YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 13

13
சிம்சோனின் பிறப்பு
1மீண்டும் இஸ்ரவேலர்கள் தீயசெல்களில் ஈடுபடுவதை கர்த்தர் கண்டார். எனவே பெலிஸ்தியர் இஸ்ரவேலரை 40 ஆண்டுகள் ஆள்வதற்கு அனுமதித்தார்.
2சோரா என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் மனோவா. அவன் தாண் கோத்திரத்தைச் சார்ந்தவன். மனோவாவின் மனைவி குழந்தைகளின்றி மலடியாக இருந்தாள். 3கர்த்தருடைய தூதன் மனோவாவின் மனைவியின் முன் தோன்றி, “நீ பிள்ளை இல்லாதவளாயிருக்கிறாய், ஆனால் நீ கருவுற்று ஒரு குமாரனைப் பெறுவாய். 4திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே. அசுத்தமான உணவு எதையும் உண்ணாதே. 5ஏனெனில் நீ கருவுற்று ஓர் ஆண் மகனைப் பெறுவாய். அவன் விசேஷமாக தேவனுக்கென்று அர்பணிக்கப்படுவான். அவன் நசரேயனாக இருப்பான். எனவே அவன் முடியை சவரம் செய்யவோ, வெட்டவோ கூடாது. அவன் பிறப்பதற்கு முன்பிருந்தே தேவனுக்கென்று விசேஷமானவனாக இருப்பான். அவன் பெலிஸ்தியரின் ஆட்சியிலிருந்து இஸ்ரவேலரை மீட்பான்” என்றான்.
6அப்போது அப்பெண் தன் கணவனிடம் சென்று நடந்தவற்றைக் கூறினாள். அவள், “தேவனிடமிருந்து ஒரு மனிதன் என்னிடம் வந்தார். அவர் தேவன் அனுப்பிய தூதனைப் போன்றிருந்தார். அவர் என்னை பயமடையச் செய்தார். அவர் எங்கிருந்து வந்தாரென்று நான் விசாரிக்கவில்லை. அவர் தன் பெயரையும் எனக்குச் சொல்லவில்லை. 7ஆனால் அவர் என்னை நோக்கி, ‘நீ கருவுற்று ஒரு குமாரனைப் பெறுவாய். திராட்சைரசத்தையோ, வேறு மதுபானத்தையோ பருகாதே, அசுத்தமான எதையும் உண்ணாதே. ஏனெனில் ஒரு விசேஷமான வகையில் அச்சிறுவான் தேவனுக்காக அர்ப்பணிக்கப்படுவான். அவன் தேவனுக்குரிய விசேஷமானவனாக, பிறக்கும் முன்னரே அமைந்து, மரணம் அடையும் மட்டும் அவ்வாறே விளங்குவான்’ என்றார்” என்றாள்.
8பின்பு மனோவா கர்த்தரிடம் ஜெபம் செய்தான். அவன், “கர்த்தாவே, நீர் உமது தேவ மனிதனை எங்களிடம் மீண்டும் அனுப்ப வேண்டும். விரைவில் பிறக்கப் போகிற குமாரனுக்கு நாங்கள் என்னென்ன செய்ய வேண்டுமென்பதை அவர் எங்களுக்குக் கற்பிக்க வேண்டுமென்று விரும்புகிறோம்” என்றான்.
9தேவன் மனோவாவின் ஜெபத்தைக் கேட்டார். தேவதூதன் அப்பெண்ணிடம் மீண்டும் வந்தான். அவள் மனோவா இல்லாதபோது வயலில் தனித்திருந்தாள். 10எனவே அவள் தன் கணவனிடம் ஓடி, “அந்த மனிதன் வந்திருக்கிறார்! அன்று என்னிடம் வந்த அதே மனிதன்!” என்றாள்.
11மனோவா எழுந்து மனைவியைப் பின் தொடர்ந்து சென்றான். அம்மனிதனிடம் வந்து, “நீர் எனது மனைவியிடம் முன்பு பேசிய அதே மனிதரா?” என்று கேட்டான். தூதன், “நானே” என்றான்.
12மனோவா, “நீர் சொன்னபடியே நடக்குமென நம்புகிறேன். சிறுவன் வாழப்போகும் வாழ்க்கையைக் குறித்துச் சொல்லுங்கள். அவன் என்ன செய்வான்?” என்றான்.
13கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “உன் மனைவி நான் கூறிய எல்லாவற்றையும் செய்ய வேண்டும். 14திராட்சைச் செடியில் விளையும் எதையும் அவள் உண்ணக்கூடாது. அவள் திராட்சை ரசத்தையோ அல்லது வேறு மதுபானத்தையோ பருகக் கூடாது. அசுத்தமான உணவு எதையும் அவள் உண்ணக் கூடாது. நான் அவளைச் செய்யுமாறு கட்டளையிட்ட அனைத்தையும் அவள் செய்யவேண்டும்” என்றான்.
15அப்போது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி, “நீர் சற்றுத் தங்கிச் செல்வதை விரும்புகிறோம். ஒரு வெள்ளாட்டுக் குட்டியை நீர் உண்பதற்காகச் சமைத்து வர விரும்புகிறோம்” என்றான்.
16கர்த்தருடைய தூதன் மனோவாவை நோக்கி, “நீங்கள் இருக்குமாறு கூறினாலும் உங்கள் உணவை உண்ணமாட்டேன். நீங்கள் ஏதேனும் தயாரிக்க விரும்பினால் கர்த்தருக்குத் தகனபலி கொடுங்கள்” என்றான். (மனோவா உண்மையிலேயே அவன் கர்த்தருடைய தூதன் என்பதை அறியாதிருந்தான்.) 17பின் கர்த்தருடைய தூதனிடம் மனோவா, “உமது நாமமென்ன? நீர் சொன்னது உண்மையாகவே நடந்தால் நாங்கள் உம்மை எப்படி கௌரவிக்க முடியும்? இதற்காகவே உமது நாமத்தை நாங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்றான்.
18கர்த்தருடைய தூதன், “என் நாமத்தை ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு அது மிக அதிசயம் ஆகும்” என்றார்.
19மனோவா ஒரு வெள்ளாட்டுக்குட்டியை ஒரு பாறையின் மேல் பலியிட்டான். அவன் ஆட்டுக் குட்டியையும் தானியக் காணிக்கையையும் அதிசயங்களை செய்கிற கர்த்தருக்கு அன்பளிப்பாகச் செலுத்தினான். 20மனோவாவும் அவனது மனைவியும் நடந்த அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தனர். பலிபீடத்திலிருந்து நெருப்பு ஜூவாலை எழும்பிய போது கர்த்தருடைய தூதன் நெருப்பிலேயே விண்ணிற்கு எழுந்து சென்றார்.
மனோவாவும் அவனது மனைவியும் அதைக் கண்டு முகங்குப்புற தரையில் விழுந்து வணங்கினார்கள். 21அவர் கர்த்தருடைய தூதன் என்பதை மனோவா இறுதியில் கண்டுகொண்டான். கர்த்தருடைய தூதன் மீண்டும் மனோவாவிற்கும் அவன் மனைவிக்கும் காட்சியளிக்கவில்லை.
22மனோவா தன் மனைவியை நோக்கி, “நாம் தேவனைப் பார்த்தோம், அதனால் நாம் கண்டிப்பாக மரித்துவிடுவோம்!” என்றான்.
23ஆனால் அவள் அவனை நோக்கி, “கர்த்தர் நம்மைக் கொல்ல விரும்பவில்லை. அவர் நம்மைக் கொல்ல விரும்பினால் நமது தகனபலியையும், தானியக் காணிக்கையையும் ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். இந்த அற்புதங்களையும் காட்டியிருக்கமாட்டார். இக்காரியங்களை அறிவித்திருக்கவும்மாட்டார்” என்றாள்.
24அவள் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அவனுக்கு சிம்சோன் என்று பெயரிட்டனர். சிம்சோன் நன்றாக வளர்ந்தான். அவனை கர்த்தர் ஆசீர்வதித்தார். 25கர்த்தருடைய ஆவி சிம்சோன் மீது வந்து, அவன் மகானே தாண் என்னும் நகரிலிருக்கும்போது கர்த்தருடைய ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். மகானே நகரம் என்பது சோரா என்னும் நகரத்திற்கும் எஸ்தாவோல் என்னும் நகரத்திற்கும் நடுவில் உள்ளது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for நியாயாதிபதிகளின் புத்தகம் 13