YouVersion Logo
Search Icon

எஸ்றாவின் புத்தகம் 10

10
ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்ளுதல்
1எஸ்றா ஜெபம் செய்து அறிக்கையிட்டான். அழுதுக்கொண்டே அவன் தேவனுடைய ஆலயத்திற்கு முன்பு விழுந்தான். எஸ்றா இவ்வாறு செய்துகொண்டிருக்கும்போது, இஸ்ரவேல் ஜனங்களில் ஆண், பெண், குழந்தைகள் என ஒரு பெரிய கூட்டம் அவரைச் சுற்றிக்கொண்டது. அவர்களும் அவரோடு சேர்ந்து மிகப் பலமாக அழுதார்கள். 2அப்போது ஏலாமின் சந்ததியில் ஒருவனான, யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவிடம் பேசினான். செக்கனியா, “நான் நமது தேவனிடம் உண்மையாக இருக்கவில்லை. நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் மணந்துக்கொண்டோம். ஆனால் நாங்கள் இதைச் செய்திருந்தாலும், இஸ்ரவேலுக்கான நம்பிக்கை இன்னும் இருக்கிறது. 3இப்போது நாம் தேவனுக்கு முன்னால் ஒரு உடன்படிக்கை செய்துக்கொள்வோம். அதன்படி அப்படிப்பட்ட நமது பெண்களையும் குழந்தைகளையும் அகற்றிவிடுவோம். எஸ்றா மற்றும் நமது தேவனுடைய சட்டங்களை மதிக்கும் ஜனங்களின் அறிவுரையைப் பின்பற்றுவதற்காக நாம் அதைச் செய்வோம். நாம் தேவனுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவோம். 4எஸ்றா, எழுந்திரும், இது உங்கள் பொறுப்பு, ஆனால் நாங்கள் உங்களை ஆதரிப்போம். எனவே தைரியமாக செயல்படும்” என்றான்.
5எனவே எஸ்றா எழுந்தான். தலைமை ஆசாரியர்களையும், லேவியர்களையும், இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் தன் சொல்லுக்குக் கட்டுப்படும்படி வாக்குறுதி பண்ணச்செய்தான். 6பிறகு, எஸ்றா தேவனுடைய ஆலயத்தில் இருந்து வெளியேப் போனான். எலியாசிபின் குமாரனான யோகனானின் அறைக்குப் போனான். அங்கே, அவன் அடிமைத்தனத்திலிருந்து மீண்ட ஜனங்களுக்காக உணவு உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும் இருந்தான். காரணம் அவன் இன்னும் சோகமாக இருந்தான். எருசலேமிற்குத் திரும்பி வந்த ஜனங்களைப் பற்றி மிகவும் சோகமாயிருந்தான். 7யூதா மற்றும் எருசலேமில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஒரு செய்தியை அனுப்பினான். அச்செய்தி, அடிமைத்தனத்திலிருந்து மீண்டு எருசலேமிற்கு வந்த இஸ்ரவேலர்கள் அனைவரையும் எருசலேமில் கூடும்படிச் சொன்னது. 8மூன்று நாட்களுக்குள் எந்த இஸ்ரவேலனும் எருசலேமிற்கு வராவிட்டால், தம் சொத்துக்களை இழக்க வேண்டியதிருக்கும். இந்த முடிவை முக்கிய அதிகாரிகளும், மூப்பர்களும் எடுத்தனர். கூட்டத்திற்கு வராதவர்கள் அந்தக் குழுவின் உறுப்பினராக இல்லாமல் போவார்கள்.
9எனவே, எருசலேமில் மூன்று நாட்களுக்குள், யூதா மற்றும் பென்யமீனில் உள்ள அனைவரும் வந்து கூடினார்கள். 9வது மாதத்தின் 20வது நாளில் ஆலய பிரகாரத்தில் அனைவரும் கூடினார்கள். இக்கூட்டத்தாலும் அப்போது பெய்த பெரு மழையால் ஜனங்கள் மிகவும் கலக்கமடைந்தார்கள். 10பிறகு ஆசாரியனான எஸ்றா எழுந்து ஜனங்களிடம் பேசினான். “நீங்கள் தேவனுக்கு உண்மையானவர்களாக இல்லை. நீங்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டீர்கள். இதைச் செய்ததன் மூலம் இஸ்ரவேலர்களை மேலும் குற்றவாளிகளாக்கிவிட்டீர்கள். 11இப்போது, நீங்கள் பாவம் செய்தீர்கள் என்பதை கர்த்தரிடம் ஒப்புக்கொள்ளவேண்டும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் தேவன். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்தும், உங்கள் அயல்நாட்டு மனைவியரிடம் இருந்தும் தனித்திருங்கள்” என்றான்.
