YouVersion Logo
Search Icon

கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 6

6
ஒருவருக்கொருவர் உதவுக
1சகோதர சகோதரிகளே, உங்கள் குழுவில் உள்ள ஒருவன் தவறு செய்யலாம். ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் அவனிடம் போக வேண்டும். அவன் நல்ல வழிக்கு வர சாந்தத்தோடு உதவ வேண்டும். ஆனால் கவனமாக இருங்கள். நீங்கள் பாவம் செய்யத் தூண்டப்படலாம். 2உங்களுக்குச் சுமையாக இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ளுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்போது கிறிஸ்துவின் ஆணைகளுக்கு உண்மையாகவே கீழ்ப்படிகிறீர்கள். 3முக்கியத்துவம் இல்லாத ஒருவன் தன்னைப் பெரிதும் முக்கியத்துவம் கொண்டவனாக நினைத்துக்கொள்வானேயானால், அது தன்னைத் தானே முட்டாளாக்கிக்கொள்ளும் காரியமாகும். 4ஒருவன் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அவனவன் தனது செயல்களைச் சீர்தூக்கிப் பார்ப்பானாக. பிறகு அவன் தன்னால் செய்ய முடிந்த காரியங்களைப் பற்றிப் பெருமைப்பட்டுக்கொள்ள இடமிருக்கும். 5ஒவ்வொருவனும் தன் பொறுப்புகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது வயலில் நடுவது போன்றது
6வேதவசனத்தில் போதிக்கப்படுகிறவன், போதிக்கிறவனுக்கு எல்லா நன்மைகளையும் பங்கு வைத்துக் கொடுப்பானாக.
7புத்தியற்றவர்களாகாதீர்கள். உங்களால் தேவனை ஏமாற்ற முடியாது. ஒருவன் விதைக்கிறதையே அறுப்பான். 8பாவம் நிறைந்த தன் சுயத்தை திருப்தி செய்யும் பொருட்டு வாழத் தொடங்குவானேயானால், பாவம் நிறைந்த அவன் சுயமானது நிலையான மரணத்தையே தரும். ஆனால் பரிசுத்த ஆவியைத் திருப்திப்படுத்தும் பொருட்டு ஒருவன் வாழத் தொடங்குவானேயானால், அழிவற்ற வாழ்வை ஆவியானவரிடமிருந்து பெறுவான். 9நாம் நன்மையைச் செய்வதில் சோர்வடையாமல் இருந்தால் சரியான நேரத்தில் அழிவில்லாத வாழ்வு என்னும் விளைச்சலைப் பெறுவோம். நம் செயல்களில் என்றும் பின்வாங்கக் கூடாது. 10எவர் ஒருவருக்கும் நன்மை செய்யும் வாய்ப்பு கிட்டும் போதெல்லாம், நாம் செய்ய வேண்டும். குறிப்பாக தேவனிடம் விசுவாசம் கொண்டுள்ள குடும்பங்களுக்கு நன்மை செய்யவேண்டும்.
பவுல் தன் நிருபத்தை முடித்தல்
11இதை நானே எழுதிக்கொண்டிருக்கிறேன். கடிதங்கள் எவ்வளவு பெரியவை என்று பாருங்கள். 12சிலர் உங்களை விருத்தசேதனம் செய்யுமாறு கட்டாயப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். சில மக்கள் தம்மை ஏற்றுக்கொள்வார்கள் என்பதன் பொருட்டு அவர்கள் இதனைச் செய்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவையை பிரசங்கித்தால் துன்பப்பட நேரும் என அஞ்சுகிறார்கள். 13விருத்தசேதனம் செய்துகொண்ட அவர்களோ சட்டத்தை மேற்கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் உங்களை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்கள் உங்களைச் செய்ய வைப்பதில் பெருமைப்பட மட்டும் விரும்புகிறார்கள்.
14இது போன்றவற்றைக் குறித்து நான் பெருமையடித்துக்கொள்ளமாட்டேன் என்பதில் நம்பிக்கை கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் சிலுவை ஒன்றே நான் பெருமைப்படத்தக்கது. சிலுவையில் இயேசு இறந்து போனதால் எனக்கு இந்த உலகமே செத்துப்போனது. இந்த உலகத்துக்கு நான் செத்துப்போனேன். 15ஒரு மனிதன் விருத்தசேதனம் செய்துகொண்டவனா இல்லையா என்பது முக்கியமல்ல. தேவனால் புதுப்படைப்பாக ஆக்கப்படுவது தான் முக்கியம். 16இந்தச் சட்டத்தின் முறைப்படி வாழ்கிற தேவனுடைய இஸ்ரவேலர்களுக்கு சமாதானமும் கிருபையும் உண்டாவதாக.
17இனிமேல் எந்தத் தொந்தரவும் எனக்குத் தர வேண்டாம். எனது சரீரத்தில் வடுக்களை ஏற்றிருக்கிறேன். இந்த வடுக்கள் நான் இயேசு கிறிஸ்துவைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டும்.
18என் சகோதர சகோதரிகளே, நம்முடைய தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியோடு கூட இருக்கட்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஆமென்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for கலாத்தியருக்கு எழுதிய கடிதம் 6