YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 15

15
சிம்சோன் பெலிஸ்தியருக்குத் தொல்லை கொடுத்தல்
1கோதுமை அறுவடையின்போது சிம்சோன் தன் மனைவியைச் சந்திக்கப் போனான். அவளுக்கு அன்பளிப்பாக ஒரு வெள்ளாட்டுக் குட்டியைக் கொண்டு வந்தான். அவன், “என் மனைவி இருக்கும் அறைக்குச் செல்கிறேன்” என்றான்.
அவளது தந்தை சிம்சோனை உள்ளே விடவில்லை. 2அவளது தந்தை சிம்சோனிடம், “நீ அவளை வெறுத்தாய் என நான் நினைத்தேன். எனவே மாபிள்ளைத் தோழனை அவள் திருமணம் செய்துகொள்ள நான் அனுமதித்து விட்டேன். அவள் தங்கை இன்னும் அழகானவள், அவளை மணந்துகொள்” என்றான்.
3ஆனால் சிம்சோன் அவனிடம், “இப்போது பெலிஸ்தியராகிய உங்கள் அனைவரையும் துன்புறுத்துவதற்கு எனக்கு ஒரு நல்ல காரணம் கிடைத்திருக்கிறது. என்னை இப்போது யாரும் குறைச் சொல்ல முடியாது” என்றான்.
4பின்பு சிம்சோன் வெளியே சென்று 300 நரிகளைப் பிடித்தான். அவற்றை இரண்டு இரண்டாகச் சேர்த்து அவற்றின் வாலைக் கட்டி, வால்களுக்கிடையில் நெருப்புப் பந்தத்தை வைத்தான்.
5பின்பு சிம்சோன் அவற்றைக் கொளுத்தி வாலில் நெருப்பு வைக்கப்பட்ட அந்நரிகளைப் பெலிஸ்தியரின் தானியங்கள் விளையும் வயல்களுக்கிடையில் துரத்திவிட்டான். இவ்வாறு அவர்களின் வயல்களில் விளைந்துகொண்டிருந்த பயிர்களையும், அறுவடை செய்து தனியே குவித்து வைத்த கதிர்க்கட்டுகளையும் நெருப்பால் அழித்தான். மேலும் திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எரித்தான்.
6பெலிஸ்தியர், “இதனைச் செய்தது யார்?” என்று கேட்டார்கள்.
திம்னாவிலுள்ள மனிதனின் மருமகனான சிம்சோன் அதனைச் செய்ததாகச் சிலர் கூறினார்கள். அவர்கள் “சிம்சோனின் மாமனார் தன் குமாரத்தியை மாப்பிள்ளைத் தோழனுக்குத் திருமணம் செய்து வைத்ததால் அவன் அத்தகைய செயலைச் செய்தான்” என்றார்கள். அதனால் பெலிஸ்தியர் சிம்சோனின் மனைவியையும், அவளது தந்தையையும் எரித்துக் கொன்றனர்.
7பின்பு சிம்சோன் அப்பெலிஸ்திய ஜனங்களிடம் “நீங்கள் தீமை செய்ததால் நானும் உங்களுக்குத் தீமை செய்வேன். நான் உங்கள் மேல் பழி சுமத்துகிறவரைக்கும் நிறுத்தமாட்டேன்!” என்றான்.
8பின்பு சிம்சோன் பெலிஸ்தியரைத் தாக்கி அவர்களில் பலரைக் கொன்றான். பின்பு அவன் ஒரு குகையில் சென்று தங்கினான். அக்குகை ஏத்தாம் பாறையில் இருந்தது.
9பின்பு பெலிஸ்தியர் யூதாவின் தேசத்திற்குச் சென்று, லேகி என்னுமிடத்திற்கருகில் தங்கினார்கள். அவர்களின் சேனையும் அங்கேயே தங்கிப் போருக்குத் தயாரானது. 10யூதா கோத்திரத்தினர் அவர்களிடம், “பெலிஸ்தியராகிய நீங்கள் ஏன் எங்களோடு போரிட வந்துள்ளீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு பெலிஸ்தியர், “நாங்கள் சிம்சோனைக் கைது செய்ய வந்துள்ளோம். எங்கள் ஜனங்களுக் கெதிராக அவன் செய்த செயல்களுக்கு அவனைத் தண்டிக்க விரும்புகிறோம்” என்றனர்.
