எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 29
29
பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம்
1எரேமியா பாபிலோனிலுள்ள யூதா கைதிகளுக்கு ஒரு கடிதம் அனுப்பினான். பாபிலோனில் உள்ள மூப்பர்களுக்கும் (தலைவர்கள்) ஆசாரியர்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் மற்ற ஜனங்களுக்கும் அவன் அதனை அனுப்பினான். இந்த ஜனங்களெல்லாம் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறைபிடிக்கப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டவர்கள். 2(இந்தக் கடிதம், எகொனியா ராஜாவும், அரச மாதாவும், அதிகாரிகளும், யூதா, எருசலேம் மற்றும் யூதா தலைவர்களும், தச்சர்களும் கொல்லர்களும் எருசலேமிலிருந்து கொண்டு செல்லப்பட்டப் பிறகு அனுப்பப்பட்டது). 3சிதேக்கியா எலெயாசா மற்றும் கெமரியாவை நேபுகாத்நேச்சார் ராஜாவிடம் அனுப்பினான். சிதேக்கியா யூதாவின் ராஜா. எலெயாசா சாப்பானின் குமாரன். கெமரியா இலக்கியாவின் குமாரன். எரேமியா அவர்களிடம் பாபிலோனுக்கு கொண்டு செல்லுமாறு கடிதத்தைக் கொடுத்தான். கடிதம் சொன்னது இதுதான்:
4சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு சிறைக்கைதிகளாக அனுப்பப்பட்ட அனைவருக்கும் இதைக் கூறுகிறார்:
5“வீடுகளைக் கட்டி அவற்றில் வாழுங்கள். நாட்டில் குடியிருங்கள். தோட்டங்களை அமைத்து அதில் வளர்ந்த கனிகளை உண்ணுங்கள். 6திருமணம் செய்துக்கொண்டு குமாரர்கள் மற்றும் குமாரத்திகளைப் பெற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குமாரர்களுக்கு மனைவியர்களைக் கண்டுக்கொள்ளுங்கள். உங்கள் குமாரத்திகள் மணந்துக்கொள்ளும்படிச் செய்யுங்கள். அவ்வாறு செய்தால், அவர்களுக்கும் குமாரர்களும் குமாரத்திகளும் பிறப்பார்கள். பல குழந்தைகளைப் பெற்று பாபிலோனில் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். எண்ணிக்கையில் குறைவாக இருக்காதீர்கள். 7நான் உங்களை அனுப்பிய நகரத்திற்கு நல்லவற்றைச் செய்யுங்கள். நீங்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கிற நகரத்திற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்யுங்கள். ஏனென்றால், அந்நகரத்தில் சமாதானம் இருந்தால், நீங்களும் சமாதானமாக இருக்கலாம்.” 8சர்வ வல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுகிறார். “உங்களது தீர்க்கதரிசிகளும் மந்திரம் பழகும் ஜனங்களும் உங்களை முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர்கள் வைத்துள்ள கனவுகளைக் கேட்காதீர்கள். 9அவர்கள் பொய்களைப் பிரச்சாரம் செய்கிறார்கள். அச்செய்தி என்னிடமிருந்து வந்ததாக அவர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10இதுதான் கர்த்தர் சொல்லுகிறது: “பாபிலோன் 70 ஆண்டுகளுக்கு வல்லமையுடையதாக இருக்கும். அக்காலத்திற்குப் பிறகு, பாபிலோனில் வாழ்கிற உங்களிடம் வருவேன். என்னுடைய நல்ல வாக்குறுதியை நான் காப்பாற்றுவேன். உங்களை எருசலேமிற்கு மீண்டும் கொண்டுவருவேன். 11நான் இதனைக் கூறுகிறேன் ஏனென்றால், உங்களுக்காக நான் வைத்துள்ள திட்டங்களை நானறிவேன்” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் உங்களுக்காக நல்ல திட்டங்களை வைத்திருக்கிறேன். நான் உங்களை துன்புறுத்தும் வகையில் திட்டமிடமாட்டேன். உங்களுக்கு நம்பிக்கையைத் தரவும் நல்ல எதிர்காலம் அமையவும் நான் திட்டமிடுகிறேன். 