YouVersion Logo
Search Icon

எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 43

43
1எனவே எரேமியா ஜனங்களுக்கு அவர்களது தேவனாகிய கர்த்தர் சொன்ன வார்த்தையைச் சொல்லி முடித்தான். கர்த்தர் ஜனங்களுக்குச் சொல்லும்படி எரேமியாவை அனுப்பியவாறு எல்லாவற்றையும் சொன்னான்.
2ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும் கரேயாவின் குமாரனான யோகனானும் மற்றும் சிலரும் இறுமாப்போடும் பிடிவாதமானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எரேமியாவிடம் கோபம் கொண்டனர். அவர்கள் எரேமியாவிடம், “எரேமியா, நீ பொய் சொல்லுகிறாய். எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை, ‘நீங்கள் எகிப்துக்கு வாழ போகவேண்டாம்’ என்று எங்களிடம் சொல்ல அனுப்பவில்லை. 3எரேமியா, நேரியாவின் குமாரனான பாருக் எங்களுக்கு எதிராக உன்னை ஏவியிருக்கிறான் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களை பாபிலோனிய ஜனங்களிடம் கொடுக்குமாறு அவன் விரும்புகிறான். நீ இதனைச் செய்யுமாறு அவன் விரும்புகிறான். அதனால் அவர்கள் எங்களைக் கொல்ல முடியும். அல்லது நீ இதனைச் செய்யுமாறு விரும்புகிறான். அதனால் அவர்கள் எங்களைக் கைதிகளாக்கி பாபிலோனுக்குக் கொண்டுபோகமுடியும்” என்று சொன்னார்கள்.
4எனவே யோகனான், படை அதிகாரிகள் மற்றும் அனைத்து ஜனங்களும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிபணியவில்லை. கர்த்தர் அவர்களுக்கு யூதாவில் தங்கும்படி கட்டளையிட்டிருந்தார். 5ஆனால் கர்த்தருக்கு அடிபணிவதற்குப் பதிலாக, யோகனான் மற்றும் படை அதிகாரிகளும் தப்பியவர்களை யூதாவில் இருந்து எகிப்துக்குக் கொண்டு சென்றனர். கடந்த காலத்தில் பகைவர் பிற நாடுகளுக்கு அவர்களை எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் யூதாவிற்குத் திரும்பினார்கள். 6இப்பொழுது யோகனான் மற்றும் அனைத்து படையதிகாரிகளும் எல்லா ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை எகிப்துக்கு வழி நடத்திக் கொண்டு சென்றனர். அந்த ஜனங்களுடன் ராஜாவின் குமாரத்திகளும் இருந்தனர். (நேபுசராதான் அவர்களை கவனித்துக்கொள்ளும்படி கெதலியாவை நியமித்தான். நேபுசராதான் பாபிலோனிய ராஜாவின் சிறப்புக் காவல் படையின் தளபதியாக இருந்தான்.) யோகனான் தீர்க்கதரிசி எரேமியாவையும் நேரியாவின் குமாரனான பாருக்கையும் அழைத்துப் போனான். 7அந்த ஜனங்கள் கர்த்தர் சொன்னவற்றைக் கேட்கவில்லை. எனவே அனைத்து ஜனங்களும் எகிப்துக்குச் சென்றனர். அவர்கள் தக்பானேஸ் எனும் நகரத்திற்குச் சென்றனர்.
8தக்பானேஸ் நகரத்தில், கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான். 9“எரேமியா, சில பெரிய கற்களை எடுத்து தக்பானேஸ் நகரத்தில், அவற்றைப் பார்வோனுடைய அரண்மனைக்கு முன்னால் ஒலிமுக வாசலில் செங்கல் நடைபாதையில் களிமண்ணுக்குள் புதைத்துவை. யூதாவின் ஆட்கள் எல்லோரும் பார்க்கும்போதே நீ இவற்றைச் செய். 10பிறகு, உன்னை கவனித்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஆட்களிடம் கூறு: ‘இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது. நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை இங்கே வர அனுப்புவேன். அவன் எனது வேலைக்காரன். நான் புதைத்து வைத்த இக்கல்லின் மேல் அவனது சிங்காசனத்தை வைக்கச் செய்வேன். அவன் தனது இராஜ கூடாரத்தை அதன் மேல் விரிப்பான். 11நேபுகாத் நேச்சார் இங்கே வந்து எகிப்தைத் தாக்குவான். மரிக்க வேண்டியவர்களுக்கு அவன் மரணத்தைக் கொண்டுவருவான். அவன் அடிமைத்தனத்திற்கு ஏதுவானவர்களை சிறையிருக்கச் செய்வான். வாளால் கொல்லப்படத்தக்கவர்களைக் கொல்ல வாளை அவன் கொண்டு வருவான். 12நேபுகாத்நேச்சார் எகிப்திலுள்ள பொய்த் தெய்வங்களின் கோயிலில் நெருப்பை மூட்டுவான். அவன் அக்கோயில்களை எரிப்பான். அவன் அந்த விக்கிரகங்களை வெளியே எடுத்துப் போடுவான். ஒரு மேய்ப்பன் தனது ஆடையைச் சுத்தப்படுத்துவதற்கு அதில் உள்ள மூட்டைப்பூச்சிகளையும் ஓட்டுப்பூச்சிகளையும் எடுப்பான். அதே வழியில் நேபுகாத்நேச்சார் எகிப்தைச் சுத்தப்படுத்துவான். பிறகு அவன் பத்திரமாக எகிப்தை விடுவான். 13நேபுகாத்நேச்சார் எகிப்தின் சூரியத்தேவன் ஆலயத்திலுள்ள நினைவுக் கற்களை அழிப்பான். எகிப்தில் உள்ள பொய்த் தெய்வங்களின் ஆலயங்களை அவன் எரித்துப்போடுவான்.’” என்றான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy