ஆதியாகமம் 40
40
யோசேப்பு இரண்டு கனவுகளுக்கு விளக்கம் கூறுதல்
1பிறகு, பார்வோனுக்கு எதிராக ரொட்டி சுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனுமான இரண்டு வேலைக்காரர்கள் தவறு செய்தனர். 2அவர்கள் மீது பார்வோனுக்கு மிகுந்த கோபம் இருந்தது. 3ராஜா அவர்களை யோசேப்பு இருந்த சிறையிலேயே அடைத்துவிட்டான். போத்திபார் இந்தச் சிறையின் பொறுப்பாளன். 4அதிகாரி, இந்த இருவரையும் யோசேப்பின் கண்காணிப்பில் வைத்தார். இருவரும் சிறையில் கொஞ்சக் காலம் தொடர்ந்து இருந்தனர். 5ஓரிரவு, இருவருக்கும் கனவு வந்தது. இருவரும் வெவ்வேறு கனவுகளைக் கண்டனர். இருவரும் எகிப்திய ராஜாவின் வேலைக்காரர்கள். ஒருவன் ரொட்டி சுடுபவன், மற்றொருவன் திராட்சைரசம் கொடுப்பவன். ஒவ்வொன்றுக்கும் தனிதனிப் பொருள் இருந்தது. 6மறுநாள் காலையில் யோசேப்பு அவர்களிடம் சென்றான். அவர்கள் இருவரும் கவலையாயிருப்பதைக் கண்டான். 7அவர்களிடம், “ஏன் இவ்வாறு இன்று கவலையோடு இருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
8அவர்கள், “நேற்று நாங்கள் இருவரும் கனவு கண்டோம். அதன் பொருள் புரியவில்லை. அதின் பொருளையோ, விளக்கத்தையோ சொல்பவர்கள் யாரும் எங்களுக்கு இல்லை” என்றனர்.
யோசேப்பு அவர்களிடம், “தேவன் ஒருவரே நமது கனவுகளைப் புரிந்துகொண்டு விளக்க வல்லவர். என்னிடம் உங்கள் கனவுகளைக் கூறுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.
திராட்சைரசம் பரிமாறுபவனின் கனவு
9திராட்சைரசம் கொடுப்பவன் தன் கனவை யோசேப்பிடம் கூறினான். “என் கனவில் நான் ஒரு திராட்சைக் கொடியைக் கண்டேன். 10அதில் மூன்று கிளைகள் இருந்தன. அவை வளர்ந்து பூக்கள் விட்டு கனிவதைக் கண்டேன். 11நான் பார்வோனின் கோப்பையை ஏந்தியிருந்தேன். எனவே அந்தத் திராட்சையைப் பிழிந்து சாறு எடுத்தேன். பிறகு அதனைப் பார்வோனுக்குக் கொடுத்தேன்” என்றான்.
12பிறகு யோசேப்பு, “இந்தக் கனவை உனக்கு விளக்குவேன். மூன்று கிளைகள் என்பது மூன்று நாட்கள். 13இன்னும் மூன்று நாளில் பார்வோன் உன்னை மன்னித்து, உன்னை விடுதலை செய்து, முன்பு அவரது கிண்ணம் ஏந்துபவனாக இருந்தது போல் உன்னை ஏற்றுக்கொள்வார். 14ஆனால் நீ விடுதலையானதும் என்னை நினைத்துக்கொள். எனக்கும் உதவி செய். பார்வோனிடம் என்னைப்பற்றிக் கூறு. அவர் என்னை விடுதலை செய்வார். 15நான் என் சொந்த எபிரெய நாட்டைவிட்டு இங்கு பலவந்தமாக கொண்டு வரப்பட்டேன். இங்கேயும் நான் தவறு செய்யவில்லை. நான் சிறையில் இருக்க வேண்டியவன் அல்ல” என்றான்.
ரொட்டிச் சுடுபவனின் கனவு
16ரொட்டி சுடுபவன் மற்றவனின் கனவுக்கு நல்ல பொருள் இருப்பதை அறிந்தான். தன் கனவையும் யோசேப்பிடம் கூறினான். “நானும் ஒரு கனவு கண்டேன். என் தலையில் மூன்று ரொட்டிக் கூடைகள் இருந்தன. 17மேல் கூடையில் எல்லா வகையான சமைத்த உணவுகளும் இருந்தது. அது பார்வோனுக்கு உரியது. ஆனால் பறவைகள் அவற்றைத் தின்றுகொண்டிருந்தன” என்றான்.
18யோசேப்பு, “நான் உனக்கு அக்கனவின் பொருளைச் சொல்கிறேன். மூன்று கூடைகள் மூன்று நாட்களைக் குறிக்கும். 19மூன்று நாள் முடிவதற்குள் நீ வெளியே செல்வாய். ராஜா உன் தலையை வெட்டிவிடுவான். உனது உடலைக் கம்பத்தில் தொங்கவிடுவான். பறவைகள் உன் உடலைத் தின்னும்” என்று சொன்னான்.
யோசேப்பு மறக்கப்படுதல்
20மூன்று நாளானதும் பார்வோனுடைய பிறந்த நாள் வந்தது. அவன் தன் வேலைக்காரர்களுக்கெல்லாம் விருந்து கொடுத்தான். அதனால் ரொட்டி சுடுபவனையும் திராட்சைரசம் கொடுப்பவனையும் விடுதலை செய்தான். 21பார்வோன் திராட்சைரசம் கொடுப்பவனுக்கு மீண்டும் வேலை கொடுத்தான். அவனும் பார்வோனிடம் ஒரு கோப்பை திராட்சை ரசத்தை கொடுத்தான். 22ஆனால் பார்வோன் ரொட்டி சுடுபவனைக் கொன்றுவிட்டான். யோசேப்பு சொன்னதுபோலவே அனைத்தும் நிகழ்ந்தது. 23ஆனால் திராட்சைரசம் வழங்குபவன் உதவிசெய்ய மறந்துவிட்டான். அவன் யோசேப்பைப்பற்றி பார்வோனிடம் எதுவும் சொல்லவில்லை.
Currently Selected:
ஆதியாகமம் 40: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International