12பிறகு, ஜனங்களாகிய நீங்கள் எனது நாமத்தை அழைப்பீர்கள். நீங்கள் என்னிடம் வருவீர்கள்: ஜெபம் செய்வீர்கள், நான் உங்களை கவனிப்பேன். 13நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் முழு மனதோடு என்னைத் தேடினால் என்னைக் கண்டுப்பிடிக்கலாம். 14நீங்கள் என்னைக் கண்டுப்பிடிக்க அனுமதிப்பேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். “உங்கள் சிறையிலிருந்து திரும்பவும் நான் உங்களைக் கொண்டுவருவேன். இந்த இடத்திலிருந்து போகும்படி நான் உங்களை கட்டாயப்படுத்தினேன். ஆனால் உங்களை எங்கெங்கு அனுப்பினேனோ அங்கங்கிருந்தெல்லாம் அழைத்துச் சேர்ப்பேன். உங்களைக் கைதிகளாய் கொண்டுப்போகச் செய்த இந்த இடத்திற்கே மீண்டும் உங்களைக் கொண்டுவருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
15நீங்கள், “ஆனால் கர்த்தர் இங்கே பாபிலோனில் தீர்க்கதரிசிகளைக் கொடுத்திருக்கிறார்” என்று சொல்லலாம். 16ஆனால் கர்த்தர் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படாத உறவினர்களைப்பற்றி இவற்றைக் கூறுகிறார். நான், இப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் இருக்கிற ராஜாவைப் பற்றியும் எருசலேம் நகரிலுள்ள ஜனங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறேன். 17சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் விரைவில் பட்டயம், பசி மற்றும் பயங்கரமான நோயை எருசலேமில் இன்னும் வாழும் ஜனங்களுக்கு எதிராக அனுப்புவேன். நான் அவர்களை உண்ணவே முடியாத அளவிற்கு அழுகிப்போன கெட்ட அத்திப் பழங்களைப் போன்று ஆக்குவேன். 18நான், இன்னும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை பட்டயம், பசி, மற்றும் பயங்கரமான நோயால் துரத்துவேன். நான் இதனைச் செய்வேன். அதனால் அந்த ஜனங்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதைப் பார்த்து பூமியில் உள்ள அனைத்து இராஜ்யங்களும் பயப்படும். அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். நிகழ்ந்தவற்றைப்பற்றி அவர்கள் கேள்விப்படும்போது ஜனங்கள் ஆச்சரியத்துடன் பிரமிப்பார்கள். அவர்கள், ஜனங்களுக்குத் தீயவை நடைபெறட்டும் என்று கேட்கும்போது ஜனங்கள் அவர்களை ஒரு எடுத்துக்காட்டாக பயன்படுத்துவர். அந்த ஜனங்களை நான் போகும்படி வற்புறுத்தும் போதெல்லாம் ஜனங்கள் அவர்களை நிந்திப்பார்கள். 19அவையெல்லாம் நடக்கும்படி நான் செய்வேன். ஏனென்றால், எருசலேமிலுள்ள அந்த ஜனங்கள் எனது வார்த்தையைக் கேட்கவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் அவர்களுக்கு எனது செய்தியை மீண்டும், மீண்டும் அனுப்பினேன். நான் அந்த ஜனங்களுக்கு எனது வேலைக்காரர்களாகிய தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி எனது செய்தியைக் கொடுத்தேன். ஆனால் ஜனங்கள் கேட்கவில்லை” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. 20“ஜனங்களாகிய நீங்கள் கைதிகள். நான் உங்களை எருசலேமிலிருந்து பாபிலோனுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். எனவே கர்த்தரிடமுள்ள செய்தியைக் கேளுங்கள்.”
21சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கொலாயாவின் குமாரனான ஆகாப் மற்றும் மாசெயாவின் குமாரனான சிதேக்கியாவைப் பற்றியும் கூறுகிறார்: “உங்களிடம் இவ்விருவரும் பொய்யைப் பிரச்சாரம் செய்தனர். அவர்களின் செய்தி என்னிடம் இருந்து வந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பொய்யுரைத்தனர். நான் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நேபுகாத்நேச்சார் அவ்விரண்டு தீர்க்கதரிசிகளையும் கைதிகளாய் உங்கள் முன்னால் கொல்லுவான். 22அனைத்து யூதா கைதிகளிலும் மற்றவர்களுக்குத் தீயவை ஏற்படட்டும் என்று கேட்கும்போதெல்லாம் அம்மனிதர்களை எடுத்துக்காட்டுகளாக வைத்துக்கொள்வார்கள். அக்கைதிகள் சொல்லுவார்கள்: ‘சிதேக்கியா மற்றும் ஆகாப் போன்று கர்த்தர் உன்னை நடத்தட்டும். பாபிலோனின் ராஜா அவ்விருவரையும் நெருப்பில் எரித்தான்.’ 23இஸ்ரவேல் ஜனங்களிடையே அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் மிகவும் கெட்டவற்றைச் செய்தனர். அவர்கள் தங்கள் அயலவர் மனைவிகளோடு சோரம் என்னும் பாவத்தைச் செய்தனர். அவர்களும் பொய்களைப் பேசினார்கள். அத்துடன் அப்பொய்கள் கர்த்தராகிய என்னிடமிருந்து வந்தது என்றும் கூறினர். அவற்றைச் செய்யும்படி நானே அவர்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நானே ஒரு சாட்சி” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
செமாயாவுக்கு தேவனுடைய செய்தி
24செமாயாவுக்கும் ஒரு செய்தியைக் கொடு. செமாயா நெகெலாமிய குடும்பத்தில் உள்ளவன். 25சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: “செமாயா, எருசலேமிலுள்ள அனைத்து ஜனங்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். மாசெயாவின் குமாரனான செப்பனியா ஆசாரியர்களுக்கும் கடிதங்களை அனுப்பினாய். நீயும் அனைத்து ஆசாரியர்களுக்கும் கூட கடிதங்களை அனுப்பினாய். அக்கடிதங்களை நீ கர்த்தருடைய அதிகாரத்தால் அல்லாமல் உனது சொந்தப் பெயரில் அனுப்பினாய். 26செமாயா, செப்பனியாவிற்கான கடிதத்தில் நீ சொன்னது இதுதான்: ‘செப்பனியா, கர்த்தர் உன்னை யோய்தாவின் இடத்தில் ஆசாரியனாக ஆக்கியிருக்கிறார். கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளனாக நீ இருக்கிறாய். பைத்தியம் போலவும் தீர்க்கதரிசி போலவும் நடிக்கின்ற எவரையும் நீ கைது செய்யலாம். நீ அவர்களின் கால்களுக்கு இடையில் மரக் கட்டைகளையும் கழுத்தில் இரும்புச் சங்கிலிகளையும் மாட்டலாம். 27இப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி போன்று நடிக்கிறான். எனவே, அவனை ஏன் கைது செய்யாமல் இருக்கிறாய்? 28எரேமியா பாபிலோனிலுள்ள எங்களுக்கு அவனது செய்தியை அனுப்பியிருக்கிறான்: பாபிலோனில் உள்ள ஜனங்களாகிய நீங்கள் அங்கேயே நீண்டகாலம் இருப்பீர்கள். எனவே, வீடுகளைக்கட்டி அங்கேயே குடியிருங்கள். தோட்டங்களை ஏற்படுத்தி நீங்கள் வளர்த்தவற்றை உண்ணுங்கள்.’”
29செப்பனியா ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியிடம் கடிதத்தை வாசித்தான். 30பிறகு கர்த்தரிடமிருந்து வார்த்தை எரேமியாவிற்கு வந்தது: 31“எரேமியா, இந்த வார்த்தையை பாபிலோனில் உள்ள அனைத்து சிறைக்கைதிகளுக்கும் அனுப்பு, ‘நெகெலாமியனாகிய செமாயாவைப்பற்றி கர்த்தர் கூறுவது இதுதான்: செமாயா உங்களிடம் பிரசங்கம் செய்திருக்கிறான். ஆனால் நான் அவனை அனுப்பவில்லை. செமாயா உங்களை ஒரு பொய்யை நம்பும்படி செய்திருந்தான். 32ஏனென்றால், செமாயா அதனைச் செய்திருந்தான். இதுதான் கர்த்தர் சொல்கிறது: நான் விரைவில் நெகெலாமியனாகிய செமாயாவைத் தண்டிப்பேன். நான் அவனது குடும்பம் முழுவதையும் அழிப்பேன். நான் எனது ஜனங்களுக்குச் செய்யப் போகிற நன்மைகளில் அவன் பங்குக்கொள்ளமாட்டான்’” என்று கர்த்தர் சொல்லுகிறார். “நான் செமாயாவைத் தண்டிப்பேன். ஏனென்றால் அவன் கர்த்தருக்கு எதிராகத் திரும்பும்படி ஜனங்களுக்குக் கற்றுத்தந்தான்.”
Currently Selected:
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 29: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International