YouVersion Logo
Search Icon

எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 24

24
பானையும் இறைச்சியும்
1எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. இது சிறைப்பட்ட ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் (டிசம்பர்) பத்தாம் நாளில் நடந்தது, அவர் சொன்னார்: 2“மனுபுத்திரனே, இந்த நாளின் தேதியையும் இந்தக் குறிப்பையும் நீ எழுதிவை. ‘இந்த நாளில் பாபிலோன் ராஜாவின் படை எருசலேமை முற்றுகையிட்டது.’ 3இந்தக் கதையைக் கீழ்ப்படிய மறுக்கும் குடும்பத்தாரிடம் (இஸ்ரவேல்) கூறு. அவர்களிடம் இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறுகிறார்:
“‘பாத்திரத்தை அடுப்பிலே வை,
பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்று.
4அதில் இறைச்சித் துண்டுகளைப் போடு.
தொடை மற்றும் தோள்களில் உள்ள நல்ல கறிகளைப் போடு,
நல்ல எலும்புகளாலும் பாத்திரத்தை நிரப்பு.
5மந்தையில் நல்ல ஆடுகளை பயன்படுத்து,
பாத்திரத்திற்குக் கீழே விறகுகளை அடுக்கு,
இறைச்சித் துண்டுகளைக் கொதிக்க வை.
எலும்புகளும் வேகும்வரை பொங்கக் காய்ச்சு!
6“‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
இது எருசலேமிற்குக் கேடாகும்.
கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது கேடாகும்.
எருசலேம் துரு ஏறிய ஒரு பாத்திரத்தைப் போன்றது.
அத்துரு நீக்க முடியாதது!
அப்பாத்திரம் சுத்தமானதாக இல்லை,
எனவே நீ அப்பாத்திரத்திலுள்ள எல்லாக் கறித் துண்டுகளையும் வெளியே எடுத்துப் போடவேண்டும்!
அக்கெட்டுப்போன இறைச்சியில் ஆசாரியர்கள் எதையும் தேர்ந்தெடுக்க, தின்ன அனுமதிக்கவேண்டாம்.
7எருசலேம் துருவோடுள்ள பாத்திரத்தைப் போன்றது.
ஏனென்றால் கொலைகளினால் ஏற்பட்ட இரத்தம் இன்னும் உள்ளது!
அவள் வெறும் பாறையில் இரத்தத்தைப் போட்டாள்!
அவள் இரத்தத்தை நிலத்தில் ஊற்றி அதைப் புழுதியினால் மூடவில்லை.
8நான் அவள் இரத்தத்தை வெறும் பாறையில் வைத்தேன்.
எனவே இது மறைக்கப்படாது.
நான் இதனைச் செய்தேன், எனவே ஜனங்கள் கோபப்படுவார்கள்,
அப்பாவி ஜனங்களைக் கொன்றதற்காக அவளைத் தண்டிப்பார்கள்.’”
9“‘எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
கொலைக்காரர்கள் நிறைந்த இந்நகரத்துக்கு இது கேடாகும்!
நான் நெருப்புக்காக நிறைய விறகுகளை அடுக்குவேன்.
10பாத்திரத்திற்குக் கீழே நிறைய விறகுகளை அடுக்கு.
நெருப்பு வை,
இறைச்சியை நன்றாக வேகவை!
மசாலாவைக் கலந்து வை.
எலும்புகளையும் எரித்துவிடு!
11பிறகு பாத்திரத்தைக் காலியாக்கி நெருப்பின் மேல் வை.
அதன் கறைகள் உருகத் தொடங்கும் வரை சூடாக்கு.
அதன் கறைகள் உருகிவிடும்,
துருவும் அழிக்கப்படும்.
12“‘எருசலேம், அழுக்கினை போக்க
கடுமையாக வேலை செய்யவேண்டும்.
ஆனாலும் “துரு” போகாது!
நெருப்பு (தண்டனை) மட்டுமே துருவை அகற்றும்!
13“‘நீ எனக்கு எதிராகப் பாவம் செய்தாய்.
அதனால் பாவக்கறையோடு உள்ளாய்.
நான் உன்னைக் கழுவிச் சுத்தமாக்க விரும்பினேன்.
ஆனால் அழுக்கு வெளியேறவில்லை.
எனது கோபநெருப்பு தணியும்வரை
நான் மீண்டும் உன்னைக் கழுவ முயற்சி செய்யமாட்டேன்!
