ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 43
43
தேவன் எப்போதும் தமது ஜனங்களோடு இருக்கிறார்
1யாக்கோபே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இஸ்ரவேலே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இப்போது கர்த்தர் கூறுகிறார் “அஞ்சாதே! நான் உன்னைக் காப்பாற்றினேன். நான் உனக்குப் பெயரிட்டேன். நீ என்னுடையவன். 2உனக்குத் தொல்லைகள் இருக்கும்போது நான் உன்னோடு இருக்கிறேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது, நீ பாதிக்கப்படமாட்டாய். நீ நெருப்பினூடே நடக்கும்போது, நீ எரிக்கப்படமாட்டாய். நெருப்புச் ஜூவாலைகள் உன்னைப் பாதிக்காது. 3ஏனென்றால், கர்த்தராகிய நான் உனது தேவன். இஸ்ரவேலின் பரிசுத்தரான நான் உனது மீட்பர். உன்னை மீட்கும் பொருளாக எகிப்தைக் கொடுத்தேன். உன்னை என்னுடையவனாக்க எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுத்தேன். 4நீ எனக்கு மிகவும் முக்கியமானவன். எனவே, நான் உன்னைப் பெருமைப்படுத்துவேன். நான் உன்னை நேசிக்கிறேன். நான் (உன் ஜீவனுக்குப் பதிலாக) அனைத்து ஜனங்களையும் தேசங்களையும் கொடுப்பேன். எனவே நீ வாழலாம்.”
5“அஞ்ச வேண்டாம்! நான் உன்னோடு இருக்கிறேன். நான் உனது பிள்ளைகளைச் சேர்த்து அவர்களை உன்னிடம் அழைத்து வருவேன். நான் அவர்களைக் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஒன்று சேர்ப்பேன். 6நான் வடக்குக்குச் சொல்வேன், எனது ஜனங்களை எனக்குக் கொடு. தெற்குக்கு நான் சொல்லுவேன், எனது ஜனங்களைச் சிறையில் வைக்காதீர்கள். தொலைதூர இடங்களில் இருந்து எனது குமாரர்களையும், குமாரத்திகளையும் என்னிடம் கொண்டு வாருங்கள். 7எனக்குரிய அனைத்து ஜனங்களையும், என்னிடம் கொண்டு வாருங்கள். எனது நாமத்தை வைத்திருக்கிற ஜனங்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்! அவர்களை நான் எனக்காக படைத்தேன். அவர்களை நான் படைத்தேன். அவர்கள் என்னுடையவர்கள்.”
8தேவன் கூறுகிறார், கண்களிருந்தும் குருடாக இருக்கிற ஜனங்களை என்னிடம் அழைத்து வா, காதுகளிருந்தும் கேட்காதவர்களை என்னிடம் அழைத்து வா.
9அனைத்து ஜனங்களும் அனைத்து நாடுகளும் ஒன்றுசேர வேண்டும். அவர்களது பொய்த் தெய்வங்களில் ஒன்று தொடக்கத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்லட்டும். அவர்கள் தங்கள் சாட்சிகளை அழைத்து வரட்டும். சாட்சிகள் உண்மையைப் பேச வேண்டும். அவர்கள் சரியானவர்கள் என்பதை இது காட்டும்.
10கர்த்தர் கூறுகிறார், “நீங்களே எனது சாட்சிகள். நீயே நான் தேர்ந்தெடுத்த தாசன். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, ஜனங்கள் என்னை நம்புவதற்கு நீங்கள் உதவவேண்டும். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, நான்தான் அவர் என்பதையும் நான் உண்மையான தேவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனக்கு முன்பாக வேறு தேவன் இருந்ததில்லை, எனக்குப் பிறகும் வேறு தேவன் இருக்கப்போவதில்லை. 11நான், நானே கர்த்தர்! என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை! நான் ஒருவர் மட்டுமே! 12உங்களோடு பேசியவர் நான் ஒருவரே. நான் உங்களைக் காப்பாற்றினேன். நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உங்களோடு இருப்பது வேறு யாரும் அந்நியர் அல்ல. நீங்கள் என்னுடைய சாட்சிகள், நான் தேவன்!” (கர்த்தர் தாமாகவே இதனைச் சொன்னார்). 13“நான் எப்பொழுதும் தேவனாக இருக்கிறேன். நான் ஏதாவது செய்யும்போது, நான் செய்ததை எவராலும் மாற்றமுடியாது. எனது வல்லமையிலிருந்து எவரும் ஜனங்களைக் காப்பாற்றமுடியாது.”
14இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தர் உங்களைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் சொல்கிறார், “நான் உங்களுக்காகப் படைகளை பாபிலோனுக்கு அனுப்புவேன். பலர் சிறைப்பிடிக்கப்படுவார்கள். கல்தேயர்களான அவர்கள் தங்கள் படகுளில் எடுத்துச் செல்லப்படுவார்கள். (அப்படகுகளைப்பற்றிக் கல்தேயர்களுக்குப் பெருமை உண்டு). 15நானே பரிசுத்தரான கர்த்தர். நான் இஸ்ரவேலைப் படைத்தேன். நானே உங்கள் ராஜா.”
மீண்டும் தேவன் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்
16கர்த்தர் கடலின் வழியே சாலை அமைப்பார். அது வலிமையான தண்ணீராக இருந்தாலும், அவர் தமது ஜனங்களுக்காகப் பாதை அமைப்பார். கர்த்தர் சொல்கிறார், 17“எனக்கு எதிராகத் தங்கள் இரதங்களோடும், குதிரைகளோடும், படைகளோடும் போரிடுகிற ஜனங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள். அவர்கள் அழிக்கப்படுவார்கள். ஒரு மெழுகின் திரி அணைக்கப்படுகிறதுபோல் அவை அணைந்துபோகும். 18எனவே, தொடக்கத்தில் நிகழ்ந்ததை எண்ணவேண்டாம். வெகு காலத்திற்கு முன்னால் நடந்ததைப்பற்றி நினைக்கவேண்டாம். 19ஏனென்றால், நான் புதியவற்றைச் செய்வேன். இப்போது நீங்கள் புதிய செடியைப்போல வளருவீர்கள். இது உண்மை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்தீர்கள். நான் உண்மையில் இந்த வனாந்திரத்தில் சாலை அமைப்பேன். நான் உண்மையில் இந்த வறண்ட நிலத்தில் ஆறுகளை உருவாக்குவேன். 20காட்டு மிருகங்களும் எனக்கு நன்றியுடையவையாக இருக்கும். பெரிய மிருகங்களும் பறவைகளும் என்னைப் பெருமைப்படுத்தும். நான் வனாந்திரத்திலே தண்ணீரை ஊற்றும்போது அவை என்னை பெருமைப்படுத்தும். வறண்ட நிலத்தில் ஆறுகளைக் கொண்டுவரும்போது அவை என்னைப் பெருமைப்படுத்தும். எனது ஜனங்களுக்காக, என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்காகத் தண்ணீர் கொடுக்கும்படி நான் இதனைச் செய்வேன். 21நான் சிருஷ்டித்த ஜனங்கள் இவர்கள்தான். இவர்கள் என்னைத் துதித்துப் பாடுவார்கள்.
22“யாக்கோபே! நீ என்னிடம் ஜெபம் செய்யவில்லை. ஏனென்றால், இஸ்ரவேலாகிய நீ என்னிடத்தில் சோர்வடைந்து விட்டாய். 23நீ உனது ஆடுகளை தகன பலிகளாக எனக்குச் செலுத்தவில்லை. நீ என்னை மகிமைப்படுத்தவுமில்லை. நீ எனக்குப் பலிகளும் கொடுக்கவில்லை. நீ எனக்குப் பலிகள் கொடுக்கும்படி நான் உன்னை வற்புறுத்தவில்லை. நீ சோர்ந்து போகும்வரை நறுமணப் பொருட்களை எரிக்கும்படி நான் உன்னை வற்புறுத்தவில்லை. 24என்னைக் கனப்படுத்தும்படி படைக்கும் பொருட்களை நீ வாங்கவில்லை. உனது அடிமையைப்போல இருக்கும்படி நீ என்னை பலவந்தப்படுத்தினாய். அதே சமயம், உனது பாவங்களால் நீ என்னைப் பாரப்படுத்தினாய்.
25“நான், நான் ஒருவரே உனது பாவங்கள் அனைத்தையும் துடைத்துப்போடுகிறவர். என்னைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே நான் இதனைச் செய்கிறேன். நான் உனது பாவங்களை நினைத்துப்பார்க்கமாட்டேன். 26ஆனால், நீ என்னை நினைக்க வேண்டும். நாம் சந்தித்து எது சரியென்று முடிவு செய்யலாம். நீ செய்திருப்பதைச் சொல்லி நீ சரியென்று காட்ட வேண்டும். 27உங்கள் முதல் தந்தை பாவம் செய்தான். உங்களது வழக்கறிஞர்களும் எனக்கு எதிராகச் செய்தார்கள். 28உங்களது பரிசுத்தமான தலைவர்களைப் பரிசுத்தமில்லாமல் ஆக்குவேன். யாக்கோபை முழுமையாக என்னுடையவனாக ஆக்குவேன். இஸ்ரவேலுக்குத் தீயவை நிகழும்.
Currently Selected:
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 43: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International