12பிறகு அங்கு கூடியுள்ள கூட்டம் முழுவதும் எஸ்றாவிற்குப் பதில் சொன்னது. அவர்கள் உரத்த குரலில், “எஸ்றா, நீர் சொல்வது சரி! நீர் சொல்லும் காரியங்களை நாங்கள் செய்யவேண்டும். 13ஆனால் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். இது மழை காலமாகவும் இருக்கிறது. எனவே எங்களால் வெளியே தங்கமுடியாது. நாங்கள் மிக மோசமான பாவங்களைச் செய்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்சினையை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் தீர்க்க முடியாது. 14இங்கே கூடியுள்ள அனைவருக்காகவும் எங்கள் தலைவர்கள் முடிவுச் செய்யட்டும். எங்கள் நகரங்களில் அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள் எல்லாம் ஒரு திட்டமிட்ட நாளில் இங்கே எருசலேமில் கூடட்டும். அவர்கள் இங்கு மூப்பர்களோடும் நகர நீதிபதிகளோடும் வரட்டும். பிறகு எங்கள் மீது தேவன் கோபங்கொள்ளாமல் இருப்பார்” என்றனர்.
15மிகச் சிலரே இந்தத் திட்டத்திற்கு எதிராக இருந்தனர். அவர்கள் ஆசகேலின் குமாரனான யோனத்தானும், திக்வாவின் குமாரனான யக்சியாவும் ஆவார்கள். லேவியர்களில் மெகல்லாவும், சப்பேதாவும் இதற்கு எதிராக இருந்தனர்.
16எனவே எருசலேமிற்குத் திரும்பி வந்த இஸ்ரவேலர்கள் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். ஆசாரியனாகிய எஸ்றா, குடும்பத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தான். அவன் ஒவ்வொரு கோத்திரங்களிலிருந்தும் ஒருவனைத் தேர்ந்தெடுத்தான். ஒவ்வொருவரும் தங்கள் பேரால் அழைக்கப்பட்டனர். பத்தாவது மாதத்தின் முதல் நாளில் அவர்கள் கூடியமர்ந்து, ஒவ்வொரு வழக்கையும் ஆராய்ந்தனர். 17அடுத்த ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில், அவர்கள் அயல்நாட்டுப் பெண்களை மணந்து கொண்டவர்களைப் பற்றி விசாரித்து முடித்தனர்.
அயல்நாட்டுப் பெண்களை மணந்துக்கொண்டவர்களின் பட்டியல்
18அயல்நாட்டுப் பெண்களை மணந்துக் கொண்ட ஆசாரியர் சந்ததியினரின் பெயர்கள்:
யோசதாக்கின் குமாரனாகிய யெசுவா என்பவனின் சந்ததியிலும் யெசுவாவின் சகோதரர்களும்; மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா ஆகியோர். 19இவர்கள் அனைவரும் தம் மனைவியரை விவாகரத்து செய்வதாக வாக்களித்தனர். தங்கள் ஒவ்வொருவரும் மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டுக் கடாவைக் குற்றநிவாரண பலியாகக் கொடுத்தார்கள். தங்கள் குற்ற மனப்பான்மையால் அவர்கள் இவ்வாறு செய்தனர்.
20இம்மேர் என்பவனின் சந்ததியில், அனானியும் செபதியாவும்.
21ஆரீம் என்பவனின் சந்ததியில், மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா ஆகியோர்.
22பஸ்கூர் என்பவனின் சந்ததியில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா ஆகியோர்.
23லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா (இவனுக்கு கெலாயா என்ற பேருமுண்டு), பெத்தகீயா, யூதா, எலியேசர் ஆகியோர்
அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள்.
24பாடகரில் எலியாசிபும்,
வாசல் காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி ஆகியோர்
அயல் தேசத்துப் பெண்களை மணந்துக்கொண்டவர்கள்.
25மற்ற இஸ்ரவேலருக்குள்ளே கீழ்க்கண்டவர்கள் அனைவரும் அயல்தேசப் பெண்களை மணந்துக் கொண்டவர்கள்.
பாரோஷின் சந்ததியில்: ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா ஆகியோர்.
26ஏலாமின் சந்ததியில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா ஆகியோர்.
27சத்தூவின் சந்ததியில்: எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா ஆகியோர்.
28பெபாய் என்பவனின் சந்ததியில்: யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி ஆகியோர்.
29பானி என்பவனின் சந்ததியில்: மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் ஆகியோர்.
30பாகாத்மோவாப் என்பவனின் சந்ததியில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே ஆகியோர்.
31ஆரீம் என்பவனின் சந்ததியில்: எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன். 32பென்யமீன், மல்லூக், செமரியா ஆகியோர்.
33ஆசும் என்பவனின் சந்ததியில்: மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி ஆகியோர்.
34பானி என்பவனின் சந்ததியில்: மாதாயி, அம்ராம், ஊவேல், 35பெனாயா, பெதியா, கெல்லூ, 36வனியா, மெரெமோத், எலெயாசீப், 37மத்தனியா, மதனாய், யாசாய்,
38பானிபின்னூயி என்பவனின் சந்ததியில்: சிமெயி, 39செலேமியா, நாத்தான், அதாயா, 40மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, 41அசரெயேல், செலேமியா, செமரியா, 42சல்லூம், அமரியா, யோசேப் ஆகியோர்.
43நேபோ என்பவனின் சந்ததியில்: ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.
44இவர்கள் அனைவரும் அயல்நாட்டுப் பெண்களை மணந்திருந்தனர். சிலருக்கு அவர்களோடு குழந்தைகளும் இருந்தனர்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in