14“‘நானே கர்த்தர், உனது தண்டனை வரும் என்று நான் சொன்னேன். நான் அது வரும்படிச் செய்வேன். நான் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை. நான் உனக்காக வருத்தப்படுவதில்லை. நீ செய்த பாவங்களுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
எசேக்கியேல் மனைவியின் மரணம்
15பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 16“மனுபுத்திரனே, நீ உன் மனைவியைப் அதிகமாய் நேசிக்கிறாய். ஆனால் நான் அவளை உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறேன். உன் மனைவி திடீரென்று மரிப்பாள். ஆனால் உனது துக்கத்தை நீ காட்டக்கூடாது. நீ உரக்க அழவேண்டாம். நீ அழுவாய். உன் கண்ணீர் கீழே விழும். 17ஆனால் உனது துயரத்தை அமைதியாக வெளிப்படுத்தவேண்டும். உனது மரித்த மனைவிக்காக நீ உரக்க அழாதே. நீ வழக்கமாக அணிகிற ஆடையையே அணியவேண்டும். உனது தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணியவேண்டும். உனது துயரத்தைக் காட்ட மீசையை மறைக்க வேண்டாம். உறவினர் மரித்துப்போனால் வழக்கமாக மற்றவர்கள் உண்ணும் உணவை நீ உண்ண வேண்டாம்.”
18மறுநாள் காலையில் ஜனங்களிடம் தேவன் சொன்னதைச் சொன்னேன். அன்று மாலையில் எனது மனைவி மரித்தாள். மறுநாள் காலையில் தேவனுடைய கட்டளைபடி நான் செய்தேன்: 19பிறகு ஜனங்கள் என்னிடம் சொன்னார்கள்; “ஏன் இவ்வாறு செய்கிறீர்? இதன் பொருள் என்ன?”
20பிறகு நான் அவர்களிடம் சொன்னேன்: “கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் 21இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் சொல்லச் சொன்னார். எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: ‘பார், நான் எனது பரிசுத்தமான இடத்தை அழிப்பேன். அந்த இடத்தைப்பற்றி பெருமைப்படுகிறீர்கள். அதைப்பற்றிப் புகழ்ந்து பாடுகிறீர்கள். அந்த இடத்தைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறீர்கள். ஆனால் நான் அந்த இடத்தை அழிப்பேன். நீங்கள் விட்டுச்செல்லும் உங்கள் பிள்ளைகளைப் போரில் கொல்வேன். 22ஆனால், நான் என் மனைவிக்குச் செய்ததையே நீங்கள் செய்வீர்கள். உங்கள் துக்கத்தைக் காட்ட மீசையை மறைக்கமாட்டீர்கள். ஒருவன் மரித்ததற்காக வழக்கமாக உண்ணும் உணவை நீங்கள் உண்ணமாட்டீர்கள். 23நீங்கள் உங்கள் தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டமாட்டீர்கள். நீங்கள் அழமாட்டீர்கள். ஆனால் உங்களது பாவங்களால் நீங்கள் வீணாக்கப்படுவீர்கள். நீங்கள் உங்களது துயர ஒலிகளை ஒருவருக்கொருவர் அமைதியாக வெளிப்படுத்திக்கொள்வீர்கள், 24எனவே எசேக்கியேல் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு, அவன் செய்ததை எல்லாம் நீங்கள் செய்வீர்கள். அந்தத் தண்டனைக் காலம் வரும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’”
25-26“மனுபுத்திரனே, நான் ஜனங்களிடமிருந்து அப்பாதுகாப்பான இடத்தை (எருசலேம்) எடுத்துக்கொள்வேன். அந்த அழகிய இடம் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க அதிகமாக விரும்புகின்றனர். அவர்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் நான் அந்த நகரத்தையும் அவர்களது பிள்ளைகளையும் எடுத்துக்கொள்வேன். தப்பிப் பிழைத்த ஒருவன் எருசலேம் பற்றிய கெட்ட செய்தியைச் சொல்வதற்கு வருவான். 27அப்பொழுது அவனோடு பேச உன்னால் முடியும். நீ இனிமேலும் மௌனமாய் இருக்கமாட்டாய். இதுபோலவே நீ அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பாய். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for எசேக்கியேல் தீர்க்கதரிசியின் புத்தகம் 24