11பின்பு 3,000 யூதா கோத்திரத்தினர் சேர்ந்து ஏத்தாம் பாறைக்கு அருகில் இருந்த குகைக்கு சிம்சோனிடம் சென்றனர். அவர்கள், “நீ எங்களுக்கு என்ன செய்தாய் என்பதை அறிவாயா? பெலிஸ்தியர் நம்மை ஆட்சி வலிமை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாதா?” என்று கேட்டனர்.
அதற்கு சிம்சோன், “அவர்கள் எனக்குத் தீங்கு செய்ததால் அவர்களைத் தண்டித்தேன்” என்றான்.
12பின்பு அவர்கள், “உன்னைக் கட்டி, பெலிஸ்தியரிடம் கொடுப்பதற்காக வந்துள்ளோம்” என்றனர்.
சிம்சோன் யூதா ஜனங்களிடம், “நீங்களாகவே என்னை காயப்படுத்தமாட்டீர்கள் என்று எனக்கு வாக்குக் கொடுங்கள்” என்று கேட்டான்.
13அதற்கு அவர்கள், “அதற்கு நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். உன்னைக் கட்டி பெலிஸ்தியரிடம் நாங்கள் கொடுப்போமேயன்றி, உன்னைக் கொல்லமாட்டோம்” என்றனர். அவ்வாறே அவர்கள் அவனை இரண்டு புதிய கயிறுகளால் கட்டி, குகைக்கு வெளியே கொண்டு வந்தனர்.
14லேகி என்னுமிடத்திற்குச் சிம்சோன் வந்தபோது, பெலிஸ்தியர்கள் அங்கு வந்தனர். அவர்கள் மகிழ்ச்சியால் துள்ளினார்கள். அப்போது கர்த்தருடைய ஆவியானவர் வல்லமையோடு சிம்சோன் மீது வந்தார். சிம்சோன் கயிறுகளை அறுத்தான். அந்த கயிறுகள் எரிந்துபோன நூலைப் போல காணப்பட்டன. உருகின கயிறுகள் போல அவன் கரங்களிலிருந்து அவை நழுவின. 15அவ்விடத்தில் மரித்த ஒரு கழுதையின் தாடையெலும்பு அவனுக்குக் கிடைத்தது. அத்தாடையெலும்பால் அவன் 1,000 பெலிஸ்தியர்களைக் கொன்றான்.
16பின்பு சிம்சோன்,
“ஒரு கழுதையின் தாடையெலும்பால்
1,000 பேரைக் கொன்றேன்!
கழுதையின் தாடையெலும்பால்
ஒன்றின் மேலொன்றாக பெரும் குவியலாக குவித்தேன்” என்றான்.
17இவ்வாறு சொல்லி அத்தாடையெலும்பை கீழே எறிந்தான். அந்த இடம் அதனால் ராமாத்லேகி என்று அழைக்கப்பட்டது.
18சிம்சோன் மிகவும் தாகமாயிருந்தான். அவன் கர்த்தரை நோக்கி, “நான் உமது ஊழியன், நீர் எனக்குப் பெரும் வெற்றியைத் தந்தீர். நான் தாகத்தால் மரிக்கும்படி தயவு செய்துவிடாதிரும். விருத்தசேதனம் இல்லாத மனிதர்கள் என்னைப் பிடிக்க அனுமதியாதிரும்” என்று அழுது முறையிட்டான்.
19லேகியின் தரையில் ஒரு துவாரம் இருந்தது. தேவன் அந்தத் துவாரத்தின் வழி வெடித்து தண்ணீர் வரும்படியாகச் செய்தார். சிம்சோன் அந்தத் தண்ணீரைக் குடித்து மறுபடியும் வலிமைபெற்றான். அந்த நீரூற்றுக்கு எந்நக்கோரி என்று பெயரிட்டான். அது இன்னும் லேகி நகரில் உள்ளது. 20இவ்வாறு சிம்சோன் இஸ்ரவேலருக்கு இருபது ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். இது பெலிஸ்தியரின் காலத்தில் நடந்தது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நியாயாதிபதிகளின் புத்தகம் 15