ஆதியாகமம் 36
36
ஏசாவின் குடும்பம்
1இது ஏசாவின் குடும்ப வரலாறு. 2ஏசா கானான் நாட்டுப் பெண்களை மணந்துகொண்டான். அவன் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியான ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாளையும் முதலில் மணந்துகொண்டான். 3இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமான பஸ்மாத்தையும் பிறகு மணந்தான். 4ஏசாவுக்கும் ஆதாளுக்கும் எலீப்பாஸ் என்ற குமாரன் பிறந்தான். பஸ்மாத்துக்கு ரெகுவேல் என்ற குமாரன் பிறந்தான். 5அகோலிபாமாளுக்கு எயூஷ், யாலாம், கோரா என்ற மூன்று குமாரர்கள் பிறந்தனர். ஏசாவின் இந்தப் பிள்ளைகள் கானான் நிலப் பகுதியிலேயே பிறந்தனர்.
6-8யாக்கோபு மற்றும் ஏசா ஆகியோரின் குடும்பங்கள் கானான் நாட்டில் வளர்ந்து மிகப் பெரிதாயின. எனவே ஏசா தன் சகோதரன் யாக்கோபை விட்டு விலகிப்போனான். ஏசா தனது மனைவியரையும், பிள்ளைகளையும், அடிமைகளையும், பசுக்கள் மற்றும் மிருகங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டு சேயீர் எனும் மலைப் பகுதிக்குச் சென்றான். (ஏசாவுக்கு ஏதோம் என்ற பேரும் உண்டு. சேயீர் நாட்டுக்கும் இந்தப் பெயர் உண்டு)
9ஏசா ஏதோம் ஜனங்களுக்குத் தந்தையானான். சேயீர் எனும் மலைப் பகுதியில் வாழ்ந்த ஏசா குடும்பத்தினரின் பெயர்கள் பின்வருமாறு:
10ஏசாவுக்கும் ஆதாவுக்கும் பிறந்த குமாரன் எலிப்பாஸ். ஏசாவுக்கும் பஸ்மாத்துக்கும் பிறந்த குமாரன் ரெகுவேல்.
11எலிப்பாசுக்கு தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் எனும் ஐந்து குமாரர்கள்.
12எலிப்பாசுக்கு திம்னா என்ற வேலைக்காரி இருந்தாள். அவளுக்கும் அவனுக்கும் அமலேக்கு என்ற குமாரன் பிறந்தான்.
13ரெகுவேலுக்கு நகாத், செராகு, சம்மா, மீசா என்று நான்கு குமாரர்கள்.
இவர்கள் ஏசாவுக்கு பஸ்மாத் மூலம் வந்த பேரக்குழந்தைகள்.
14ஏசாவின் மூன்றாவது மனைவியான சிபியோனின் குமாரத்தி ஆனாகினின் குமாரத்தியான அகோலிபாமாள் எயூஷ், யாலாம், கோராகு எனும் குமாரர்களைப் பெற்றாள்.
15ஏசாவின் குமாரர்களில் கீழ்க்கண்ட கோத்திரங்கள் தோன்றினர்.
ஏசாவின் மூத்த குமாரன் எலீப்பாஸ். எலீப்பாசிலிருந்து தேமான், ஓமார், செப்போ, கேனாஸ், 16கோராகு, கத்தாம், அமலேக்கு என்பவர்கள்.
இவர்கள் ஏதோம் நாட்டில் எலீப்பாசின் சந்ததியும் ஏசாவின் மனைவி வழி வந்த ஆதாளின் கோத்திரங்கள்.
17ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் குமாரர்களில் நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள் முக்கியமானவர்கள்.
இவர்கள் ஏதோம் நாட்டில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகனுமாயிருந்த பிரபுக்கள்.
18ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர்கள் எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவின் மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த தலைவர்கள்.
19இவர்கள் எல்லோரும் ஏசாவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள்.
