YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 9

9
அபிமெலேக்கு ராஜா ஆகுதல்
1யெருபாகாலின் (கிதியோன்) வேலைக்காரியின் குமாரனான அபிமெலேக்கு சீகேமில் வாழ்ந்த தனது மாமன்மார்களிடம், “எனது தாயின் குடும்பத்தாரிடம் சென்று, 2சீகோம் நகரின் தலைவர்களிடம் இக்கோள்வியைக் கேளுங்கள்: ‘யெருபாகாலின் 70 குமாரர்களாலும் நீங்கள் ஆளப்படுவது நல்லதா, அல்லது ஒரே ஒருவனால் ஆளப்படுதல் நல்லதா? நான் உங்கள் உறவினன்’ என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்” என்றான்.
3அபிமெலேக்கின் மாமன்மார் சீகேமின் தலைவர்களைக் சந்தித்து இக்கேள்வியைக் கேட்டார்கள். சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கைப் பின்பற்ற முடிவெடுத்தனர். தலைவர்கள், “எவ்வாறாயினும் அவன் நமக்குச் சகோதரன்” என்றார்கள். 4எனவே, சீகேமின் தலைவர்கள் அபிமெலேக்கிற்கு 70 வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள். அவ்வெள்ளி பாகால்பேரீத் கோவிலுக்குச் சொந்தமானது. அபிமெலேக்கு அவ்வெள்ளியால் சில மனிதர்களைக் கூலிக்குப் பேசி அமர்த்திக்கொண்டான். அவர்கள் பயனற்ற போக்கிரிகள் ஆவர். அபிமெலேக்கு எங்கு சென்றாலும் அவர்கள் அவனைப் பின்தொடர்ந்தார்கள்.
5பிமெலேக்கு ஒப்ராவிலுள்ள தன் தந்தையின் வீட்டிற்குச் சென்று தன் சகோதரர்களைக் கொன்றான். யெருபாகாலின் (கிதியோன்) 70 குமாரர்களையும் அபிமெலேக்கு கொன்றான். ஒரே சமயத்தில் அவர்களையெல்லாம் கொன்றான். ஆனால் யெருபாகாலின் கடைசி குமாரன் அபிமெலேக்கிடமிருந்து மறைந்திருந்து தப்பிவிட்டான். அவன் பெயர் யோதாம்.
6பின்பு சீகேமின் எல்லா தலைவர்களும் மில்லோவின் வீட்டாரும் கூடினார்கள். அவர்கள் சீகேமின் பெரிய மரத்தின் தூண் அருகில் கூடி, அபிமெலேக்கைத் தங்கள் ராஜா ஆக்கினார்கள்.
யோதாமின் கதை
7சீகேம் நகரத்தின் தலைவர்கள் அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள் என்பதை யோதாம் கேள்விப்பட்டான். அவன் அதைக் கேள்விப்பட்டபோது அவன் கெரிசீம் மலையின் மேல் போய் நின்றான். யோதாம் பின்வரும் உவமையை ஜனங்களுக்கு உரக்கக் கூறினான்:
“சீகேம் நகரத்தின் தலைவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். பின் தேவன் உங்களுக்குச் செவிசாய்க்கட்டும். 8ஒருநாள் மரங்கள் தம்மை ஆள்வதற்கு ஓர் ராஜாவைத் தேர்ந்தெடுக்க முடிவுசெய்தன. மரங்கள் ஒலிவமரத்திடம், ‘எங்களுக்கு நீ ராஜாவாக இருந்து ஆளுகை செய்’ என்றன.
9“ஆனால் ஒலிவமரம், ‘மனிதர்களும் தேவனும் எனது எண்ணெய்க்காக என்னைப் போற்றுகின்றனர். நான் எண்ணெய் தருவதை நிறுத்திவிட்டு பிற மரங்களை ஆளும்படி போக முடியுமா?’ என்றது.
10“பின் மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து, ‘நீ வந்து எங்களுக்கு ராஜாவாயிரு’ என்றன.
11“ஆனால் அத்திமரம், ‘நான் நல்ல, இனிய பழம் தருவதை நிறுத்திவிட்டுப் பிற மரங்களை ஆட்சி செய்ய வர முடியுமா?’ என்றது.
