள் அழிக்கப்படுகின்றனர்.
உனது குமாரன்களும் குமாரத்திகளும் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்கு கொண்டுப்போகப்படுகின்றனர்.
47மோவாபின் ஜனங்கள் கைதிகளாகச் சிறைப் பிடிக்கப்பட்டு அவர்களை அடிமைகளாக அழைத்துச் செல்வார்கள். ஆனால் நாட்கள் வரும்போது நான் மோவாபின் ஜனங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மோவாபின் தீர்ப்பு இத்துடன் முடிந்தது.
Currently Selected:
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 48: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International