YouVersion Logo
Search Icon

ஆதியாகமம் 38

38
யூதாவும் தாமாரும்
1அந்த நேரத்தில் யூதா தன் சகோதரர்களை விட்டுவிட்டு ஈரா என்ற பெயருடைய மனிதனோடு இருந்தான். ஈரா அதுல்லாம் என்ற நகரிலிருந்து வந்தவன். 2யூதா ஒரு கானானிய பெண்ணைச் சந்தித்து அவளை மணந்துகொண்டான். அவளது தந்தையின் பெயர் சூவா. 3அவளுக்கு ஒரு குமாரன் பிறந்தான். அவனுக்கு ஏர் என்று பெயர் வைத்தனர். 4அவள் இன்னொரு குமாரனைப் பெற்றாள். அவனுக்கு ஓனான் என்று பேர் வைத்தார்கள். 5இன்னொரு குமாரன் அவளுக்கு பிறந்தான். அவனுக்கு சேலா என்று பெயர் வைத்தார்கள். அவன் பிறந்தபோது அவர்கள் கெசீபிலே வாழ்ந்தனர்.
6யூதா தன் மூத்த குமாரனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார். 7ஆனால் ஏர் பல தீய செயல்களைச் செய்தான். கர்த்தர் அவனைப்பற்றி சந்தோஷமடையாததால், கர்த்தர் அவனை அழித்துவிட்டார். 8பிறகு யூதா, ஏரின் சகோதரனான ஓனானிடம், “போய் உன் சகோதரனின் மனைவியச் சேர்த்துக்கொண்டு அவளுக்குக் கணவனாகு. அவளுக்குக் குழந்தைகள் பிறந்தால் அவை உன் சகோதரன் ஏருக்கு உரியதாகும்” என்றான்.
9இந்தச் சேர்க்கையினால் பிறக்கும் குழந்தைகள் தன்னுடையதாக இருக்காது என்பதை ஓனான் அறிந்தான். ஓனான் தாமாருடன் பாலின உறவுகொள்ளும்போது தனது சகோதரனுக்கு சந்ததி உண்டாகாதிருக்கத் தனது வித்துவைத் தரையில் விழச் செய்தான். 10இது கர்த்தருக்கு மிகவும் கோபம் மூட்டியது. எனவே கர்த்தர் ஓனானையும் அழித்தார். 11பிறகு யூதா தன் மருமகளான தாமாரிடம், “உன் தந்தை வீட்டிற்குப் போ. என் இளைய குமாரன் வளர்ந்து ஆளாகிற வரை நீ அவனுக்காகக் காத்திரு” என்றான். சேலாவும் அழிந்து போவானோ என்று யூதா அஞ்சினான். தாமார் தன் தந்தை வீட்டிற்குப் போனாள்.
12பின்னர் சூவாவின் குமாரத்தியான யூதாவின் மனைவி மரித்துப் போனாள். யூதாவின் துக்க காலத்தில் அதுல்லாம் நகரைச் சேர்ந்த தன் நண்பன் ஈராவோடு தன் ஆடுகளுக்கு மயிர்கத்தரிக்க திம்னாவுக்குப் போனான். 13தன் மாமனாராகிய யூதா ஆடுகளின் மயிரைக் கத்தரிக்கும்படி திம்னாவை நோக்கிச் செல்கிறார் என்பதை தாமார் அறிந்துகொண்டாள். அவள் எப்போதும் விதவைக்குரிய ஆடைகளையே அணிந்து வந்தாள். 14எனவே இப்போது வேறு ஆடைகளை அணிந்து, தன் முகத்தை மூடிக்கொண்டு திம்னா நகருக்கு அருகில் உள்ள ஏனாயிம் என்னும் இடத்துக்குச் செல்லும் பாதைக்கு அருகில் உட்கார்ந்துகொண்டாள். யூதாவின் இளைய குமாரனான சேலா அப்பொழுது வளர்ந்துவிட்டான் என்பதை தாமார் அறிந்தாள். ஆனால் தாமார் அவனை மணப்பதற்கானத் திட்டத்தை யூதா செய்யமாட்டான் என்று அவள் உணர்ந்துகொண்டாள்.
15யூதா அவ்வழியாகப் போனபோது அவளைப் பார்த்தான். அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால் அவளை வேசி என்று நினைத்துக்கொண்டான். 16யூதா அவளிடம் போய், “நான் உன்னோடு பாலின உறவு கொள்ளலாமா” என்று கேட்டான். (அவனுக்கு அவள் தன் மருமகளான தாமார் என்பது தெரியாது) அவளோ, “எனக்கு எவ்வளவு கொடுப்பீர்?” என்று கேட்டாள்.