12“பின் மரங்கள் திராட்சைக் கொடியைப் பார்த்து, ‘எங்களுக்கு ராஜாவாக இரு’ என்றன.
13“அதற்குத் திராட்சைக்கொடி, ‘எனது ரசம் மனிதர்களையும் ராஜாக்களையும் மகிழ்விக்கின்றது. நான் ரசத்தை உண்டாக்குவதை நிறுத்திவிட்டு மரங்களை ஆளமுடியுமா?’ என்று பதில் சொன்னது.
14“இறுதியில் எல்லா மரங்களும் முட்புதரைப் பார்த்து, ‘எங்களுக்கு ராஜாவாயிரு’ என்றன.
15“அந்த முட்புதர் மரங்களைப் பார்த்து, ‘நான் உங்களுக்கு உண்மையாகவே ராஜாவாக வேண்டுமென்றால், என் நிழலின் கீழ் வாருங்கள். உங்களுக்கு அவ்வாறு செய்ய விருப்பமில்லையென்றால், முட்புதரிலிருந்து நெருப்பு எழட்டும். நெருப்பு லீபனோனிலுள்ள கேதுரு மரங்களையும் எரிக்கட்டும்’ என்றது.
16“இப்போதும் நீங்கள் முழுமையாக நேர்மையுடன் அபிமெலேக்கை ராஜாவாக்கியிருந்தால் அவனோடு சந்தோஷமாயிருங்கள். நீங்கள் யெருபாகாலோடும் அவனது குடும்பத்தோடும் நியாயமாக நடந்திருந்தால் நல்லது. யெருபாகாலைத் தக்கபடி சிறப்பித்திருந்தீர்களாயின் அது நல்லது. 17ஆனால் என் தந்தை உங்களுக்குச் செய்ததை நினைவுகூருங்கள். என் தந்தை உங்களுக்காகப் போர் செய்தார். தமது உயிரைப் பணயம் வைத்து மீதியானியரிடமிருந்து உங்களைக் காப்பாற்றினார். 18ஆனால் நீங்கள் என் தந்தையின் குடும்பத்திற்கு எதிராகத் திரும்பினீர்கள். நீங்கள் என் தந்தையின் 70 குமாரர்களையும் ஒரே நேரத்தில் கொன்றீர்கள். சீகேம் நகரத்திற்கு அபிமெலேக்கை ராஜாவாக்கினீர்கள். அவன் உங்களது உறவினன் என்பதால் அவனை ராஜாவாக்கினீர்கள். ஆனால் அவன் எங்கள் தந்தையின் அடிமைப் பெண்ணின் ஒரே குமாரன். 19ஆனால் நீங்கள் யெருபாகாலிற்கும், அவனது குடும்பத்திற்கும் முழு நேர்மையானவர்களாக இருந்திருந்தால், நீங்கள் அபிமெலேக்கை உங்கள் ராஜாவாக ஏற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இருங்கள். மேலும் அவனும் தனது குடிகளோடு மகிழ்ச்சியாக இருப்பான் என நம்புகிறேன். 20ஆனால் நீங்கள் நியாயமாக நடந்து கொள்ளாவிட்டால், சீகேமின் தலைவர்களையும், மில்லோவின் வீட்டாரையும் அபிமெலேக்கு அழிப்பதுடன், அபிமெலேக்கும் அழிந்து போவானென்று நான் நம்புகிறேன்!” என்றான்.
21யோதாம் இவற்றையெல்லாம் கூறிமுடித்ததும் ஓடிப்போய்விட்டான். பேயேர் என்னும் நகரத்திற்கு அவன் தப்பிச் சென்றான். தனது சகோதரனாகிய அபிமெலேக்குக்கு பயந்ததால் யோதாம் அந்நகரத்தில் தங்கியிருந்தான்.
