YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 45

45
தான் யாரென்று யோசேப்பு சொல்கிறான்
1யோசேப்பு அதிக நேரம் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அங்கிருந்தவர்களின் முன்னால் அவன் உள்ளம் உடைந்து கண்ணீர் சிந்தினான். யோசேப்பு “எல்லோரையும் வெளியே போகச்சொல்” என்று கட்டளையிட்டான். அனைவரும் வெளியேறினர். அச்சகோதரர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். பிறகு அவன் தன்னை யாரென்று சொன்னான். 2யோசேப்பு தொடர்ந்து அழுதான். அந்த வீட்டில் உள்ள எகிப்தியர்கள் அனைவரும் அதைக் கேட்டனர். 3யோசேப்பு தனது சகோதரர்களிடம், “நான் உங்களின் சகோதரன் யோசேப்பு. என் தந்தை உயிரோடு நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான். சகோதரர்கள் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அவர்கள் குழப்பமும் பயமும் கொண்டனர்.
4யோசேப்பு மீண்டும், “என்னருகே வாருங்கள். கெஞ்சி கேட்கிறேன், வாருங்கள்” என்றான். சகோதரர்கள் அவனருகே வந்தனர். அவர்களிடம், “நான் உங்கள் சகோதரன் யோசேப்பு. எகிப்திய வியாபாரிகளிடம் உங்களால் விற்கப்பட்டவன். 5இப்போது அதற்காக வருத்தப்படாதீர்கள். நீங்கள் செய்தவற்றுக்காக உங்களையே கோபித்துக்கொள்ளாதீர்கள். இங்கே நான் வரவேண்டும் என்பது தேவனின் திட்டம். உங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றவே இங்கே இருக்கிறேன். 6இந்தப் பஞ்சம் இரண்டு ஆண்டுகளாக இருக்கின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகள் இருக்கும். 7ஆகவே தேவன் என்னை உங்களுக்கு முன்னதாக அனுப்பி இருக்கிறார். அதனால் உங்களை காப்பாற்றமுடியும். 8என்னை இங்கே அனுப்பியது உங்களது தவறு அல்ல. இது தேவனின் திட்டம். பார்வோன் மன்னருக்கே தந்தை போன்று நான் இங்கே இருக்கிறேன். நான் அரண்மனைக்கும் இந்த நாட்டிற்கும் ஆளுநராக இருக்கிறேன்” என்றான்.
இஸ்ரவேல் எகிப்திற்கு அழைக்கப்படுதல்
9யோசேப்பு அவர்களிடம், “வேகமாக என் தந்தையிடம் போங்கள். அவரது குமாரன் யோசேப்பு இந்தச் செய்தியை அனுப்பியதாகக் கூறுங்கள்: ‘தேவன் என்னை எகிப்தின் ஆளுநராக ஆக்கினார். எனவே என்னிடம் வாருங்கள். காத்திருக்க வேண்டாம். இப்போதே வாருங்கள். 10என்னருகில் கோசேன் நிலப்பகுதியில் வாழலாம். நீங்களும், உங்கள் பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும், மிருகங்களும் இங்கே வரவேற்கப்படுகிறீர்கள். 11இனிவரும் ஐந்தாண்டு பஞ்சத்திலும் உங்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்வேன். எனவே, நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களுக்குரிய எதையும் இழக்கமாட்டீர்கள்’ என்று கூறுங்கள்” என்றான்.
12யோசேப்பு தன் சகோதரர்களிடம், “நன்றாக உறுதி செய்துகொள்ளுங்கள். நான் தான் யோசேப்பு. உங்கள் சகோதரனாகிய எனது வாய்தான் பேசுகிறது என்பதை நீங்களும் பென்யமீனும் கண்களால் காண்கிறீர்கள். 13எகிப்திலே எனக்குள்ள மரியாதையையும் இங்கே நீங்கள் பார்க்கின்றவற்றையும் தந்தையிடம் சொல்லுங்கள். வேகமாகப் போய் தந்தையை அழைத்து வாருங்கள்” என்று சொன்னான். 14பிறகு தன் தம்பி பென்யமீனை அணைத்துக்கொண்டான். இருவரும் அழுதார்கள். 15பிறகு அவன் சகோதரர்கள் அனைவரையும் முத்தமிட்டான். அவர்களுக்காக அழுதான். இதற்குப் பிறகு அவர்கள் அவனோடு பேசத் தொடங்கினார்கள்.