17அவனோ, “என் மந்தையிலிருந்து ஓர் இளம் ஆட்டை அனுப்புவேன்” என்றான்.
அவள் அதற்கு, “நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முதலில் ஆடு வரும்வரை அடமானமாக ஏதாவது கொடுத்துவிட்டுப் போகவேண்டும்” என்று கேட்டாள்.
18அவன், “என்னிடமிருந்து அடமானமாக என்ன பொருளை விரும்புகிறாய்” என்று கேட்டான்.
அவள், “உம்முடைய முத்திரை மோதிரமும், ஆரமும், கைக்கோலும் வேண்டும்” என்று கேட்டாள். யூதாவும் அவ்வாறே கொடுத்துவிட்டு அவளோடு பாலின உறவு கொண்டான். அதனால் அவள் கர்ப்பமானாள். 19தாமார் தன் வீட்டிற்குப் போய் முக்காட்டை எடுத்துவிட்டாள். பின் விதவைக்குரிய ஆடைகளை அணிந்துகொண்டாள்.
20யூதா தான் வாக்களித்தபடி வேசியிடம் ஆட்டுக் குட்டியைக் கொடுக்க தன் நண்பன் ஈராவை அனுப்பினான். அவளிடம் கொடுத்த அடமானப் பொருட்களையும் வாங்கி வருமாறு சொன்னான். ஆனால் அவனால் அவளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 21ஈரா அந்நகர ஜனங்கள் பலரிடம் அந்த வேசியைப்பற்றி விசாரித்தான்.
அவர்கள், “அத்தகைய வேசி இங்கு இல்லை” என்றனர்.
22எனவே அவன் யூதாவிடமே திரும்பி வந்தான். “என்னால் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்குள்ளவர்கள் அத்தகைய வேசி அங்கில்லை எனக் கூறுகின்றனர்” என்றான்.
23அதனால் யூதா, “அவள் எனது பொருட்களை வைத்திருக்கட்டும். ஜனங்கள் எங்களை நகையாடுவதை நான் விரும்பவில்லை. ஆட்டுக்குட்டியை அவளுக்குக் கொடுக்க முயன்றேன். அங்கே அவளோ இல்லை, இதுபோதும்” என்றான்.
தாமார் கர்ப்பமாகுதல்
24மூன்று மாதங்கள் ஆனதும் சிலர் யூதாவிடம், “உன் மருமகள் தாமார் ஒரு வேசியைப்போல பாவம் செய்துவிட்டாள். இப்போது அவள் கர்ப்பமாக இருக்கிறாள்” என்றனர்.
யூதாவோ, “அவளை அழைத்துப் போய் எரித்துவிடுவோம்” என்றான்.
25அந்த மனிதர்கள் தாமாரைக் கொல்வதற்காக அவளிடம் சென்றார்கள். ஆனால் அவள் தன் மாமனாருக்கு ஒரு செய்தியை அனுப்பினாள், “என்னைக் கர்ப்பவதியாக்கிய மனிதருக்குரிய பொருட்கள் சில என்னிடம் உள்ளன. இப்பொருட்களைப் பாருங்கள், அவர் யார்? யாருடைய முத்திரையும், ஆரமும் இது? யாருடைய கோல் இது?” என்று கேட்டிருந்தாள்.
26யூதாவுக்கு எல்லாம் புரிந்து போயிற்று, “அவள் சொல்வது சரி, நானே தவறு செய்து விட்டேன். நான் சொன்னபடி என் குமாரன் சேலாவை நான் அவளுக்குக் கொடுக்கவில்லை” என்று உணர்ந்தான். அவன் மீண்டும் தாமாரோடு பாலின உறவு கொள்ளவில்லை.
27தாமார் குழந்தைபெறும் காலம் வந்தது. அவளுக்கு இரட்டைக் குழந்தை பிறக்கும் என்றார்கள். 28முதலில் ஒரு குழந்தை கையை நீட்டியதும் அதன் கையில் சிவப்புக் கயிற்றைக்கட்டி “அது மூத்த குழந்தை” என்றாள் தாதி. 29ஆனால் அக்குழந்தை கைகளை உள்ளே இழுத்துக்கொண்ட போது இன்னொரு குழந்தை பிறந்தது. எனவே தாதி, “நீ மீறிக்கொண்டு வந்தாய். அதனால் மீறுதல் உன்னிடம் நிற்கும்” என்று அதற்கு பாரேஸ் என்று பேரிட்டாள். 30பின்னரே அடுத்த குழந்தை பிறந்தது. அதன் கையில் சிவப்புக் கயிறு இருந்ததால் சேரா என்று பெயரிட்டனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in