அபிமெலேக்கு சீகேமை எதிர்த்துப் போரிடுதல்
22அபிமெலேக்கு இஸ்ரவேலரை மூன்று ஆண்டுகள் ஆண்டு வந்தான். 23-24யெருபாகாலின் 70 குமாரர்களையும் அபிமெலேக்கு கொன்றிருந்தான். அவர்கள் அபிமெலேக்கின் சொந்த சகோதரர்கள்! இத்தவறான காரியத்தைச் செய்வதற்கு சீகேமின் தலைவர்கள் அவனுக்கு உதவினர். எனவே தேவன் அபிமெலேக்கிற்கும் சீகேம் மனிதர்களுக்குமிடையே ஒரு தீய ஆவியை அனுப்பினார். அபிமெலேக்கை தாக்குவதற்கு சீகேமின் தலைவர்கள் திட்டமிட்டனர். 25சீகேம் நகரின் தலைவர்களுக்கு அபிமெலேக்கின் மேல் இருந்த விருப்பம் குறைந்தது. மலையில் கடந்து சென்றவர்களையெல்லாம் தாக்கி அவர்களது பெருட்களைப் பறிக்கும்பொருட்டு அவர்கள் மலையின்மேல் ஆட்களை அமர்த்தினார்கள். இந்தத் தாக்குதலைக் குறித்து அபிமெலேக்கு அறிந்தான்.
26ஏபேதின் குமாரனாகிய காகால் என்னும் பெயருடையவனும் அவனது சகோதரர்களும் சீகேம் நகருக்கு வந்தனர். சீகேமின் தலைவர்கள் காகாலை நம்பி, அவனைப் பின்பற்றுவதற்கு முடிவு செய்தனர்.
27ஒரு நாள் சீகேம் ஜனங்கள் திராட்சைகளைச் சேகரிப்பதற்குத் தோட்டங்களுக்குச் சென்று திராட்சைகளைப் பிழிந்து ரசம் தயாரித்தனர். பின் அவர்கள் தெய்வங்களின் கோவிலில் ஒரு விருந்து நடத்தினார்கள். ஜனங்கள் உண்டு குடித்து, அபிமெலேக்கைத் தூஷித்தனர்.
28ஏபேதின் குமாரனாகிய காகால், “நாம் சீகேமின் மனிதர்கள். நாம் ஏன் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படிய வேண்டும்? அவன் தன்னை யாரென்று நினைத்திருக்கிறான்? அபிமெலேக்கு, யெருபாகாலின் குமாரர்களில் ஒருவன் மாத்திரமே. மேலும் அவன் சேபூலைத் தனது அதிகாரியாக நியமித்தானே நாம் அபிமெலேக்கிற்குக் கீழ்ப்படியக்கூடாது. ஏமோரின் ஜனங்களே, நாம் நமது ஜனங்களையே பின்பற்ற வேண்டும். (ஏமோர் சீகேமின் தந்தை.) 29நீங்கள் என்னை இந்த ஜனங்களுக்கு சேனைத் தலைவனாக ஆக்கினால் நான் அபிமெலேக்கை அழிப்பேன். நான் அவனிடம் ‘உன் சேனையைத் தயார் செய்து போருக்கு வா’ என்று கூறுவேன்” என்றான்.
30சீகேம் நகரத்தின் ஆளுநராக சேபூல் இருந்தான். ஏபேதின் குமாரனாகிய காகால் சொன்னதைக் கேட்டுச் சேபூல் கோபமடைந்தான். 31அருமா நகரில் உள்ள அபிமெலேக்கிடம் சேபூல் தூதுவர்களை அனுப்பி:
“ஏபேதின் குமாரனாகிய காகாலும், காகலின் சகோதரர்களும் சீகேம் நகரத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் உமக்குத் தொல்லை தருகின்றனர். நகரம் முழுவதையும் உமக்கு எதிராக காகால் திருப்புகின்றான். 32எனவே நீரும், உமது ஆட்களும் இன்றிரவு வந்து நகரத்திற்கு வெளியேயுள்ள வயல்களில் மறைந்திருக்க வேண்டும். 33காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் நகரத்தைத் தாக்குங்கள். காகாலும் அவனது ஆட்களும் உங்களோடு போரிடுவதற்கு நகரத்திலிருந்து வெளியே வருவார்கள். அவர்கள் போரிடுவதற்கு வெளியே வரும்போது, உம்மால் முடிந்ததை அவர்களுக்குச் செய்யும்” என்று சொல்லச் சொன்னான்.