20அந்த நாட்டில் ஏசாவுக்கு முன் வாழ்ந்த சேயீருக்கு
லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 21திஷோன், ஏதசேர், திஷான் என்னும் குமாரர்கள் இருந்தனர். இவர்கள் ஏதோம் நாட்டில் சேயீரின் குமாரர்களாகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
22லோத்தானுக்கு ஓரி, ஏமாம் எனும் குமாரர்கள் இருந்தனர். லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
23சோபாலினுக்கு அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் எனும் குமாரர்கள் இருந்தனர்.
24சிபியோனுக்கு அயா, ஆனாகு எனும் குமாரர்கள் இருந்தனர். ஆனாகு தன் தகப்பனாகிய சிபியோனின் கழுதைகளைப் பாலைவனத்தில் மேய்க்கையில் வெந்நீர் ஊற்றுகளைக் கண்டுபிடித்தான்.
25ஆனாகினுக்கு திஷோன், அகோலிபாமாள் எனும் பிள்ளைகள் இருந்தனர்.
26திஷோனுக்கு எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் எனும் குமாரர்கள் இருந்தனர்.
27ஏத்சேனுக்கு பில்கான், சகவான், அக்கான் என்னும் குமாரர்கள் இருந்தனர்.
28திஷானுக்கு ஊத்ஸ், அரான், என்னும் குமாரர்கள் இருந்தனர்.
29ஓரியரின் சந்ததியிலே லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 30திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள் தலைவர்கள் ஆனார்கள். இவர்களே சேயீர் நாட்டிலே தங்கள் பகுதிகளில் இருந்த ஓரியர் சந்ததியிலே உள்ள பிரபுக்கள்.
31அப்பொழுது ஏதோமிலே ராஜாக்கள் இருந்தார்கள். இஸ்ரவேலுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே ஏதோமில் பல மன்னர்கள் இருந்தனர்.
32பேயோர் எனும் ராஜாவின் குமாரனாகிய பேலா ஏதோமில் ஆட்சி செலுத்தி வந்தான். அவன் தின்காபா எனும் நகரிலிருந்து ஆண்டான்.
33பேலா மரித்ததும் யோபாப் ராஜா ஆனான். இவன் போஸ்றாவிலுள்ள சேராகுவின் குமாரன்.
34யோபாப் மரித்ததும் ஊசாம் அரசாண்டான். இவன் தேமானிய நாட்டினன்.
35ஊசாம் மரித்ததும் ஆதாத் அரசாண்டான். இவன் பேதாதின் குமாரன். (ஆதாத் மோவாபிய நாட்டிலே மீதியானியரை வெற்றி பெற்றவன்) இவன் ஆவீத் நாட்டிலிருந்து வந்தவன்.
36ஆதாத் மரித்தபின் சம்லா அரசாண்டான். இவன் மஸ்ரேக்கா ஊரைச் சார்ந்தவன்.
37சம்லா மரித்தபின் சவுல் அரசாண்டான். இவன் அங்குள்ள ஆற்றின் அருகிலுள்ள ரெகொபோத் ஊரைச் சேர்ந்தவன்.
38சவுல் மரித்தபின் பாகால்கானான் அரசாண்டான். இவன் அக்போருடைய குமாரன்.
39பாகால் கானான் மரித்தபின் ஆதார் அரசாண்டான். இவன் பாகு எனும் நகரைச் சேர்ந்தவன். இவனது மனைவியின் பெயர் மெகேதபேல். இவள் மத்ரேத் மற்றும் மேசகாவின் குமாரத்தி.
40-43ஏசாவே ஏதோமிய குடும்பங்களின் தந்தை ஆவான்.
ஏசாவின் வம்சத்தில் திம்னா, அல்வா, ஏதேத், அகோலிபாமா, ஏலா, பினோன், கேனாஸ், தேமான், மிப்சர், மக்தியேல், ஈராம் எனும் பிரபுக்கள் இருந்தனர். ஒவ்வொரு குடும்பமும் அந்தந்த குடும்பப் பெயர்களால் அழைக்கப்படுகிற பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.
Currently Selected:
ஆதியாகமம் 36: TAERV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Tamil Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 1998 Bible League International