16யோசேப்பின் சகோதரர்கள் வந்த செய்தியை பார்வோன் அறிந்துகொண்டான். பார்வோன் அரண்மனை முழுக்க அச்செய்தி பரவியது. ராஜாவும் அவனது வேலைக்காரர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 17ராஜா யோசேப்பிடம் வந்து, “உங்கள் சகோதரர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை எடுத்துக்கொண்டு கானான் பகுதிக்குப் போகட்டும். 18உனது குடும்பத்தையும் தந்தையையும் என்னிடம் அழைத்து வருமாறு கூறு. உங்களுக்கு வாழ நல்ல நிலத்தைக் கொடுக்கிறேன். இங்குள்ள சிறந்த உணவை அவர்கள் உண்ணலாம்” என்றான். 19“அதோடு இங்குள்ள சிறந்த வண்டிகளை உன் சகோதரர்களுக்கு கொடு. அவர்கள் கானான் பகுதிக்குச் சென்று உன் தந்தையையும், பெண்களையும், குழந்தைகளையும் ஏற்றிக்கொண்டு வரட்டும். 20அங்கிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு வருவதைக் குறித்துக் கவலைகொள்ள வேண்டாம். எகிப்திலுள்ளவற்றில் சிறந்தவற்றை அவர்களுக்குக் கொடுக்கலாம்” என்றான்.
21எனவே இஸ்ரவேலின் பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். பார்வோன் மன்னன் சொன்னது போல் நல்ல வண்டிகளையும், பயணத்திற்கு வேண்டிய உணவையும் யோசேப்பு கொடுத்து அனுப்பினான். 22சகோதரர் அனைவருக்கும் யோசேப்பு அழகான ஆடைகளைக் கொடுத்தான். ஆனால் யோசேப்பு பென்யமீனுக்கு மட்டும் ஐந்து ஜோடி ஆடைகளையும், 300 வெள்ளிக் காசுகளையும் கொடுத்தான். 23யோசேப்பு தன் தந்தைக்கும் அன்பளிப்புகளைக் கொடுத்து அனுப்பினான். 10 கழுதைகள் சுமக்குமளவு எகிப்திலுள்ள சிறந்த பொருட்களையெல்லாம் கொடுத்தான். 10 பெண் கழுதைகள் சுமக்கும்படி உணவுப் பொருட்களும், ரொட்டியும் பிற பொருட்களும் தன் தந்தையார் திரும்பிவரும் பயணத்திற்குப் பயன்பட கொடுத்தான். 24பிறகு சகோதரர்களை அனுப்பினான். அவர்கள் பிரிந்து போகும்போது “நேராக வீட்டிற்குப் போங்கள், வழியில் சண்டை போடாதீர்கள்” என்றான்.
25எனவே, சகோதரர்கள் எகிப்தை விட்டு கானான் பகுதிக்குத் தந்தையிடம் போனார்கள். 26அவர்கள் அவரிடம், “யோசேப்பு உயிரோடு இருக்கிறான் அவன் எகிப்து நாடு முழுவதிற்கும் ஆளுநராக இருக்கிறான்” என்றனர்.
இந்தச் செய்தியைக் கேட்டதும் யாக்கோபு புரியாமலிருந்தான். முதலில் அவனால் நம்ப முடியவில்லை. 27ஆனால் அவர்கள் யோசேப்பு சொன்னதை எல்லாம் சொன்னார்கள். தன்னை அழைத்துப் போவதற்காக யோசேப்பு அனுப்பியிருந்த வண்டிகளையெல்லாம் பார்த்தான். பிறகு யாக்கோபு புத்துணர்வு பெற்று மிக்க சந்தோஷமடைந்தான். 28“இப்போது உங்களை நம்புகிறேன், என் குமாரன் யோசேப்பு இன்னும் உயிரோடு இருக்கிறான். மரிப்பதற்கு முன்னால் அவனைப் பார்க்கப் போவேன்” என்று இஸ்ரவேல் கூறினான்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in