34எனவே அபிமெலேக்கும் அவனுடைய எல்லா வீரர்களும் இரவில் எழுந்து நான்கு குழுக்களாகப் பிரிந்து நகரத்திற்குச் சென்றார்கள். அவர்கள் சீகேம் நகரத்திற்கு அருகே ஒளிந்திருந்தார்கள். 35ஏபேதின் குமாரனாகிய காகால் வெளியே சென்று சீகேம் நகரத்திற்கு நுழையும் வாயிலின் அருகே நின்றுகொண்டிருந்தான். காகால் அங்கு நின்றுகொண்டிருந்தபோது அபிமெலேக்கும் அவனது வீரர்களும் மறைவிடங்களிலிருந்து வெளியே வந்தனர்.
36காகால் அந்த வீரர்களைக் கண்டான். காகால் சேபூலிடம், “பார், மலைகளிலிருந்து ஜனங்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான்.
ஆனால் சேபூல், “நீ மலைகளிலுள்ள நிழலையே காண்கிறாய். நிழல்கள் ஜனங்களைப் போலத் தோற்றமளிக்கின்றன” என்றான்.
37காகால் மீண்டும், “பார், சில ஜனங்கள் தேசத்தின் மேட்டுப் பகுதியிலிருந்து இறங்கி வருகின்றனர். அங்கே பார், மந்திரவாதியின் மரமருகே யாரோ ஒருவனின் தலையை நான் காணமுடிந்தது” என்றான். 38சேபூல் காகாலை நோக்கி, “நீ ஏன் வாய் மூடி இருக்கிறாய்? ‘அபிமெலேக்கு யார்? ஏன் அவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?’ என்றாய். நீ அவர்களைக் கிண்டல் செய்தாய். இப்போது அவர்களை எதிர்த்துப் போரிடு” என்றான்.
39எனவே சீகேமின் தலைவர்களை அபிமெலேக்கோடு போரிடுவதற்கு வழி நடத்தி காகால் அழைத்து வந்தான். 40அபிமெலேக்கும் அவனது ஆட்களும் காகாலையும் அவனது ஆட்களையும் துரத்தினர். காகாலின் ஆட்கள் சீகேம் நகரத்தில் வாயிலை நோக்கி ஓடினார்கள். காகாலின் வீரர்களில் பலர் அவர்கள் வாசலுக்குள் நுழைவதற்கு முன்னரே கொல்லப்பட்டனர்.
41பின் அபிமெலேக்கு அருமா நகரத்திற்குத் திரும்பினான். சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேம் நகரைவிட்டுக் கட்டாயப்படுத்தி வெளியேற்றினான்.
42மறுநாள் சீகேமின் ஜனங்கள் வயல்களுக்கு வேலை செய்யப்போனார்கள். அபிமெலேக்கிற்கு அவ்விஷயம் தெரிந்துவிட்டது. 43எனவே அபிமெலேக்கு அவனது ஆட்களை மூன்று குழுக்களாகப் பிரித்தான். அவன் சீகேமின் ஜனங்களைத் திடீரென தாக்குவதற்கு விரும்பினான். எனவே தன்னுடைய ஆட்களை வயலில் மறைந்திருக்கும்படி செய்தான். நகரத்திலிருந்து ஜனங்கள் வெளியே வந்ததும் அவர்கள்மேல் பாய்ந்து அவர்களைத் தாக்கினார்கள். 44அபிமெலேக்கும் அவனது குழுவினரும் சீகேமின் வாசலுக்கு அருகில் இருந்த ஓர் இடத்திற்கு ஓடினார்கள். மற்ற இரண்டு குழுவினரும் வயல்களிலிருந்த ஜனங்களிடம் ஓடி அவர்களைக் கொன்றார்கள். 45அபிமெலேக்கும் அவனது ஆட்களும் அந்த நாள் முழுவதும் சீகேம் நகரத்தை எதிர்த்துப் போரிட்டனர். அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சீகேம் நகரைக் கைப்பற்றி, அந்த நகரத்தின் ஜனங்களைக் கொன்றனர். பின் அபிமெலேக்கு நகரத்தை இடித்துப் பாழாக்கி, அதன் மீது உப்பைத் தூவினான்.
46சீகேம் நகரத்துக் கோபுரத்தில் சில மக்கள் வாழ்ந்தனர். அந்த இடத்திலுள்ள ஜனங்கள் சீகேம் நகரத்திற்கு நடந்ததைக் கேள்விப்பட்டபோது அவர்கள் ஏல்பேரீத் என்னும் தெய்வத்தின் கோவிலிலுள்ள பாதுகாப்பான அறையில் வந்து பதுங்கினார்கள்.
47அபிமெலேக்கு சீகேமின் ஜனங்கள் ஒருமித்து பதுங்கியிருப்பதைக் கேள்விப்பட்டான். 48எனவே அபிமெலேக்கும் அவனது ஆட்களும் சல்மோன் மலை உச்சிக்குச் சென்றனர். அபிமெலேக்கு ஒரு கோடாரியை எடுத்து மரக்கிளைகள் சிலவற்றை வெட்டி, அவற்றைத் தோளில் சுமந்து வந்தான். அபிமெலேக்கு தன்னோடிருந்தவர்களிடம், “விரைந்து நான் செய்வதைப் போலவே செய்யுங்கள்” என்றான். 49எனவே அவர்களும் அபிமெலேக்கைப் போலவே கிளைகளை வெட்டினார்கள். அவர்கள் மரக்கிளைளைப் ஏல்பேரீத் கோவிலின் பாதுகாப்பான அறைக்கு வெளியே குவித்து அதற்கு நெருப்பூட்டி, உள்ளே பதுங்கியிருந்த ஆட்களை எரித்துப்போட்டனர். சுமார் 1,000 ஆண்களும், பெண்களும் சீகேம் கோபுரத்திற்கருகில் மரித்தனர்.
அபிமெலேக்கின் மரணம்
50பின் அபிமெலேக்கும் அவனது ஆட்களும் தேபேசு நகரத்திற்குச் சென்று, அதைக் கைப்பற்றினர். 51நகரத்தின் உள்ளே பலமான ஒரு கோபுரம் இருந்தது. அந்நகரத்தின் தலைவர்களும் ஆண்களும் பெண்களும் அக்கோபுரத்திற்கு ஓடினார்கள். எல்லோரும் உள்ளே நுழைந்து உட்புறமாகக் கதவைத் தாழிட்டு கோபுரத்தின் உச்சியின்மீது ஏறினார்கள். 52அபிமெலேக்கும் அவனது ஆட்களும் கோபுரத்தைத் தாக்குவதற்காக அங்கு வந்தனர். அபிமெலேக்கு கோபுர வாசலினருகே வந்தான். அவன் கோபுரத்திற்கு நெருப்பூட்ட எண்ணினான். 53ஆனால் கோபுர வாசலின் முன் அபிமெலேக்கு நின்றுகொண்டிருந்தபோது கோபுர உச்சியில் இருந்த ஒரு பெண் ஏந்திர கல்லை அவன் தலைமீது போட்டாள். அக்கல் அபிமெலேக்கின் மண்டையைப் பிளந்தது. 54உடனே அபிமெலேக்கு ஆயுதங்களைத் தாங்கி நின்ற தன் பணியாளை நோக்கி, “உன் வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அபிமெலேக்கை கொன்றாள்’ என்று ஜனங்கள் கூறாதபடிக்கு நீ என்னைக் கொல்ல வேண்டுமென விரும்புகிறேன்” என்றான். எனவே பணியாள் அவனது வாளால் அபிமெலேக்கை வெட்ட, அவன் மரித்தான். 55அபிமெலேக்கு மரித்ததைக் கண்டு இஸ்ரவேலர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினார்கள்.
56இவ்வாறு, அவன் செய்த எல்லா தீமைகளுக்காக தேவன் அபிமெலேக்கைத் தண்டித்தார். அபிமெலேக்கு தன் 70 சகோதரர்களையும் கொன்று தன் தந்தைக்கெதிராய் தீமைசெய்தான். 57சீகேமின் ஜனங்களை அவர்களின் தீய செயல்களுக்காக தேவன் தண்டித்தார். எனவே யோதாம் கூறியவை அனைத்தும் நிகழ்ந்தன. (யெருபாகாலின் கடைசி குமாரன் யோதாம், யெருபாகாலின் மறுபெயர் கிதியோன்.)

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நியாயாதிபதிகளின் புத்தகம் 9